spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

- Advertisement -

”பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே”. . . .
”காவிரி புஷ்கர நீராடல் விழா” : 12-9-17 முதல் 24-9-17வரை. . .
”மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில்”

குடகு மலையில் தோன்றி, திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வழியாக பூம்புகார் கடலில் கலக்கும் பொன்னி நதியான காவிரி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சிறப்பாகிறாள். ஆம்! அங்கு பன்னிரண்டு புண்ணிய நதிகளும் காவிரியில் கூப வடிவில் கலக்கிறதாம். மேலும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் நீராடுவது சிறப்பாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு காவிரிபுஷ்கரம் வருவதால் புஷ்கர நாட்களில் நீராடுவது நமது பாவங்கள், தோஷங்களை அகற்றிவிடும். “தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு?”.

இது அருமையான கேள்வி. கலியின் கொடுமையால் எப்போதும் நீர் நிரம்பி ஓடும் காவிரி சில ஆண்டுகளாக எப்போதாவதுதான் நீர் ஓடுகிறது. மேகம் சூரியனை மறைப்பது வெறும் மறைவு தான், அஸ்தமனம் அல்ல. நமக்கு மிகவும் வேண்டிய நம் பெற்றோர்கள் வீட்டில் உடல்நலம் குன்றி விட்டால் அப்படியே விட்டு விடுவோமோ?!. சிலர் விட்டு விடலாம் இக்காலத்தில். ஆனால், நம்மை பெத்தவர்கள் உடல்நலம் சரியில்லை என்றால் ஈசனிடம் பிரார்த்திப்போம்; அல்லது வைத்தியரிடம் கூட்டிச்செல்வோம் சரிதானே.

மாதா, பிதா, குரு, தெய்வம். அதற்கேற்ப, பெத்தவர்களிடம் ஆசி வாங்குவது மரபு. என்னை பெத்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக நாம் ஒரு நற்செயல் செய்யும் போது அவர்களிடம் சென்று ஆசி வாங்க மாட்டோமோ?. ஆசி வாங்குவோம் தானே. அதுபோலத்தான், காவிரி புனிதமானவள். எப்போதும் தன்னகத்தே நீர் கொண்டு இருப்பவள். நம்மை தன்னுள் நீராட வைத்து புனிதமாக்குபவள். சில சமயங்களில் காவிரியில் தண்ணீர் இல்லை. அதற்காக காவிரியில் நாம் புண்ணிய நாட்களில் நீராடாமல் இருக்கமுடியுமா சொல்லுங்கள்.

தகுதிக்கேற்ப ஆழ்குழாய் அமைத்து நீர் எடுத்து தீர்த்தமாடுவோம் தானே. அப்படி செய்யும் போது, நாமும் புனிதமாவோம். நம் முயற்சியைக்கண்டு ஈசனும் உலகிற்கு மழையை தேவைக்கு அளித்து நம்மைக்காப்பான். இதனால் வரும் காலங்களில் காவிரியில் முன்புபோல் எப்போதும் நிரம்பியிருக்கும் தீர்த்தம்.

”நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா”[கவியரசு கண்ணதாசன்]. . . .

”துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும். . . ”எனத்தொடங்கும் சம்பந்தரின் திருவாலங்காடு திருத்தலப் பதிகத்தின் நிறைவில் ”சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே”என்கிறார். அதாவது, ஈசனைப்போற்றும் திருமுறைப் பதிகம்களை ஓதவல்லவர்கள்[சிவனடியார்கள் எனக்கொள்ளலாம் ] சேர்ந்த இடங்களெல்லாம் தீர்த்தமாக[புனிதமானவையாக] பொருந்த பெறுவர் என்கிறார் சம்பந்தர்.

அன்னை உமையவள் திருமுலைப்பால் உண்ட நம் முருகப்பெருமான் திருஅவதாரமாக வந்துதித்த சம்பந்தப்பெருமான் பதிகத்தின் படி அடியவர்கள்
சேரும் இடமெல்லாம் புனிதமானவையான தீர்த்தமே. காவிரி மஹாபுஷ்கரம் விழாவில் சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் காவிரி புனிதமானவள்; மயிலாடுதுறை துலாக்கட்டம் புனிதமானது; மயிலாடுதுறை துலாக்கட்ட பன்னிரண்டு தீர்த்த கூபங்களும் வெகு புனிதமானவை; அதில் சிவனடியார்கள் வந்து சேர்ந்தாலே அந்த இடமெல்லாம் தீர்த்தம் தானே.

எனவே அடியவர்கள் காவிரி மஹாபுஷ்கரம் விழாவின் இந்த நன்னாட்களில் நீராடி புனிதம் பெறுவோம். ”சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே”என்கிறார் அப்பர் பெருமான் தமது திருவாலங்காடு திருப்பதிகத்தில். ஆம்! அடியவர்கள் தீர்த்தமாடும் புண்ணிய தீர்த்தங்களில், தீர்த்தமாக இருப்பவர் நம் சிவபெருமானே. மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தற்போது தூர் வாரும்போது பன்னிரண்டு கூபங்கள்[கிணறுகள்]இருப்பது தெரியவந்தனவாம்.

தற்போது காவிரியில் நீர் இல்லாததால் துலாக்கட்டத்தில் உள்ள அந்த கிணறுகளில் குழாய் பதித்து அடியில் இருந்து நீர் வருமாறு அமைத்துள்ளனர். கிணறுகளின்
அடியில் இருந்து வரும் நீர் அனைத்துமே கங்கை தான் என்கிறார்கள் பெரியோர். கங்கை நம் சிவபெருமானின் சிரசை அலங்கரிப்பவள். மயிலாடுதுறை துலாக்கட்ட தீர்த்தம் புனிதமிக்கது. அதில் உள்ள கூபங்களில் இருந்துவரும் கங்கை நீர் புனிதத்தின் உச்சம். ஆஹா! இப்படி காவிரியில் தீர்த்தமாக வரும் தீர்த்தங்களின் தீர்த்தங்களில் காவிரி மகாபுஷ்கர நன்னாட்களில் நீராடி புனிதம் அடைவோம்.

புஷ்கரத் திருவிழா ஆண்டுதோறும் குருபகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுவதாகும். இராஜஸ்தானில் உள்ள புஷ்கரத்தில் பிரம்மதேவர் வேள்வி நடத்த அந்த வேள்வியிலிருந்து சரஸ்வதி சுப்ரபா எனும் புஷ்கரகங்கை தோன்றி பிரம்மனின் கமண்டலத்தில் சென்றடைந்தது. இந்த புஷ்கரகங்கையை கொண்டுதான் உயிரினங்கள் வாழத் தேவையான நீரை படைப்பதுடன், பாவங்கள் அனைத்தையும் விலக்கும் அரும் மருந்தாகவும் ப்ரம்மா பயன்படுத்துகிறாராம்.

நவகிரக குருபகவான் புஷ்கரகங்கையை தமக்களிக்கும்படி பிரம்மனிடம் கேட்டார். அதன்படி, செல்லும் ராசியில் பன்னிரண்டு தினங்கள் மட்டும் மேஷ ராசி தொடங்கி, 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளிலும் புஷ்கர தீர்த்தவாரிகள் நடத்திட குருவின் எண்ணப்படி புஷ்கரகங்கை கிடைத்தாள். குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது சிந்துவிலும், மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது பரணீதா[கோதாவரி நதியின் உபநதி]விலும் புஷ்கரகங்கை குரு பகவான் செல்லும் ராசியில் பன்னிரண்டு தினங்கள் மட்டும் இருக்கிறது. அதன்படி, குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்லும் போது, துலாமுக்கு உரிய காவிரி நதியில் புஷ்கரகங்கை வாசம் செய்வதால் காவிரியில் வரும் செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதுவும் இந்தமுறை வரும் காவிரி புஷ்கரம் , மகா காவிரி புஷ்கரம் என்கிறார்கள் ஆன்றோர்கள். ஒன்று தெரியுமா?!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் எப்போதும் 12 ராசிகளுக்குரிய புண்ணியநதிகளும் கலந்துள்ளன என்கிறார்கள். ஆம்!இந்த 12புண்ணியநதிகளும் காவிரியின் மயிலாடுதுறை தீர்த்த துலாக்கட்டத்தில்தான் கூப வடிவில்[கிணறு]எப்போதும் கலந்தே இருக்கின்றன. எனவே இப்படிப்பட்ட பெரும் புனிதம் மிக்க மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடுவது பெரும் புண்ணியம்.

பன்னிரண்டு கிணறுகளில், பன்னிரண்டு நதிகளுக்குரிய புனிதநீரும் காவிரியில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கலப்பதால் 12 ராசிக்காரர்களும் இதில் நீராடி பலனடையலாம். புஷ்கர நாளில் காவிரியில் நீராடினால் அனைத்து புனித நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, குடும்ப வாழ்க்கை, மழைப்பொழிவு, வன்முறை அகன்று அமைதி நிலவுதல் என எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

உலகை ஆளும் தென்னாடுடைய ஈசன் மயிலாடுதுறையில் மயூரநாதர் எனும் திருநாமத்தில் அபயாம்பிகை அம்பிகையை தம்முடைய உடனுறை சக்தியாக கொண்டுள்ளார். அதே ஈசன் மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை அருகில் விசாலாட்சி அன்னையை உடனுறை சக்தியாக கொண்டு காசி விஸ்வநாதராக அருள்பாலிக்கிறார்.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்புமிக்கது. அதுவும் துலாக்கட்டத்தில் நீராடுவது வெகு சிறப்பு. இங்கு துலா தீர்த்தக் கட்டத்தின் நடுவில் ரிஷப தேவர் எழுந்தருளி உள்ளது குறிப்பிடத்தக்கது. ”ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்”சிவன் என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, நம்மைப் பிடித்திருக்கும் பிறவி என்னும் துயரம் கெட வேண்டும் என்றால் புனித நீர்நிலைகளாகிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். ஏன் தெரியுமா?!அங்கு தீர்த்தமாக இருக்கும் தீர்த்தன் நம் சிவபெருமான் ஆவார் என்கிறார் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகரின் வாக்கிற்கேற்ப காவிரி தீர்த்தமாட மஹாபுஷ்கர நன்னாட்களில் மயிலாடுதுறை துலாக்கட்டம் சென்றடைவோம். இந்த புஷ்கர நன்னாட்களில் காவிரிக்கு மஞ்சள் தூள், நறுமண மலர்கள் தூவி, அகத்தியர், நம் குலதெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் நம் முன்னோர்களை வணங்கி நீராட நம் வினைகள் அகன்று நல்லருள் கிட்டும். அதுமட்டுமல்ல அந்திசாயும் பொழுதில் ஆரத்தி செய்து காவிரித்தாயை வழிபட பண்ணிய பாவங்கள் தீர்ந்து வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த மகா புஷ்கர நாட்களில் காவிரிக்கு தினமும் மாலையில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணங்களும், தேவாரம், திருவாசகம் திவ்விய பிரபந்த பாராயணங்களும் நடைபெறும்.

தினமும் மாலை 6 மணிக்கு காவிரிக்கு தீப ஆரத்தியும் நடக்கிறது. தீர்த்த நீராடிய பிறகு நம்மால் இயன்ற அன்னதானம் செய்து கண்டிப்பாக அருகில் உள்ள மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில் சென்று கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட்டு, மயூரநாதர் ஆலய ராஜகோபுரத்தில் உள்ள பொன்முனீஸ்வரரை வழிபடல் சிறப்பு. பித்ருக்களின் மஹாளய பட்ச காலமான தற்போது புஷ்கர புண்ணிய நீராடல் வருவதன்மூலம் , காவிரியில் நீராடி நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகளை செய்வதன் மூலம் பித்ரு சாபம், பித்ரு தோஷத்தில் இருந்தும் விடுபடலாம். மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு ரிஷப தீர்த்தம் என்ற திருநாமமும் உண்டு.

நீராட வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் உடைமாற்றிக்கொள்ள அறைகள், கழிப்பிட வசதி, குடிநீர்வசதி, அன்னதானம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளனர். இந்த புஷ்கர காலத்தில் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராட முடியாதவர்கள் வரும் 16-11-17 அன்று ”கடைமுழுக்கு”நன்னாளில் இதில் நீராடி பெரும் புண்ணியத்தை அடையலாம்.

“நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’ எனப் பெற்றேன்?”.
“வர இருக்கும் பிறவியிலும்வாழ்த்திடுவேன் நின் அருளை”.
“நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”.
“நாயேனை நாளும் நல்லவனாக்க, ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்”
“நேற்றைய வாழ்வு அலங்கோலம், அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம், வரும் காற்றில் அணையாச் சுடர்போலும், அருள் கந்தன் தருவான் எதிர்காலம், எனக்கும் இடம் உண்டு, அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்”

கட்டுரையாக்கம்: சிவ. அ. விஜய் பெரியசுவாமி,
கல்பாக்கம், 9787443462. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe