ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?

இந்தியன் பட பாணியில் அதிரடியாக செயல் பட்ட இக் குழுவின் செயல் அங்கிருந்தோரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

27

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழு சார்பாக அதன் தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆசீர்வாதம் ஆச்சாரி, இர்பான் அஹமது (தில்லியைச் சேர்ந்தவர். பாஜக., சிறுபான்மை அணி தேசிய துணைத் தலைவராக இருந்தவர்) மற்றும் உறுப்பினர்கள் தமிழகத்தில் நேற்று திருச்சிராப்பள்ளி, மற்றும் காரைக்குடியிலும் இன்று மதுரை, ராமேஸ்வரத்திலும் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தினர்.

இதில் நேற்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்திய போது நடந்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நேற்று காலை திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய ஆய்வில், 6வது நடைமேடைக்குச் சென்று அங்கிருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, அங்கிருந்த பயணிகள் அனைவரும் இங்கே உள்ள குடிநீர்க் குழாயில் வரும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ளதாகக் கூறினர். இதைக் கேட்ட ஹெச்.ராஜா, இர்பான் அகமது ஆகியோர், குடிநீர்க் குழாயைத் திறந்து, நீரைக் கையில் பிடித்துப் பார்த்தனர். அந்த நீர், மிகவும் அழுக்காகவும் துர்நாற்றத்துடனும் இருந்தது. இதை அடுத்து, அருகில் இருந்த ஸ்டேஷன் மேனேஜரை, அந்தத் தண்ணீரைக் குடிக்கச் சொல்லியுள்ளனர். அவரும் அதைக் கையில் பிடித்துப் பார்த்து, சற்று தயங்கியுள்ளார். இருப்பினும், இருவரும் வலியுறுத்தியதும், தன் வாயில் தண்ணீரை ஊற்றிய அடுத்த நொடி நாற்றமும், அருவருப்பும் தாங்காமல் துப்பிவிட்டார்.

பின்னர் விடாமல் மீண்டும் குடிக்கச் சொல்லியும் தயங்கிய அதிகாரியை இர்பான் வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்தார். ஒரே ஒரு வாய், துர்நாற்றம் மிகுந்த இந்தத் தண்ணீரைக் குடிக்க மறுக்கும் நீங்கள், பயணிகளுக்கு மட்டும் தினசரி இந்த நீரை குடிக்கக் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தன் தவறை திருத்திக் கொள்வதாகக் கூறிய அதிகாரி, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்தியன் பட பாணியில் அதிரடியாக செயல் பட்ட இக் குழுவின் செயல் அங்கிருந்தோரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.