spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

- Advertisement -

மிழ்த் திரைப்படங்களின் மூலம் வெகுஜன அளவில் பரவலாக அறியப்பட்ட திரைப்பாடலாசிரியர் வைரமுத்து. சமீபத்தில் இராஜபாளையத்தில் இவர் ஆற்றிய “தமிழை ஆண்டாள்” என்ற உரையின் கட்டுரை வடிவம் தினமணியில் வந்துள்ளது. வை.மு. இதில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பண்பாடுள்ள தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவருக்கும் அருவருப்பையும் கோபத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.  ஆனால், அவர் அப்படி எழுதியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரது “பாரம்பரியம்” அப்படி. ஆண்டாளின் பாசுர வரிகளைப் போட்டு “தெருப்பாவை” என்று வக்கிரமான பாலியல் கிளுகிளுப்புகளோடு எழுதிய அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் அடிவருடியாகவும் துதிபாடியாகவும் தனது வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ள வணிக எழுத்தாளரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தங்கள் வழக்கமான பாணியில் சொன்னதை, தற்போது தான் அவசரமாக அணியத் துடிக்கும் இலக்கிய மோஸ்தருடன் கலந்து வை.மு. “கட்டுரை”க்கிறார். அதுதான் வித்தியாசம்.

‘திருமால் வழிபாடு தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு இருக்கிறது, அடியார்களிடத்தே சாதிபேதம் கிடையாது’ என்று அதில் வை.மு. சரியாக சொல்லியிருக்கும் சில விஷயங்கள் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டவை தான்.  ஆனால் அவற்றையும் தனக்கேயுரிய திரிபுகளோடும் அரைகுறைப் புரிதல்களோடும் தான் அவர் எழுதுகிறார். அதைத் தவிர்த்து இந்தக் கட்டுரை முழுவதுமாகவே அபத்தங்களும் திரிபுகளும் விஷத்தன்மை கொண்ட கருத்தாக்கங்களும் நிறைந்தது.

ஆண்டாளின் பிறப்பையும் குலத்தையும் குறித்து “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” என்ற ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியரின் உளறலை ஏதோ ஒரு தீர்மானமான வரலாற்று முடிபு போல மரியாதையுடன் வை.மு கூறுவது காலனிய அடிமைப்புத்தி எந்த அளவுக்கு அவரது திராவிட சிந்தனையில் ஊறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு முன்பே தோழர் டி.செல்வராஜ் என்ற மூன்றாந்தர இடதுசாரி எழுத்தாளர் இதே கருத்தை வைத்து ‘நோன்பு’ என்ற மலம்தோய்ந்த சிறுகதையை எழுதியிருக்கிறார். 2012-13ம் கல்வியாண்டில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழ் பாடத்திட்டத்தில் இந்தச்  சிறுகதை சேர்க்கப்பட சில இந்து விரோத விஷமிகளால் திட்டமிட்டு முயற்சி செய்யப்பட்டது. அப்போது அதை எதிர்த்து பேரா. என்.சுப்பிரமணியம் எழுதிய ஆண்டாள் மீது வக்கிர அவதூறு என்ற கட்டுரை தமிழ்ஹிந்துவில் வெளிவந்தது. பின்பு தொடர் எதிர்ப்புகளால், அந்த சிறுகதை சேர்க்கப் படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. பல்கலைக் கழகம் கழித்து ஒதுக்கிய அதே கருத்தைத் தான் மறுசுழற்சி செய்து இப்போது நீட்டி முழக்கி வைரமுத்து பேசியிருக்கிறார்.

“அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்” என்று தனது கூற்றுக்கான “வாதங்களை” அடுக்குகிறார் வை.மு. இந்த வாதங்கள் அனைத்துமே அபத்தமானவை.

ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. எந்த ஒரு கறாரான ஆய்வாளரும் இந்த அகச்சான்றையே மிக முக்கியமானதாகக் கொள்வார். அவள் பெரியாழ்வாரால் கண்டெடுத்து வளர்க்கப் பட்டவள் என்பது ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தில் கூடுதலாகக் கூறப்படும் செய்தி. ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் அது இரண்டாம் நிலைத் தரவு (secondary source) மட்டுமே. ஆயினும், ஆண்டாளின் அருளிச்செயல்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் மரபு அவளது சரித்திரமாகக் குறிப்பிடும் செய்திகள் ஆய்வுநோக்கிலும் மதிப்புடனேயே அணுகப்பட வேண்டும். அவற்றையெல்லாம் ஒரு “சூழ்ச்சி” என்பதாகக் கருதும் கண்ணோட்டம் காழ்ப்புணர்வன்றி வேறில்லை.   ஒரு பேச்சுக்காக, வைணவ ஆச்சாரியார்கள் நினைத்திருந்தால் ஆண்டாளுக்கு ஒரு குலத்தைக் கற்பித்து இந்த சரித்திரத்தை எழுதியிருக்க முடியாதா என்ன? அவ்வாறு இல்லை என்பதே ஸ்ரீஆண்டாளின் திருஅவதாரத்தின் தன்மையினை உள்ளதை உள்ளபடி பதிவுசெய்திருக்கும் உண்மைத்தன்மையைக் காட்டுகிறது. “குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை ஸ்ரீதனமாகக் கொடுத்தார்” என்ற செய்தியை கோயிலொழுகில் ஆவணப் படுத்தியிருப்பதைச் சுட்டிவிட்டு, அதே வீச்சில் ஆண்டாள் விஷயத்தில் மரபை முற்றிலுமாக மறுதலித்து  “குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள” என்றெல்லாம் இஷ்டத்துக்கு ஊகங்களை வளர்த்துச் செல்வது ஆய்வு முறைமைக்கு முற்றிலும் விரோதமானது.

ஸ்ரீரங்கம் கோயிலில் தேவதாசிகளுக்குரிய இடமும், பல காலகட்டங்களில் தேவதாசிகள் அளித்த பங்களிப்புகளும் ஊர், பெயர், கொடைகள் குறித்த விவரங்களுடன் வரலாற்றில் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் தொகுத்துள்ள ‘கோயிலொழுகு’ நூலின் பிந்தைய பாகங்களில் இவற்றைக் கொடுத்திருக்கிறார். மேலும், 8-9-10ம் நூற்றாண்டுகள் என்ற அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவதாசி என்ற பட்டம் மிகுந்த கௌரவத்திற்கும், சமூக அந்தஸ்திற்கும் உரிய ஒன்றாக இருந்தது என்பதைக் கூட வைரமுத்து அறிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அவரது கீழ்த்தரக் கற்பனைகளில் உலவும் ‘தாசி’ போன்றதல்ல அது. வழிபாட்டுக்காகக் கோயிலுக்குப் போய்வந்து கொண்டிருக்கும் பெண்களை ‘தாசி’ என்று விளித்து கேலிசெய்ய வேண்டும் என்று பொறுக்கித்தனமான அறிவுரையை வழங்கிய ஈவெராவின் சீடரான அவருக்கு இந்த நுட்பமான வேறுபாடெல்லாம் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால், ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு  “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அத்தகைய நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்த தினமணி & ராம்கோ குழுமங்களுக்கு புத்தி எங்கே போயிற்று? தமிழ்நாட்டில் ஆண்டாளைக் குறித்துப் பேச வேறு நல்ல அறிஞர்களா கிடைக்கவில்லை?

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து சில அரைகுறை அறிவுஜீவிகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. சில வருடங்கள் முன்பு 2009ல் எழுத்தாளர் பா.ராகவன் ‘ஆண்டாளின் காமச்சித்தரிப்பு ஒரு soft porn’ என்ற ரீதியில் எழுதினார். அதற்கு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய காட்டமான எதிர்வினை தமிழ்ஹிந்துவில் வெளிவந்தது. 2010ல் ஆபாச பொய்யர் கமல்ஹாசன் வரலட்சுமி விரதத்தை அவதூறு செய்து தான் எழுதிய திரைப்பாடலில் ஆண்டாளின் பாசுரங்களை இதேபோல மலினப்படுத்தியிருந்தார். அப்போதும் அதற்கான எதிர்வினை அ.நீ எழுதி வெளிவந்தது. பின்பு விழிப்புணர்வு கொண்ட இந்துமுன்னணி செயல்வீரரின்  பாராட்டுக்குரிய சமயோசித முயற்சியால் அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இப்போது, இந்த 2018ம் ஆண்டு அதே அபத்தக் கருத்தை “சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்” என்று  வைரமுத்து எழுதிக் கொண்டு போகிறார்.

சாரமில்லாமல் அடுக்கு மொழிகளையும் எதுகை மோனைகளையும் அலங்கார வார்த்தைகளையும் பயன்படுத்துவது தான் தமிழ்ப் புலமை என்று நம்பவைக்கப் பட்டு அதிலிருந்து வெளிவராத ‘மந்தை’ மனநிலையிலேயே தமிழ்நாட்டின் பெரும்பாலான வெகுஜன மக்கள் உள்ளனர்.  அத்தகைய “ரசனை”க்குத் தீனிபோடும் வகையிலேயே வைரமுத்துவின் அனைத்து உரைகளும் (இந்தக் கட்டுரை உட்பட) சமைக்கப் படுகின்றன.  “பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே” என்ற சிலேடையில் உள்ள ஆபாசத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் அதையும் கைதட்டி ரசிக்கும் பரிதாபகரமான நிலையிலேயே  தமிழ் மக்கள்  உள்ளனர் என்பது தான் வேதனை.

ஆண்டாளின் பாசுரங்களில் உள்ளது கட்டற்ற பெண்மொழியின் வீச்சு என்பதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்துவந்தது போல சொல்வதே வேடிக்கையானது. உண்மையில் ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தில் முன்பே சொல்லிவிட்ட விஷயம் தான் அது. ‘குத்துவிளக்கெரிய’ போன்ற பாசுரங்களுக்கான வியாக்யானங்களில், அதன் சிருங்கார ரசம் சார்ந்த பொருள் ஒருபோதும் மறைக்கப்படுவதோ விலக்கப்படுவதோ இல்லை. முதல்தளத்தில் அது கூறப்பட்டு, பின்பு அதன் தத்வார்த்தமான உள்ளுறைப் பொருள் உபதேசிக்கப் படுகிறது. நாச்சியார் திருமொழி குறித்த எனது கட்டுரையில் இதனை விரிவாக எழுதியிருக்கிறேன். அதிலிருந்து ஒரு ரசமான பத்தியை மட்டும் கீழே தருகிறேன் –

“மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகளல்லர். முலையெழுந்தார் கேட்க வேணும்” என்கிறது வியாக்யானம். அதாவது, மோவாயில் முடி வளர்ந்த, முரட்டாண்மை (machismo) கொண்டவர்கள் நாச்சியார் திருமொழியைக் கேட்பதற்குத் தகுதியில்லாதர்கள். “முலை எழுந்தவர்களே”கேட்க வேண்டும். அதாவது ஆண், பெண் என்று சொல்லாமல், இந்த அருளிச்செயலைக் கற்பதற்கு எப்பேர்ப்பட்ட மனநிலை வேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாக வியாக்யானம் கூறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டாளை சரியாக ஆன்மீகமாக உணர்வுபூர்மாக அறிந்து கொண்ட அபூர்வமான நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர் காலஞ்சென்ற கவிஞர் சாதாரா மாலதி. பெண்மொழியையும் பெண்ணியக் கருத்தாக்கங்களையும் நன்கறிந்த அவர் தனது “உயர்பாவை” என்ற நூலில் ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானகாரர்கள் எந்த அளவுக்கு ஆழமாகவும் நுட்பமாகவும் ஆண்டாள் என்ற மகத்தான கவிதாயினியை விமர்சித்து அனுபவித்து ரசித்துள்ளார்கள் என்று சிலிர்ப்புடனும் வியப்புடனும் பதிவு செய்கிறார். அத்தகைய  நுட்பமான இலக்கிய விமர்சனங்களுக்குப் பிறகும், வைரமுத்து கூறும் அரைவேக்காட்டுத் தனமான, முதிர்ச்சியற்ற, தவறான கருத்துக்களே பொதுத்தளத்தில் முன்னிறுத்தப் படுவது நமது சூழலின் துரதிர்ஷ்டம். வேறென்ன சொல்ல?

“சமண பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம்” என்று வைரமுத்து கூறும் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ரிக்வேதப் பாடல்களிலேயே சிருஷ்டியின் விதையாக, பிரபஞ்ச இயக்கத்தின் விசையாக காமம் கூறப்படுகிறது. வேறுசில வேதப் பாடல்களில் கலவியின் வர்ணனை கூட உள்ளது. உபநிஷதங்களில் கலவி தத்துவம் சார்ந்த குறியீடாக வருகிறது. தர்மம், அர்த்தம், காமம் என்று மூன்று பேறுகளில் (புருஷார்த்தம்) ஒன்றாகவே காமத்தை வேதமரபு வரையறுக்கிறது. “உயிர்களில், தர்மத்திற்கு விரோதமில்லாத காமமாக நானே இருக்கிறேன்” என்று கீதையில் பகவான் கூறுகிறார். தொன்மையான நூலான பரத முனிவரின் நாட்ய சாஸ்திரம், ரசங்களிலேயே மிக உயர்ந்ததாக சிருங்காரத்தை முன்வைக்கிறது. காளிதாசரின் காவியங்களும், ஹரிவம்சம், ஸ்ரீமத்பாகவதம் போன்ற புராணங்களில் வரும் கண்ணன் கோபியர் காதல் வர்ணனைகளும் இதைத் தொடர்ந்து வருகின்றன. சங்க இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்களும் இது சார்ந்தவையே. எனவே, ஆண்டாளுக்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வேதநெறி சார்ந்த இந்து மரபில் தெய்வீகக் காதல் உணர்வுகள் தொடர்ந்து ஒரு பேசுபெருளாக இருந்து வந்துள்ளன. ஆண்டாளின் பாசுரங்கள் இதன் இயல்பான நீட்சியே அன்றி, எந்த விதத்திலும் சமண, பௌத்த சமயங்களுக்கான எதிர்வினை அல்ல.


உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்.

ஏற்கனவே திருக்குறளை திரிபுபடுத்த முயன்று அதில் சிறு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மிச்சமிருப்பது தமிழ் பக்தி இலக்கியங்களையும் கூட அவற்றின் தெய்வீகம் சார்ந்த மற்றும் புனிதமான பின்னணியிலிருந்து பிரித்தெடுப்பது. அதாவது அவற்றின் இந்துத்தன்மையை மறுதலித்து, வெறும் தமிழ் மொழியழகு சார்நதவையாக மட்டுமே முன்வைப்பது. காலப்போக்கில் இதுவே நிலைபெற்று அவற்றின் ஆன்மீக உயிர்த்துடிப்பு முற்றிலுமாக அடக்கப்பட்டு விடும். அப்போது அவை ஜீவனற்று ‘அருங்காட்சியகப் பொருட்கள் போல ஆகிவிடும். அதுவே இவர்களது எண்ணமும் விருப்பமும். “Now let us talk about the Erotic Tamil Poetess Andal of the 8th century” (எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் பாலுணர்வுக் கவிஞர் ஆண்டாளைப் பற்றிப் பேசுவோம்) என்று ஒரு பல்கலைக்கழக பேராசியர் சகஜமாகப் பேசக்கூடிய நிலையை நோக்கிச் செல்வது தான் குறிக்கோள். அண்மையில் ஒரு மாநாட்டில் Dehinduization of Tamil Literature என்று இந்த விஷயத்தைக் குறித்துத் தான் நான் உரையாற்றினேன். இந்தக் கருத்தாக்கம் எப்படி இயங்குகிறதென்று பார்ப்போம்.

தமிழ்ப்பண்பாட்டில் தெய்வப்புலவர் இயற்றிய உத்தரவேதம் (பின்னால் தோன்றிய வேதம்) என்று புனிதநூலாகக் கருதப்பட்ட ஒரு தர்மசாஸ்திரம் திருக்குறள். சைவர் வைணவர் சமணர் என இந்திய சமயங்களின் நெறிகளைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அதைப் போற்றினர். பரிமேலழகர் உட்பட எல்லா உரையாசிரியர்களும் அவ்வாறே அதைக் கண்டுள்ளனர். ஆனால், திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் தொடர் பிரசாரங்கள் மூலமாக பல்வேறு குறட்பாக்களுக்கு வினோதமான நகைப்புக்குரிய விளக்கங்களை அளித்து, இப்போது அது ஒரு “மதச்சார்பற்ற, பொதுவுடைமை, பகுத்தறிவு கொள்கைகளைக் கொண்ட” நூல் என்பதாகவே அறியப்படுகிறது. இவ்விஷயத்தில் வையாபுரிப்பிள்ளை போன்ற பெரும் தமிழறிஞர்களின் கருத்துக்கள் முற்றிலுமாகப் பின்னடைந்து திருக்குறளை “சுத்திகரித்து” வெற்றிகரமாக நீர்த்துப் போகவும் வைத்துவிட்டனர்.

கம்பராமாயணத்தைப் பொறுத்த வரையில் முதலில் “தீ பரவட்டும்” என்று நூல் எழுதி அதைக் கொளுத்தி அழிக்கவேண்டும் என்றார்கள். அது எடுபடாது என்று தெரிந்ததும், அதனை மலினப்படுத்தி கம்பரசம் என்று நூல்கள் எழுதினார்கள். அதற்குப் பிறகும் அது அழியாமல் நிற்பதைக் கண்டு இப்போது அதிலுள்ள அறம், ராமனின் அவதார தத்துவம், வேதநெறி சார்ந்த கோட்பாடுகள் ஆகிய உயிர்நாடியான விஷயங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு “தமிழுக்காக” அதைப் படிக்க வேண்டும் என்று வந்து நிற்கிறது. அதாவது கம்பனின் பெருமை என்பது நற்குணக்கடலான ஸ்ரீராமனின் சரிதத்தில் மூழ்கி ஈடுபட்டு அதைப் பாடியது அல்ல, மாறாக ஆயிரக்கணக்கான விதவிதமான தமிழ்ச் சொற்களை அழகாக உபயோகித்து யாப்பிலக்கணம் தவறாமல் விருத்தப்பாடல்கள் எழுதியிருக்கிறானே அதுதான் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். உயிரைக் கொன்றுவிட்டு வெறும் எலும்புக்கூடை வைத்துக் கொண்டாடுவது போன்றது இது.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பே அதைத் தான் குறிக்கிறது. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று எம்பெருமானுடைய திருவடிகளையே ஆட்சி செய்தவளுக்கு  தமிழ் என்ற மொழியிலே கவித்துவ சக்தியை வெளிப்படுத்துவது தான் பெரிய விஷயமா? மிகச் சாதாரண விஷயம் அல்லவா அது? ஆனால் இவர்களைப் பொறுத்தவரை, ஆண்டாளுடைய தெய்வீகத்தையும் பகவத்விஷய அனுபூதியையும் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு அதிலுள்ள தமிழ்க் கவிதை என்ற வெளித்தோற்றத்தை மட்டுமே பிரித்தெடுத்து கொண்டாட வேண்டும் !  இந்தப்பாணியில் தான் சைவத்திருமுறைகளையும் அவற்றின் தெய்வீகப் பின்னணியிலிருந்து பிய்த்தெடுத்து “தமிழ்” அடையாளங்களாக மட்டும் முன்னிறுத்த முயல்கிறார்கள்.  இதற்கு முன்பு திருமூலரைப் பற்றியும் வைரமுத்து இவ்வாறு “கட்டுரை”யாற்றியிருக்கிறாராம். அதைப் பார்த்தால் அங்கும் இதற்கான தடயங்கள் கட்டாயம் கிடைக்கக்கூடும்.

இதே கட்டுரையில் “கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற “மெய்ஞ்ஞானம்’ வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி (வைதீக மதம்) இறங்கி வந்தது” என்கிறார் வைரமுத்து. இந்த வரியில் உள்ள பாமரத்தனமான அறிவீனம் ஒரு சாதாரண வாசகனுக்குக் கூடப் புரியும்.  வேத உபநிஷதங்களிலும், அதைத் தொடர்ந்து கீதையிலும்  மீண்டும் மீண்டும் கூறப்படுவது மானுடம், தெய்வீகம், இயற்கை, பிரபஞ்சம் இவை அனைத்திற்கும் இடையே உள்ள உறவுப் பிணைப்பன்றி வேறென்ன?  “யாகம் – யக்ஞம் – தவம் – வேள்வி – விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் – காருண்யம் – சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது” என்று இதற்கு முந்தைய வரியில் வை.மு எழுதுவது தான் இன்னும் பெரிய வேடிக்கை. இதிலே இவர் முதலில் குறிப்பிடும் யாகம், யக்ஞம், தவம், வேள்வி இவை எல்லாம் மனிதர்களைச் சார்ந்தது அல்லாமல் வேற்றுக்கிரக வாசிகளைச் சார்ந்ததா என்ன?  மேலும், வாத்சல்யம் போன்ற பகவானுடைய கல்யாண குணங்கள் எல்லாம் ஏதோ திடீரென்று எட்டாம் நூற்றாண்டில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டவையா? வேத உபநிஷதங்களே அவற்றுக்கு மூலம் என்பதை ஆண்டாள் உட்பட சகல ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்த அடிப்படை விஷயம் பற்றிய புரிதல் கூட இந்த நபரிடம் இல்லை.

வைரமுத்து போன்ற வெகுஜன பிராபல்யம் கொண்டவர்கள் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து பேசுவதில் உள்ள அபாயம் என்னவென்றால், அவை  ஊடகங்கள் மூலம் மிகப் பரவலாக மக்களைச் சென்றடைந்து அவர்களது மனதில் குழப்பத்தை விளைவிக்கும் என்பது தான். எனவே, இத்தகைய திரிபுவாதங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் இந்து அறிஞர்கள், சைவ வைணவப் பெரியோர்கள் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இதற்கான மறுப்பையும், எதிர்வினையையும் தெரிவிக்க வேண்டும். அது அவர்களது தார்மீகக் கடமையும் ஆகிறது. இதுவே நான் அவர்களுக்கு பணிவன்புடன் விடுக்கும் வேண்டுகோள்.

கட்டுரை: ஜடாயு

மூலம்: தமிழ் ஹிந்து

1 COMMENT

  1. ஆண்டாளு என்று ஏராளமான பெண்குழந்தைகளுக்கு தெலுங்குநாட்டில் பெயர் சூட்டி வருகிறார்கள் பல நூற்றாண்டுகளாக. இப்படி தென்னிந்தியா முழுவதையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டார் இந்த மஹாநுபாவன்! பெரிய சாதனை தான். ஈ. வே. ராவின் அத்யந்த சிஷ்யன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe