பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

madras-high-court

சென்னை:

அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாரம் ஒருமுறை, திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில், அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல் பாடலாம் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதில் சில விதிவிலக்குகளையும் அறிவித்துள்ளது. இந்தப்  பாடல் வங்க மொழியிலும், சம்ஸ்க்ருதம் கலந்த நடையிலும் இருப்பதால், சமஸ்கிருதம், வங்க மொழியில் பாட விருப்பம் இல்லாதவர்கள் இந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை அல்லது தமிழில் மொழிபெயர்த்துப் பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும். பாடலைப் பாட விருப்பம் இல்லாதவர்கள் மீது எந்தவித அழுத்தமும் தரக்கூடாது. வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று கூறி அழுத்தம் தந்தால், அது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கச் செய்யக் கூடும்  என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வந்தே மாதரம் தொடர்பான வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் இன்று இந்த உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் வந்ததே ஒரு சுவாரஸ்யம்தான். இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்தவர் கே.வீரமணி என்பவர். ஆசிரியர் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில், வந்தேமாதரம் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது.

அதற்கு வங்கமொழி என்று பதில் அளித்திருந்தார் வீரமணி. ஆனால் அவருக்கு அந்தக் கேள்விக்கான பதில் தவறு என்று சொல்லி, மதிப்பெண் வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம் 90 மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றுவிட வேண்டிய சூழலில் அவர் 89 மதிப்பெண் பெற்று தேர்வாகாமல் போனார். அதனால், இந்த ஒரு கேள்வியின் மதிப்பெண்ணைப் பெற்றுவிட, உயர் நீதிமன்றத்தை அணுகினார். தாம் படித்த புத்தகங்களில் எல்லாம், வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப் பட்டது என்று குறிப்பிடப் பட்டிருக்க, தான் சரியாக எழுதியும் தனக்கு மதிப்பெண் வழங்கப் படாமல் போனதாகக் கூறியிருந்தார்.

மனுதாரரின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தகுந்த பதில் அளிக்குமாறும், வந்தே மாதரம் முதன்முதலில் எந்த மொழியில் எழுதப் பட்டது என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, வந்தே மாதரம் பாடல் சம்ஸ்க்ருதத்தில்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், வங்க நாவலில் வந்ததால், வங்க எழுத்துகளில் எழுதப் பட்டது என்று பதில் அளிக்கப் பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், இருப்பினும், வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்குமாறு அறிவுறுத்தி, அவருக்கு வேலை வழங்க ஆவன செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கில்தான், வந்தேமாதரத்தின் அருமை பெருமைகளை மாணவர்கள் கட்டாயம் உணர்ந்து கொண்டாக வேண்டும் என்று கருதிய நீதிபதி, மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்தார்.

சென்ற நூற்றாண்டில் மகாகவி பாரதியார் வந்தே மாதரம் பாடலை, சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் இரண்டு மொழிபெயர்ப்புகளில் தமிழர்க்கு அளித்தார். அதில் ஒரு மொழிபெயர்ப்பு:

bharat-matha.jpg

வந்தே மாதரம் …
தாயை வணங்குவோம்!


நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]

தென்நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேன்மொழி பொலியும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடுபல்படை தாங்கி முன் நிற்கவும் கூடு திண்மை குறைந்தனை என்பதென் ?
ஆற்றலின் மிகுந்தனை அரும்பதம் பூட்டுவை மாற்றவர் கொணர்ந்த வன்பகை ஓட்டுவை
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]

அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை மருமம் நீ , உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்தன்பு நீ ஆலயம்தோறும் அணி பெற விளங்கும்
தெய்வ சிலைஎல்லாம் தேவி இங்குனதே
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]

பத்து படைகொள்ளும் பார்வதி தேவியும் கமலத்து இடழ்கலிற் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]

திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றில்லை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இரு நிலத்து வந்து எம்முயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்
[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]
நளிர் மணி நீரும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: