ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

புது தில்லி:

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

370 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 7.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. அதுபோல், 1400 கோடி எண்ணிக்கை அளவில் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியில் விடப்பட்டன. இந்நிலையில், நூறு கோடி எண்ணிக்கை அளவில் ரூ.200 அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அது விரைவில் சுற்றுக்கு விடப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக பல ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 தான் தாராளமாகக் கிடைத்ததே தவிர, ரூ. 2 ஆயிரம் அதிகம் தென்படவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ரூ.2 ஆயிரம் அதிகம் பதுக்கியோர் பலர், வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டு வந்தனர். இந்நிலையில், ரூ.2 ஆயிரம் அச்சிடுவதை நிறுத்திவிடப் போவதாக வந்த செய்திகள், மீண்டும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக்கியது போல் ஆகிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் பதில் தேவை எனக் கேட்டனர்.

இதனிடையில், செய்தி ஏஜென்சிகள் தகவல் படி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தவில்லை என்றும், தற்போதைய ரூ.200 புழக்கத்தில் விட அதிக அளவில் தேவைப்படுவதால், மைசூர் அச்சகத்தில் அது அச்சிடப் படுவதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: