கோரக்பூர் மருத்துவமனையில் கோரம்: ஆக்சிஜன் விநியோகமின்றி 63 குழந்தைகள் உயிரிழப்பு?


கோரக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 5 நாளில் குழந்தைகள் உள்பட 63 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அரசு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணத்தால் உயிரிழப்பு என்ற தகவலை மறுத்துள்ளது.

உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மாவட்டத்தில் பெரிய மருத்துவமனை இது. இங்கே முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டுச் சென்ற இரு நாட்களில், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட 30 குழந்தைகள் பலியான நிலையில், கடந்த சில மணி நேரத்தில் மேலும் சில குழந்தைகள் பலியாகின. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், அதிகபட்சமாக ஒரே நாளில் 23 குழந்தைகள் பலியானதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பெற்று வந்த 11 வயது குழந்தை இறந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

இதை அடுத்து உ.பி. அமைச்சர்கள் ஆசுதோஷ் டாண்டன், சித்தார்த் நாத் சிங் ஆகியோர் பிஆர்டி மருத்துவக் கல்லூரி பொறுப்பாளர்களுடன் பேச்சு நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஆசுதோஷ் டாண்டன், “ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது என்ற பிரச்னை காரணமாக யாரும் இறக்கவில்லை. சம்பவம் குறித்து கோரக்பூர் ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அறிக்கை கிடைக்கும் என்றார். மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங், சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. அந்த மருத்துவமனைக்கு கடந்த 9ம் தேதி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை” என்றார்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் 3 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 30 வருடங்களில், அங்கே ஜப்பான் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட சில இனமறியாக் காய்ச்சல் காரணமாக 50 ஆயிரம் குழந்தைகள் வரை இறந்துள்ளனர். மாநிலத்தை இத்தனை வருடங்கள் ஆட்சி செய்தவர்கள், இந்த மருத்துவமனையைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்ததால்தான் இவ்வளவு இறப்பு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மூளைக் காய்ச்சல் பிரிவில் பெரும்பான்மையான குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு, மருத்துவமனை குறித்து இதுவரை ஆட்சி செய்தவர்கள் போதிய அக்கறை செலுத்தாதே காரணம். கொசுக்களால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு போதிய நிதி, இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த மே மாதம், மருத்துவ வார்டுகளை பராமரித்தல், ஐசியு, மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றுக்காக ரூ.37 கோடி கேட்டு மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதனை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் நிதி இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கூறுகையில், “ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் குறித்த வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த சரியான விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மாட்டார்கள். மூளைக் காய்ச்சல் சிகிச்சைக்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை தவிர்த்து நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் கடந்த காலங்களில் பிரச்னை வரும் போது மட்டும் அனைத்து வசதிகளும் செய்து தருகின்றனர். ஆனால் எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.

இந்நிலையில் உபி., முதல்வரும், சுகாதார அமைச்சரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மனீஷ் திவாரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வளவு பேர் இறப்புக்குக் காரணம் ஆன முதல்வரும் சுகாதார அமைச்சரும் பதவி விலகவேண்டும் என்றார்.

அரசு தனது கடமையில் இருந்து தவறிச் செல்கிறது. எனவேதான் இதனை எதிர்க்கட்சியினர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

இதனிடையே தனியார் வேதிப்பொருள் நிறுவனம் ஒன்று 200 க்கும் அதிகமான ஆக்சிஸன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு மனிதநேய அடிப்படையில் இன்று வழங்கியுள்ளது. மேலும் நிகழ்வின் தீவிரம் உணரப்பட்ட இன்று வேறு பல இடங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.

ஒரு படுக்கையில் இரு நோயாளிகளைப் படுக்க வைக்க மருத்துவர்கள் கட்டாயப் படுத்தினர் என்றும், தேவையான உணவுகளை வெளியில் இருந்து வாங்கி வர நேர்ந்ததாகவும் நோயாளிகள் சிலர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ., முதல்வர்களை விலைக்கு வாங்குகிறது. ஆனால் அதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். மேலும் மருத்துவமனைக்கு தனது கட்சியின் சார்பில் 3 பேரை அனுப்பி, நிலவரத்தை தனக்கு உடனே அளிக்குமாறு கூறியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு நேரவில்லை என்று தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், மருத்துவக் கல்லூரியில் திரவ ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது என்று தெரிவித்துள்ள நிர்வாக, ஆக்சிஜன் விநியோகிப்பவர்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் வரை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளது.

புஷ்பா சேல்ஸ் நிறுவனம், பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இதுவரை அனுப்பிய சிலிண்டர்களுக்கு பணம் தராததால், ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், உதவியாளர்களுக்கே கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் சரிவர அளிக்கப்படவில்லை என்று டெலிகிராப் பத்திரிகைக்கு மருத்துவமனையில் உள்ள சிலர் தகவல் அளித்துள்ளனர்.

வெவ்வேறு காரணங்களால் இந்த இறப்புகள் நேர்ந்துள்ளன என்றும், பொதுவாக உச்சபட்ச காய்ச்சல் காரணமாக கடைசிக் கட்டத்தில் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கே உயிரிழப்பு அதிகம் நேர்வதாக மருத்துக்கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில் ரூ. 35 லட்சம் உடனடியாக விடுவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் தடையின்றி விநியோகிக்கப் பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக டிவி ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறிய தலைமைச் செயலர் ராஜீவ் குமார், இதுகுறித்து விசாரிக்க நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் யாராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதனிடையே ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப் பட்டதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்ததாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள புஷ்பா கேஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி மீனு வாலியா, நாங்கள் மீண்டும் மீண்டும் எங்களுக்கான பில் தொகையை அனுப்பும் படி கோரிக் கொண்டேயிருந்தோம் ஆனால் அதிகாரிகள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை என்று மருத்துவக்கல்லூரி பொறுப்பாளர்களை குறைகூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த காலங்களில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிலிண்டர் விநியோகத்துக்கான தொகை சரிவர செலுத்தப் படாததால் திடீரென நிறுவனம் விநியோகத்தை கடந்த 10ஆம் தேதி நிறுத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தில் மாநில அரசு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நடவடிக்கைக்கு பயந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவானார்.

ஆட்சி செய்தவர்கள் தங்கள் தவறுகளை மறைக்க வீதியில் இறங்கி ஆட்சி செய்பவர்கள் மீது தற்போது கையைக் காட்டி பிண அரசியல் நடத்தி வருகின்றனர். ஆளுபவர்களோ, இதுவரை ஆட்சி செய்தவர்களின் தவறுகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தவறுகள் தொடர அனுமதித்துள்ளனர். ஆனால் இத்தனை பேர் இறப்புக்குப் பின்னர் இப்போது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறந்து பேச வேண்டும் என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: