ஆகஸ்ட் 14 முதல் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம்: தினகரன் அறிவிப்பு

சென்னை:

ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணியினரும் இணைய வேண்டும் என்று கூறி, டிடிவி தினகரன் அளித்திருந்த கெடு இன்றுடன் முடிந்துவிட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப, அவர் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. எனவே, தினகரன் ஏதேனும் அதிரடி அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏற்கெனவே, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வேன் என்று தினகரன் கூறியிருந்ததால், அவர் நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்வது குறித்து அறிவிப்பாரா, அல்லது மாநிலத்தின் சில பகுதிகளுக்குச் சென்று, தொண்டர்களைச் சந்திப்பது குறித்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்தபடி, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத தினகரன், திடீரென அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பினார். அதில் வரும் 14ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும், 14ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணத்தை தொடங்கும் தினகரன், ஆக. 23 – வடசென்னை வடக்கு மாவட்டம், ஆக. 29 – தேனி மாவட்டம், செப். 5 – கரூர் மாவட்டம், செப்.12 – தஞ்சாவூர், செப்.23 – நெல்லை, செப்.26 – தருமபுரி, செப்.30 – திருச்சி, அக். 5 – சிவகங்கை என மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கான பட்டியலை இணைத்திருந்தார் தினகரன். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுடன் தொண்டர் சந்திப்பை நடத்தும் திட்டத்தை அவர் அளித்திருக்கிறார்.

எனவே, அதிமுக., தலைமை அலுவலகத்துக்குச் செல்வேன், தீவிர கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்தபடி, நாளை அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வது கேள்விக்குரியதுதான்! இதனால், தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவதை விரும்பாத எடப்பாடி தரப்பினர் சற்றே நிம்மதி அடையக் கூடும்!

இதனிடையே, அதிமுக.,வில் 18 அமைப்புச் செயலாளர்களை நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இவர்களில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர் முகாமில் செயல்படும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பனுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: