போராட்டம் என்று கூறி, பன்றிக் குட்டியைக் கொன்றவர்கள் கைது!

சென்னை:
சென்னையில் பன்றியை வைத்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த த.பெ.தி.க.வினர், பன்றிக் குட்டிகளை சித்ரவதை செய்து கொன்றனர். இது குறித்து போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பிராமண எதிர்ப்பு என்ற பெயரில், இந்து மத ரீதியான தாக்குதலை முன்வைத்து போராட்டங்களை திராவிடர் கழகம், மற்றும் அவர்களில் இருந்து பிரிந்த கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். இந்து மத பழக்கங்களை கொச்சைப் படுத்தும் வகையிலும், இந்து மதத்தினரின் பண்டிகைகளை கேலி செய்யும் வகையிலும் மட்டுமே போராட்டங்களை நடத்தும் இந்த அமைப்பினர், பெண்கள் தாலி அறுக்கும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், ஆவணி அவிட்ட நிகழ்ச்சியன்று, பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், போலீஸார் சென்னையில் இதற்கு அனுமதி மறுத்ததுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தனர். ஆனால், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த போலீசார், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்களையும் வரவழைத்திருந்தனர்.

இந்நிலையில், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்திற்கு 5 பன்றிக் குட்டிகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவற்றுக்கு பட்டையடித்து, பூணூல் அணிவித்து, அவற்றின் வாய்களை கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்து வந்தனர். பன்றிக்குட்டிகள் என்றாலும் சிறிதும் இரக்கமின்றி அவற்றின் வாயை மூடி, சுற்றி கயிறால் இறுக்கிக் கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்தனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து போலீசாரும் சாலையில் இழுத்து வரப்பட்ட பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்தின்போது பறிமுதல் செய்த பன்றிகளை, வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் போலீஸார் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால், பன்றிக்குட்டிகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டதால் போலீசார் அந்தப் பன்றியை மீட்க முயன்ற போது கழுத்து இறுக்கி, பன்றிக் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இவர்களின் போராட்டம் காரணமாக, ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தன.

வாயில்லா ஜீவன் என்று பாராமல், விலங்குகளை சென்னையின் பிரதான சாலையில் அழைத்து வந்து போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்த அமைப்பினரின் போராட்டம் காரணமாக, மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கருப்புச் சட்டை அணிந்து சாலையில் நடந்து சென்றவர்களையும், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார், அவர்கள் கொண்டு சென்ற பைகளையும் தீவிரமாக சோதித்த பிறகே, சாலையில் செல்ல அனுமதித்தனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 9 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், விலங்குகளை சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், மத மோதல்களைத் தூண்டி விடுதல், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: