யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்

  யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்:-
  தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
  தமிழில் – ராஜி ரகுநாதன்
  (‘இது நம் சனாதன தர்மம்’ என்ற நூலிலிருந்து)

  நம் நாட்டின் மிகப் பெரிய இதிகாச நூல் ஸ்ரீமத் ராமாயணம். இந்த தெய்வீக நூலில்
  எத்தனையோ உட்கருத்துகள் பொதிந்துள்ளன. உலகியல் கண்ணோட்டத்துடன், தர்மத்தின்
  பார்வையில், யக்ஞ பாவனையில், யோகத்தோடு இணைந்த பார்வையில், மந்திரக்
  குறிப்புகளில், வேதாந்த சிந்தனையில் ……இவ்விதம் பல வித கோணங்களில்
  ராமாயணத்தை தரிசித்து உபாசனை செய்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.

  எனவே தான் இதனை ‘கல்ப விருட்சமாக’ (தெலுங்கில்) தரிசித்து மகிழ்ந்தார்
  கவிசாம்ராட் விஸ்நாத சத்திய நாராயணா.

  ஒரு மனிதனுக்கு தர்மத்தோடு கூடிய கடமைகள் எத்தனையோ இருக்கலாம்.
  ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்
  தகுந்த முன்னுரிமை அளித்து அனைத்து கடமைகளையும் இணைத்துச் செய்யத் தெரிய
  வேண்டும். அப்படிச் செய்து காட்டிய பரிபூரண மனிதன் ஸ்ரீராமன்.

  ‘தனி மனித சுகத்தை விட தர்மம் சாஸ்வதமானது. தர்மத்திற்காக தன் சுகங்களைக் கூட
  தியாகம் செய்து தர்மத்தோடு கூடிய வாழ்க்கை வாழ வேண்டும்’ என்பது ஸ்ரீராமனின்
  வரலாறு கூறும் வாழ்வியல் போதனை.

  அடுத்து, யக்ஞத்தின் பார்வையில் நோக்கினால், ஸ்ரீராமன் யக்ஞ வடிவானவன்.
  ‘யக்னோ வை விஷ்ணு;’, ‘யக்னோ யக்ஞ பதிர் யஞ்வா’, ‘யஞ்யேச அச்யுத கோவிந்த’ –
  முதலிய சுருதி, ஸ்ம்ருதி வாக்கியங்கள் யக்ஞமே நாராயணின் உருவம் என்று
  பளிச்சிட்டு காட்டுகின்றன.

  ‘யங்ஞம்’ என்ற சொல்லுக்கு ‘தியாக மயமான செயல்’ என்பது முக்கிய அர்த்தம்.
  உலகின் நன்மைக்காக செய்யும் நற்செயல் யங்ஞம். உலகின் ஒவ்வொரு சக்தியையும்
  கட்டுப்படுத்தும் ஈஸ்வர சக்திகளே தேவதைகள். யக்யத்தின் வழியாக தேவதைகள்
  திருப்தி அடைகிறார்கள். அதன் மூலம் உலகிற்கு மழையும் பயிர்களும், உலகியலான
  பலன்களும், பல நன்மைகளும் கிட்டுகின்றன.

  இந்த யக்ய வட்டத்தை அனுசரித்து நடப்பதே தர்ம வாழ்க்கை வாழ்வதாகும்.

  உலகின் இயக்கத்திற்கு யக்ஞமே ஆதாரம். இயற்கை யக்ஞ மயமாக விளங்குகிறது. தன்
  சுய நலத்திற்காக நிரந்தரமாக இருக்கும் தர்மத்தின் நியமங்களை மீறுபவர்கள் ‘யக்ஞ
  துரோகிகள்’. இவர்களையே அரக்கர்கள் என்பார்கள்.

  ‘யக்ஞ த்ரோஹா:’ என்று வேதம் இவர்களுக்குப் பெயரிட்டுள்ளது. ராவணன்,
  கும்பகர்ணன் போன்றோர் யக்ஞ துரோகிகள். தனதல்லாத செல்வத்தை தன்னுடையதாக்கிக்
  கொள்ளும் துர்புத்தி கொண்ட அரக்கன் – தனக்கிருக்கும் பலத்தினால் திமிர்
  பிடித்து உலக மக்களை துன்புறுத்துகிறான். உலகை காக்கும் சத்துவ குணமுள்ள
  தேவதைகளை அவரவர் வேலையைச் செய்ய விட மாட்டான்.

  ராவணன் போன்றோர் தேவதைகளைத் துன்புறுத்தியதன் உட்பொருள் இதுவே. மேலும்
  தேவதைகளைத் தன் சுய நலத்திற்கேற்ப பயன்படுத்திக் கொண்டான். அனைத்து
  தேவதைகளுக்கும் உலகின் நன்மை கருதி சக்தியை அளித்த பரமேஸ்வரனான ஸ்ரீமகா
  விஷ்ணு, தேவதைகளைக் காப்பாற்றுவதற்காகவும் யக்ஞ தர்மத்தை ரட்சிப்பதற்காகவும்
  அவதரித்தார்.

  யக்ஞத்தில் ‘பிரஜாபத்ய புருஷன்’ தசரதருக்கு அளித்த பாயசத்தில் பிரவேசித்த
  விஷ்ணுவின் தேஜஸ் ஸ்ரீராமனாகவும், அவனுடைய சகோதரர்களாகவும் அவதரித்தது.
  பரிபூரண கலைகளுடன் ராமனும், அம்ஸங்களுடன் லட்சுமணன், பரதன், சத்ருக்னன்
  அவதரித்தனர். யக்ஞத்தின் மூலம் பிறந்த ஸ்ரீராமசந்திரன், யக்ஞத்தைக்
  காப்பதற்காக விசுவாமித்திரரின் பின் சென்றான். யக்ஞ துரோகிகளை அழிப்பது என்ற
  ‘அவதார காரியம்’, தாடகை, சுபாஹு வதையுடனும், மாரீசனை தண்டித்துடனும்
  ஆரம்பமானது.

  யக்ஞத்திற்காக பூமியை உழுத போது கிடைத்த ‘அயோநிஜை’ (கர்பத்திலிருந்து
  பிறக்காதவள்) சீதா தேவி, ஜனகர் செய்த புண்ணியத்திற்கு கிடைத்த பலன். சாட்சாத்
  வேத ஸ்வரூபிணி சீதை.

  ‘தர்மம்’ என்பது வேத மயமானது. வேதம், யக்னேஸ்வரனுக்காக தோன்றிய யக்ஞ சக்தி.
  எனவேதான் யக்னேஸ்வரனான ஸ்ரீராமனைக் கை பிடித்தது. காயத்ரி மந்திர ரிஷியான
  விசுவாமித்திரர், வேத மாதாவுடன் யக்ஞத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக
  மிதிலையைச் சென்றடைந்து ஸ்ரீசீதாராம கல்யாண வைபவத்திற்குக் காரணமானார். யக்ஞமே
  ஸ்ரீராமர். வேதமே சீதா.

  வேதத்தையும் யக்ஞத்தையும் தம் வாழ்க்கையாகவே வாழ்ந்து வந்த ரிஷிகளனைவரும்
  காடுகளில் யக்ஞ துரோகிகளால் துன்புறுத்தப்படுகையில் ‘வனவாசம்’ என்ற சாக்கில்
  வேத சக்தியான ஜானகி தேவியுடன் வனத்தை வந்தடைந்த ராமபத்ரன் ரிஷிகளுக்கு
  அபயமளித்தான். காப்பதாக உறுதி கூறினான். காத்தருளினான். தாடகையின்
  வதத்துடன் ஆரம்பமான உலகை இம்சிப்பவர்களுக்கான தண்டனை ராவண வதத்துடன்
  பூர்த்தியானது.

  இந்த மகா காரியத்தில் – யக்ஜத்தில் பூஜையை ஏற்கும் தேவதைகளே, நாராயணன் ராமனாக
  அவதரித்த போது அவனுடன் வந்தனர். சூரியனின் அம்சத்துடன் சுக்ரீவனும்,
  பிரம்மாவின் அம்சத்துடன் ஜாம்பவானும், அஸ்வினி தேவதைகளின் அம்சத்துடன்
  மைந்தனும், த்விவிதனும், விஸ்வ கர்மாவின் அம்சத்துடன் நீலனும், ருத்ரனின்
  அம்சத்துடன் ஹநுமானும் …. இவ்விதம் தேவதைகள் அனைவருடனும் ஒன்று சேர்ந்து,
  சகல தேவதைகளின் ஒரே வடிவான யக்ஜ பதியான ஸ்ரீராமன் தர்மத்தைக் காத்தருளினான்.

  உண்மையில் தேவதைகளின் உதவி ராமனுக்குத் தேவையில்லை தான். ஆனால் தமக்காக மனித
  வடிவமெடுத்து வந்த மகா விஷ்ணுவான ராமனுடன் தாங்களும் சஞ்சரிக்க வேண்டுமென்ற
  கடமை உணர்வால், பிரம்மாவின் உத்தரவுப்படி, தேவதைகள் அம்ச ரூபத்துடன் வானரர்
  முதலான வீரர்களாக இறங்கி வந்தனர்.

  ரிஷிகள், தேவதைகள், யக்ஞம் என்னும் தர்மம், யக்ஜ துரோகிகள் … இவர்களின்
  கதையே ராம கதை.

  யக்ஞத்தை விலக்கி விட்டு வாழ்பவர்களை ‘அகாயு:’ (பாவ வாழ்க்கை வாழ்பவன்),
  ‘இந்த்ரியாராம:’ ( வெறும் புலனின்பத்திற்காக வாழ்பவன்), ‘வாழ்ந்தும் வீணன்’
  என்று ஸ்ரீகிருஷ்ணர் நிந்திக்கிறார் பகவத் கீதையில்.

  உலக நன்மைக்காக நடைபெறும் தர்மச் செயல்கள் என்னும் ஏற்பாட்டைக் காப்பாற்றும்
  தர்ம வடிவமே ஸ்ரீ ராமன். தன் சுய நலத்திற்காக பல பேரிடம் திருடி இம்சிக்கும்
  அரக்க குலத்தை நிர்மூலமாக்கி யக்ஞ தத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று ராம
  பத்ரனிடம் பிரார்த்தனை செய்வோம்!

  சந்திரனைப் போல் நிறைந்த கலைகளுடன் ஒளிர்வதோடல்லாமல் பார்ப்பவர்களையும்
  நினைப்பவர்களையும் அமைதியுறச் செய்யும் அமுத குணம் கொண்டவனாதலால் அவன்
  ‘ராமசந்திரன்’. பத்ரத்தையம், க்ஷேமத்தையும் அளிப்பதற்காக அவதரித்து, அபத்ரம்
  என்ற பயத்தைப் போக்கி ரட்சிக்கும் அவதாரம் ஆதலால் ‘ராம பத்ரன்’. வீரம்,
  பிரசன்னம் இரண்டும் ஒன்று கலந்த சகல நற்குண ‘குணாபிராமன்’ ஸ்ரீராமன்.

  ‘ராமா’ என்ற சொல்லுக்கு ஆனந்த வடிவானவன் என்று பொருள்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: