குறைந்து வருகிறது டிஜிட்டல் பண பரிவர்த்தனை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வங்கிகள் மூலம் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு இருந்ததால் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இதனால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீண்டும் சரிந்து வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.பி சவுத்ரி மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.71.27 கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருந்தது. அது நவம்பர் மாதத்தில் ரூ.83.48 கோடியாக அதிகரித்தது. டிசம்பர் மாதத்தில் இதன் மதிப்பு வேகமாக உயர்ந்து ரூ.123.46 கோடியானது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை ரூ.114.96 கோடியாக இருந்தது. இந்த மதிப்பு பிப்ரவரி மாதத்தில் ரூ.101.18 கோடியாகக் குறைந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் மீண்டும் 119.07 கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை ரூ.118.01 கோடியாகக் குறைந்தது. மே மாதத்தில் 111.45 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, 2014 ஜூலையில், அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: