எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறாராம் மு.க. ஸ்டாலின்!

சென்னை:
தமிழகத்தில் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தினகரன் தரப்பு ஒரு புறம் முயன்று கொண்டிருக்க, மு.க. ஸ்டாலினோ வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனை அவரே வாய்விட்டும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பித்து வந்துவிட்டது. காலம் கடந்து விட்டதால், மீண்டும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர யோசித்துக் கொண்டிருக்கிறது திமுக. அதற்குக் காரணமாக உள்கட்சிப் பிரச்னையையும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகல் குறித்த அறிவிப்பையும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்” என்றார்.

இந்நிலையில், ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மு.க.ஸ்டாலின் எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுபவர். அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். கருவாடு மீன் ஆகாது; ஸ்டாலின் நினைத்தது எதுவும் நடக்காது” என்றார்.

இதே வகையில், ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், முன்பு வெற்றி பெற்றதை விட கூடுதல் பலத்துடன் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: