தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு!

chidambaram-karthiசென்னை:

தேடப்படும் நபராக, தாம் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக் அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது. அந்த லுக் அவுட் நோட்டீஸில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா பேர விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை தீவிரமான நிலையில் கடந்த மே மாதம் தன் நண்பர்களுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். ஜூன் 1 ஆம் தேதி அவர் நாடு திரும்பினார். மீண்டும் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக, இந்த லுக்அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு கார்த்தி சிதம்பரம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

தாம் சிவகங்கையிலேயே அனைவருக்கும் தெரியும் வகையில்,கட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு வருவதாகவும், தாம் ஏன் தேடப்படும் நபராக அறிவிக்கப் பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: