கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!

கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ – இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!

நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். நினைவு மண்டபத்தின் திறப்புவிழாவை ஒட்டி அப்துல் கலாமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகக் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.

பாடலுக்கான குறுந்தகடு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாடலை வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் குறுந்தகட்டைப் பெற்றுக்கொண்டனர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்துல் கலாமின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் பாடலின் வரிகள் வருமாறு:–
தேசிய கொடியும் அசைந்து சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
தேசம் முழுக்க எழுந்து சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்,
கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
காலம் கடந்து காலம் சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் நிச்சயம் நற்குணம் உண்டாகும்.
நற்குணம் நிறைந்த உறவுகளாலே ஒற்றுமை என்பது உருவாகும்.
ஒற்றுமை மிகுந்த நாட்டில் தானே ஒழுக்கம் என்பது உருவாகும்.
ஒழுக்கம் காக்கும் நாடுகளாலே உலக அமைதி நிலையாகும்.
வள்ளுவர் போலே வாய்மை வகுத்த நல்லவர் நீங்கள் என்பதனாலே
கலாம் கலாம், சலாம் சலாம்.

பாதி புத்தனும் பாதி காந்தியும், பகிர்ந்து படைத்தது நீயா?.
பாதி நியூட்டன் பாதி ஐன்ஸ்டீன் கலந்து செய்ததன் கையா?.
இந்திய நாட்டை விண்வெளி மேலே ஏற்றி வைத்ததும் பொய்யா?.
நாளை இந்தியா வல்லரசாக நாளும் உழைத்தீர் அய்யா.
தூங்கிக்காண்பது கனவே அல்ல தூங்க விடாததே கனவு என்றீரே,
கலாம் கலாம், சலாம் சலாம்.

என்று அந்தப் பாடல் முடிகிறது. இந்தப் பாடலை நினைவு மண்டபத் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டுக்குரலில் பாட உள்ளனர்.

அந்தப் பாடல்: கேட்டு மகிழுங்கள்…

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: