பொதுச் செயலாளராக சசிகலா?: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி இன்றும் படையெடுப்பு!

புது தில்லி:

குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தில்லி வந்திருந்தார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஓபிஎஸ் அணியினர் இன்று தேர்தல் ஆணையத்துக்குச் சென்று இரட்டை இலைச் சின்னம் மீட்பு குறித்த தங்களின் மனு குறித்து விசாரித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, அதிமுக., பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்னும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக., நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் நியமனம் செல்லாது என அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுக., பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றும், உட்கட்சிப் பிரச்னை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் பொதுச் செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று தில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணயத்திடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியபோது, “தினகரன் துணை பொதுச் செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம்” என கூறினார்.

இத்தகைய நிலையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்க இரு அணிகளும் தயாராகி வருவதாகவே கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மத்திய பாஜக., தலைமையின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைப்பு சாத்தியமானால், அது தினகரன், சசிகலா குடும்பம் பங்கேற்பில்லாத அதிமுக., என்ற நிலையில்தான் இருக்கக் கூடும். எனவே அது சாத்தியமாகாது என்ற கருத்தை தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அணிகள் இணைப்பு நடக்காவிட்டாலும் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் ராஜினாமா செய்யக் கூடிய முடிவை எடுக்க வைக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து காலம் கடந்துவிட்டபடியால், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கோருவது என்ற அரசியல் நகர்வுக்கு மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும் என்ற கருத்தைக் கூறி வந்தவர், தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அடிபோடுகிறார். எனவே தமிழக அரசின் நிலைத்தன்மை குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுப்பப்பட்டு வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: