spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்திரைப்படக் காதல்!

திரைப்படக் காதல்!

- Advertisement -

65 ஆண்டுகளுக்கு முன்னர்……..பாகம் 1.

திரைப்பட நடிகர்களின் காதல் குலவல் கிசுகிசுச் செய்திகளை அறிந்து கொள்வதென்றால் சினிமா ரசிகர்களுக்குக் கொள்ளை ஆசை. ஆனால் முன்பு போல் திரைப்பட ஈடுபாடு ஆர்வம் இன்று இல்லாது குன்றிவிட்டதாலும் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் என்று அடையாளம் காட்ட முடியாத ஒருவித இடைவெளித் தேக்கத்தாலும் கிசுகிசுவின் மவுசும் சற்று அடங்கி விட்டதாகவே தோன்றுகிறது!

1952ல்…66 ஆண்டுகளுக்கு முன்னர் “இந்தியன் மூவி நியூஸ்” இதழை ஷா திரைப்பட நிறுவனப் படங்களுக்கான ஒரு கவர்ச்சிகரமான விளம்பர இதழாகத் தொடங்கியபோது, அதன் ஆசிரியராக இருந்த நான் தந்த சுவையான தகவல்கள், கதை, கட்டுரை, படங்கள் அனைவரையும் கவர்ந்தன. எனவே இ.மூ.நி.யை இல்லந்தோறும் இடம்பெற்ற இதழாகத் திகழச் செய்ய முடிந்தது! ”அப்படியா சேதி!” என்ற ஓர் அங்கத்தில் “அறிமுகம்” என்ற பெயரில் திரையுலகக் கிசுகிசுச் செய்திகளையும் தந்தேன்.

அந்தச் சமயம் ஷா திரைப்பட வெளியீடு அல்லாத பிற பட நிறுவனச் செய்திகளைச் சுவைபட வெளியிட “வேல்” என்ற இதழையும் பல ஆண்டுகள் நடத்தினேன். அதனை அடுத்து, ”மலேசியா மலர்,” “அலை ஓசை” இதழ்களையும் தொடர்ந்தேன். “சிங்கைச் சுடர்” என்ற இதழின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றினேன். இதெல்லாம் ஒரு புறம் இருக்க சென்னையில் இருந்து வெளிவந்த
“குண்டூசி,” பாசரசுவின் “கலை” (பாலு பிரதர்ஸ் நடத்திய “கலை” இதழ் அல்ல) போன்ற இதழ்களின் சிங்கப்பூர் நிருபராக உள்ளூரில் நிகழும் சினிமா, கலைச் செய்திகளையும் தந்து வந்தேன்.

சினிமாவை ஒரு கவர்ச்சி சாதனமாகவே நான் கருதி வந்தாலும் ஆன்மீக ஆய்வுகளிலும் அது பற்றிய அனைத்துலகக் கருத்தரங்குகளிலுமே அதிகமான ஈடுபாடு காட்டி வந்திருக்கிறேன். அண்மையில் அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்தும் ஆன்மீக நெறியே தமது இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தார்!

இனி சினிமாவுக்கே வருவோம்.

திரையில் காதல் கானம் பாடிக் களியாட்டம் போட்ட நடிகர்கள், அவர்களுக்காகப் பின்னணி பாடியவர்கள், படத்தை இயக்கியவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று கூடும் வாய்ப்பைப் பெறும்போது அந்தக் காட்சிகளை நினைகூர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை விவரித்து எழுதியிருக்கிறேன். அதில் ஒரு கட்டுரை “நவரசம்” என்ற மாத இதழில் வெளிவந்தது.

சிங்கப்பூரில் தமிழ் அச்சகம் நடத்தி வந்த நண்பர் மா. அழகப்பன் வெளியிட்ட ”நவரசம்” இதழில் “திரை உலகில் மலர்ந்த காதல்” என்ற தலைப்பில் ”கிரிதரன்” என்ற பெயரில் எழுதியிருந்தேன். இது வெளிவந்தது
1958 செப்டம்பர் இதழில். 66 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது என்றாலும் இன்றும் ரசிப்பதற்குரிய நிகழ்வு. அன்றைய புகழ்பெற்ற முன்னோடி எழுத்து ஜாம்பவான்கள் பைரோஜி நாராயணன், ஏ.பி.ராமன், சி.கோன், சி.வி.குப்புசாமி, ஜி.மனுவேல், கிருஷ்ணதாசன், முரு.சொ.நாச்சியப்பன், வல்லிக்கண்ணன் ஆகியோரும் இந்த இதழில் எழுதியிருந்தனர்.

இந்தக் கட்டுரையில் அன்றைய புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்கள் ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும் மென்மையான மெல்லிசைக் காதல் கானங்களால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தவர்கள்! இவர்கள் பின்னர் இல்லற வாழ்க்கையிலும் இணைந்தனர். தேன்நிலவைக் கழிக்க இவர்கள் சிங்கப்பூருக்கு வந்து பெங்கூலன் சாலை ஓட்டலில் தங்கி இருந்த போது பேட்டி கண்டு எழுதி இருக்கிறேன்.

ஏ.எம்.ராஜா-ஜிக்கி பாடிய சில மனம் கவர்ந்த மதுரமான கானங்கள் அவர்களின் மண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பெருக்கி இருக்கும்! இதனை 66 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்க முடிந்த முன்னோடியாக இன்று உங்கள் முன் வ(மு)ழங்குவதில் ஒரு மன நிறைவு! ராஜா-ஜிக்கி பாடிய பாடல்களைக் கேட்டீர்களா?

“களங்கமில்லாக் காதலிலே
காண்போம் இயற்கையெல்லாம்”
என்று “இல்லற ஜோதி”யிலும்

“அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே”
என ”மகேஸ்வரி”யிலும் தொடர்ந்து,

“மனமே நிறைந்த தெய்வமே….
துணையே இல்லாது நான்
பெருந்துயரால்
நலிந்து போனேன் உமது
மனமேவும் இன்பகீதம்
கனிந்தெனைக்
காண என்று வருமோ…”
என “ஆரவல்லி”யிலும்

“அன்பே எந்தன் முன்னாலே
ஆசை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே…”

என இவர்களின் இன்குரலில் நாயகன் நாயகி திரையில் மருவி மகிழ அதனைக் காணும் உள்ளங்கள் கிளுகிளுப்புக் கொள்ள … ஆஹா.. ம்..அந்த ரசனையெல்லாம் இன்று ஏது? ராஜாவைப் பேர் சொல்லியே ஜிக்கி பாடியிருக்கிறார்….

“அழகே நல் உருவான ராஜா
ஆனந்தமே நல்க வாராய்”

என்று ஜிக்கி பாடி இருக்கிறார்! விடுவாரா ராஜா? “கல்யாணம் பண்ணியும் பிர்மச்சாரி”யில் சவால் விடுகிறார்:

“சுட்டித்தனமாய்ப் பேசாதே
தாலி கட்டிவிட்டால்
வட்டியும் முதலுமாய்
வாங்காமல் விடுவேனா…”

படத்தின் கதைக்கு ஏற்ப எந்தப் பாத்திரத்திற்கோ, எந்தச் சூழலுக்கோ பாடப்பட்டிருந்த பாடல்கள் என்றாலும் பாடியவர்கள், நடித்தவர்களின், ஊடல், கூடல்களுக்கும் அவை பொருந்தி விடுகின்றன!

ஏ. எம். ராஜா-ஜிக்கியின் மெல்லிசைப் பாடல்கள் படங்களில் காதல் மன்னன் ஜெமினி கணேசன்- சாவித்திரிக்கு மிகப் பொருத்தமாக அமைந்தன! இந்த ஜோடிகள் படங்களில் லூட்டி அடித்துடன் வாழ்க்கையிலும் சடுகுடுப் போட்டி போட்டு எப்படியோ ஒருங்கிணைந்தனர். அதனையும் சற்றுக் கண்ணோட்டமிடுவோமே!

இதன் தொடர் நாளை வருகிறது. அதில் திரைப் படங்களின் தொடக்க காலம் முதல் நிகழ்ந்து வந்திருக்கும் உறவுகள், இணைப்புகள், தொடர்புகள், இல்லறப் பிணைப்புகளைப் பற்றிய சில கிசுக்சுக்களையும் அறிந்துகொள்ளலாம்! -தொடரும்!

– சிங்கப்பூர் சர்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe