அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை: தினகரன் அறிவிப்பு எதிரொலி!

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தனது அமைச்சரவை சகாக்கள் எட்டு பேருடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையின் ஈடுபட்டார். டிடிவி தினகரன் அறிவிப்பு எதிரொலியால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.

60 நாட்கள் கெடு முடிந்து வரும் 5 ஆம் தேதி முதல் தீவிர சுற்றுப் பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அதன் துவக்கமாக, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அவர் வரப் போவதாக வெளியான தகவல்கள், அதிமுக., அம்மா அணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தின. டி.டி.வி.தினகரன் தனது வியூகத்தைத் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும் இன்றே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார். இன்று மாலை அவர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். அதற்கு முன்னதாக, இன்று காலை அவர் தனது அமைச்சர்கள் எட்டு பேருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மாலை அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பத்திரிகைத் தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு எத்தகைய அதிரடியான பதிலடியைக் கொடுப்பது என்பது பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நடத்தும் ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க. கட்சியினரிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டும் வகையில் இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை இணைத்துக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுப்பது பற்றியும் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை 2 அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகவும், அணிகள் இணைந்த பிறகு கட்சியை வழி நடத்தும் பொறுப்பு ஓபிஎஸ்சிடம் வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து எவரும் அதிகாரபூர்வமாக தகவலைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ந்ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வை சண்முகம் சாலை சந்திப்பில் தடுப்பு வேலிகள் அமைத்து இன்று காலையிலேயே போலீசார் நிறுத்தப் பட்டனர். அந்த சாலை முழுவதிலும் போலீசார் இருபுறமும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினகரன் அல்லது சசிகலா குடும்பத்தினர் யாராயிருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்து வருகிறது. இந்நிலையில், கட்சியைக் கைப்பற்ற தினகரன் முயன்று வருகிறார். எனவே, இப்போது கட்சி, ஆட்சி இரண்டிலும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது என்றே தெரிகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: