யார் 420…? தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல்!

புது தில்லி:
கட்சிக்கு விசுவாசி, தலைவர், பொறுப்பு என்பதெல்லாம் போய், இப்போது 420 யார் என்பதில் டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனமிக்கப்பட்டதே சட்டவிரோதமானது; செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட வகையில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி குழுவினரை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றார். எடப்பாடி நேற்றுவரை கட்சி வளர்ச்சிக்காக என்ன செய்தார் என்று கேட்டார். பின்னர் ஏமாற்றுப் பேர்வழி என்று பொருள்படும் வகையில் எடப்பாடி ஒரு 420 என்று முத்திரையிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், இன்று தில்லிக்கு வந்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தினகரன் அவரை 420 என்று வசைபாடியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தினகரன் ‘420’ என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுகின்றேன். கடந்த 3 மாத நிகழ்வுகளைப் பார்த்திருப்பீர்கள். அதனால் 420 என்பது அவருக்குத்தான் பொருந்தும்” எனக் கூறினார்.

பின்னர் இரு அணிகள் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இணையும் என நம்புகிறோம்.” என்றார். மேலும், “பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோம். ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வெற்றி பெற்றோம். இதிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.

எடப்பாடி அணியினர் எடுத்த தீர்மானத்துக்கு தினகரன் தரப்பு மிகுந்த கோபத்தில் உள்ளது. கருத்து வேற்றுமையால் பிரிந்து கிடந்த சசிகலா குடும்பத்தினர், இப்போது ஒன்று சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றும் ஆசையில் உள்ளனர் என்பது, தினகரனுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வந்த திவாகரனின் பேட்டியில் இருந்து வெளித் தெரிகிறது. “தினகரன் துணை பொதுச்செயலாளராக செயல்பட முடியாது என்ற தீர்மானம் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சி நிச்சயம் காப்பாற்றப் பட்டு விடும், ஆட்சியை காப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். தினகரன் தலைமையில் மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் அடுத்தக் கட்டம் என்ன என்பது தெரியும்” என்று திவாகரன் கூறியுள்ளார்.

இதனிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் தங்களது பதவியை ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையிலாவது ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது பற்றி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தினகரனால் பதவி பெற்ற 19 எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ராஜினாமா செய்யும் பட்சத்தில் பழனிச்சாமி அரசு கவிழும் என தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: