spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்

தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்

- Advertisement -

ஐ ஐ டி- இணைந்த பொது நுழைவு தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் தவிர முதல் குஜராத்தி மொழியிலும் நடத்தப்படுகின்றன என்றும் தமிழ் மொழியிலும் நடத்தப்படவேண்டும் என்றும், நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளாக இருந்தாலும், தமிழுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுகிறது என்றும் டாக்டர் ராமதாஸ் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? எதனால் குஜராத்தி மொழியில் அந்த தேர்வு நடைபெறுகிறது என்பதை சொல்ல மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்.

இந்தியாவில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மட்டுமே +2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் அனுமதி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் பல்வேறு தகுதி தேர்வுகளின் அடிப்படையிலேயே அனுமதி நடைபெற்றுவருகிறது. 2009 ம் ஆண்டு முதல் குஜராத்தில் +2 வகுப்பு மாணவ, மாணவிகள் கட்டாயமாக ஐ ஐ டி நுழைவு தேர்வு எழுதினால் மட்டுமே அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அனுமதி என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தங்களின் தாய்மொழியான குஜராத்தியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து 2014ம் ஆண்டு முதல் குஜராத்தியில் தேர்வு எழுத அனுமதித்தது. 2009 ம் ஆண்டில் 150 குஜராத் மாநில மாணவ, மாணவிகள் ஐ ஐ டி க்களில் அனுமதி பெற்றார்கள். 2015 ம் ஆண்டில் 1200 மாணவர்கள் ஐ ஐ டி க்களில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும், மஹாராஷ்டிரா மாநிலமும் அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கான அனுமதிக்கு, தங்கள் மாநில நுழைவு தேர்வுகளோடு, ஐ ஐ டி நுழைவு தேர்வையும் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ ஐ டி தேர்வுகள் இரண்டு அடுக்குகளாக நடைபெறுகின்றன. (IIT-Main, IIT-Advanced). நடப்பு ஆண்டில் 10.20 லட்சம் பேர் முதல் கட்ட தேர்வுகளை எழுதினர். 2.20 லட்சம் பேர் இரண்டாம் கட்ட தேர்வுகளை எழுதினர். ஐ ஐ டி, என் ஐ டி, (NIT), ஐ ஐ ஐ டி (IIIT) போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் ஐ ஐ டி – பொது நுழைவு தேர்வு மூலம் 2016-2017ல் மாநில வாரியாக அனுமதிக்கப்பட்டவர்கள் விவரம்:
ராஜஸ்தான் : 4116,உத்தரபிரதேசம்: 4120, மகாராஷ்டிரா : 2300, தெலுங்கானா : 3531,ஆந்திர பிரதேசம் : 3213, மத்திய பிரதேசம் : 1757, பீகார் : 2435, டெல்லி : 1246, ஜார்கண்ட்: 1325, ஹரியானா: 1167, மேற்கு வங்காளம் :1113, தமிழ்நாடு :792,குஜராத் : 891,பஞ்சாப் : 681, கேரளா : 908,கர்நாடகா:670,ஒடிசா :682,சட்டிஸ்கர் : 683.

மேலே உள்ள பட்டியலில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு மாணவர்கள் 6744 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தெலுங்கு மொழியில் இந்த தேர்வுகள் நடைபெறாத போதும் அதிக அளவிலான மாணவ மாணவிகள் தொடர்ந்து இந்த பகுதியிலிருந்து தேர்வாகி வருவது கல்வி தரம் மற்றும் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவதனால் தான் என்பதை உணர வேண்டும்.

இந்தியா முழுவதும் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தில் படித்த 5856 பேர் , ஐ ஐ டி யிலும், 9728 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டி களிலும், தெலுங்கானா இடைநிலை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 904 பேர் ஐ ஐ டிகளிலும், 2543 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், ராஜஸ்தான் மாநில கல்வி திட்டத்தின் மாணவர்கள் 754 பேர் ஐ ஐ டிகளிலும், 1386 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டி களிலும்,ஆந்திரபிரதேச மாநில பாட திட்டத்தில் பயின்றவர்கள் 740 பேர் ஐ ஐ டி களிலும், 2258 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், மகாராஷ்டிரா மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 728 பேர் ஐ ஐ டி களிலும், 1145 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், ஐ எஸ் சி பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 368 பேர் ஐ ஐ டிகளிலும், 589 என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், பீகார் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் 257 பேர் ஐ ஐ டிகளிலும், 1242 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், மத்திய பிரதேச பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் 227 பேர் ஐ ஐ டி களிலும், 489 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டி களிலும், உத்திர பிரதேச மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 227 பேர் ஐ ஐ டிகளிலும், 910 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டிகளிலும், குஜராத் மாநில பாட திட்டத்தில் படித்தவர்கள் 93 பேர் ஐ ஐ டி களிலும், 448 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ ஐ டி க்களிலும், மேற்கு வங்காள பாடத்திட்ட மாணவர்கள் 92 பேர் ஐ ஐ டி க்களிலும், 379 பேர் என் ஐ டி மாறும் ஐ ஐ ஐ டி களிலும், கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 80 பேர் ஐ ஐ டி யிலும், 339 பேர் என் ஐ டி மற்றும் ஐ ஐ டி களிலும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழக மாணவர் மாணவர்களில் 2016ம் ஆண்டு ஐ ஐ டி இரண்டாம் கட்ட தேர்வு (Advanced) தேர்வுக்கு தகுதி பெற்றவர்களே மொத்தம் 3749 பேர் தான். அதில் மொத்தம் 651 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது வருந்தத்தக்க உண்மை இதில் 116 பேர் சென்னை ஐ ஐ டியில் அனுமதி பெற்றனர் என்பதும் அதில் 13 மாணவர்கள் மட்டுமே தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 2015 வரை தமிழக மாணவ மாணவிகளின் இந்த நிலைக்கு ஒரே காரணம் மாநில அரசின் பாடத்திட்டம் மற்றும் கல்வி முறை தான் என்று சொல்லிக்கொண்டிருந்த மருத்துவர்.ராமதாசு, இதர அரசியில் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய முற்போக்கு சிந்தனையாளர்கள் (?), திடீரென்று ஞானோதயம் பெற்று தமிழ் மொழியில் தேர்வு வைக்க வேண்டும் என்று சொல்வதும், தமிழுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்றும் சொல்வது கேலிக்கூத்தே.

மிக எளிதாக பொறியியல் கல்லூரிகளில் அனுமதி கிடைக்க வழி செய்யும் +2 பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனுமதி என்கின்ற நிலையை மாற்றி அதோடு கூட, கட்டாயமாக நுழைவு தகுதி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் அனுமதி என்ற நிலையை பொறியியல் கல்லூரி அனுமதிக்கு கொண்டு வர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பை மனதில் கொண்டு மாணவ மாணவிகள் தங்களை தயார் செய்து கொள்ளும் மனநிலை உருவாகும். அரசும் அதற்கேற்ற கல்வி முறையை உருவாக்கும். அப்படிப்பட்ட முறையை கொண்டுவந்தால் தகுதி தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படலாம். அந்த நிலையில், ஐ ஐ டி பொது தகுதி தேர்வுகளையும் அனுமதிக்காக மாநில பொறியியல் கல்லூரிகள் அங்கீகரித்தால், அந்த தேர்வுகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருக்கும். மாறாக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே அனுமதி என்று முறையினை கடைபிடித்து கொண்டு ஐ ஐ டி தேர்வில் தமிழ் வழியில் தேர்வு என்கிற அரசியல்வாதிகளின் கோரிக்கை தான் வருங்கால தமிழ் மாணவ சமுதாயத்துக்கு செய்யும் துரோகம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டவை, நடத்தப்படுபவை என்பதை உலகறியும் பொறியியல் பட்டம் பெறும் 80 விழுக்காடு மாணவ, மாணவிகளுக்கு படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைப்பதில்லை என்பது தான் பிரச்சினையே தவிர தமிழ் மொழியில் படிக்காததால் தான் வேலை கிடைக்கவில்லை என்பது இல்லை. உருவாக்கிய, உருவாக்கப்போகும் வேலை வாய்ப்புகளுக்கு தகுந்த படிப்பை தருவதே சமுதாயத்தின், அரசின் கடமை என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். அதை சார்ந்தே அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் இருக்க வேண்டுமே தவிர உணர்ச்சி வசப்பட வைக்கும், மொழி ரீதியிலான கோரிக்கைகளின் மூலம் மாணவ சமுதாயத்தை படுகுழியில் தள்ளும் முயற்சியில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியல் மூலம், மாணவ சமுதாயத்தை மேம்படுத்த முயல வேண்டிய அரசியல்வாதிகள், மாணவ சமுதாயத்தின் மூலம், தங்கள் அரசியலை மேம்படுத்தி கொள்ள முயல்வது முறையல்ல.

பொறியியல் என்பது உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், புவியியல் மாற்றங்களை சார்ந்தது. இதையொட்டியே, நம் கல்விமுறையானது மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அடிப்படை அறிவு. அதற்கேற்ற கல்வி முறையை, கட்டமைப்பை, தொழில் நுட்பத்தை, தேர்வுமுறையை, வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசியல்வாதிகள், உணர்ச்சிகளை தூண்டும் விதமாக பேசுவது, அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. மேலும், கடந்த பல வருடங்களாக பாடத்திட்டங்களை மாற்றாமல் நாம் செய்துள்ள கோளாறுகளினால் உருவானவர்களே இன்றைய ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்களையும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறச்செய்வது அல்லது புதிய தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கல்லூரிகளில் தேர்வு செய்வது, தொழில்நுட்ப கட்டமைப்புகளை கல்லூரிகளில் பெருக்குவது போன்ற பல்வேறு விவகாரங்களை கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், கல்விக்கும், வேலைவாய்ப்பிற்குமான இடைவெளியை அதிகரிக்க செய்யும் வகையில் மாணவர்களின் மனதில் நஞ்சை செலுத்தும் போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க மாணவ சமுதாயம் முன்வரவேண்டும்.

பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகளை முன்னெடுக்க மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் பல்வேறு திட்டங்களையும் மாநில அரசுகள் செயல்படுத்த முனைவதின் மூலம் மட்டுமே நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவ மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பு முடித்தவர்களில் 74 விழுக்காடு பேருக்கு போதிய ஆங்கில புரிதல் அல்லது தொடர்பு திறன் இல்லாததும், 58 விழுக்காடு பேருக்கு பகுப்பாய்வு மற்றும் மதிப்பளவு திறன் இல்லாததும் வேலை வாய்ப்புகள் கிடைக்காது போவதற்கு பெரும் காரணமாக அமைகின்றன என்பதை உணர்ந்து, நம் மாணவ, மாணவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உணர்ச்சிகளை தூண்டி விடாமல் வருங்கால இளையசமுதாயம் வளர்ச்சி மிகுந்த எதிர்கால தமிழகத்தை, வளமான இந்தியாவை உருவாக்க துணை நிற்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்பதை உணர்வார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

~ நாராயணன் திருப்பதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe