கொழும்பு டெஸ்ட்: இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கொழும்பு:
இலங்கை அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில், கொழும்புவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாரா, ரஹானே ஆகியோரின் செஞ்சுரிகளின் உதவியுடன் 9 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 183 ரன்களில் ஆட்டம் இழந்து, ‘பாலோ–ஆன்’ ஆனது. பின்னர் 439 ரன் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னேவும், தரங்காவும் இறங்கினர். தரங்கா (2 ரன்) சொற்ப ரன்னில் வெளியேறினார். பின் 2வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், குசல் மென்டிசும் ஜோடி சேர்ந்தனர். மென்டிஸ் ஒரு ரன்னில் இருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘மிட் ஆன்’ திசையில் தவான் வீணடித்தார். அதன் பிறகு மென்டிஸ், கருணாரத்னே இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.

மென்டிஸ் 110 ரன்களில் ஆட்டம் இழந்தார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 209 ரன் சேர்த்திருந்தது. கருணாரத்னே 92 ரன்களுடனும், புஷ்பகுமாரா 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர். பின்னர், இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு கருணாரத்னே நம்பிக்கை அளித்தார். கருணாரத்னே இலங்கை அணி 310 ரன்கள் எடுத்து இருந்த போது, 141 ரன்களில் 5வது விக்கெட்டாக வெளியேறினார். ஜடேஜா பந்துவீச்சில் ரெகானேவிடம் கேட்ச் கொடுத்து கருணாரத்னே வெளியேறினார்.

இதனையடுத்து அடுத்தடுத்த விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தியதால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர்ந்தது.தொடர்ந்து, இலங்கை அணி 116.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து, இந்தப் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியிலும் வென்றதை அடுத்து, டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: