“நான் சட்டை கோட்டு போட்டுக்கிறதில்லே

“நான் சட்டைகோட்டுஒண்ணும்போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி!”-பெரியவா

(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை
ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல்,
சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.

அவரோ திருச்சியில் இருந்தார். பெரியவாளோ
ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.எங்கே சந்திப்பது?
அத்துடன் ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளைத்
தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ,
மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி
மலைக்கோட்டையில் முகாம்!

“நான், டெய்லர், சட்டை, கோட்டு எல்லாம் நல்லா
தைப்பேன். சாமிக்கு சட்டை – கோட்டு தெச்சுக்
கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்-
-கிட்டிருக்கிறேன். சாமி அளவு கொடுத்தால்-
பழைய சட்டைகூடப் போதும் – நாளைக்கே புது
சட்டை கொண்டாந்துடுவேன்.கோட்டு தைக்க,
ரெண்டு மூணுநாள் ஆகும்…..”

பெரியவாள்,பரிவுடன், அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவது
கைங்கர்யம் செய்ய ஆசைப்படுகிறார் என்பது,
பக்தி பூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.

“நான் சட்டைகோட்டுஒண்ணும்போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை
மேலே அலங்காரமாகப் போடுகிற மாதிரி,
பெரிய துப்பட்டா – நெறைய வேலைப்பாடுகளோட
செய்து கொடு…”

டெய்லருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
பெரியவாள் அவரை மதித்து,பொருட்படுத்தி,
அவர் காணிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்)
ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்து
புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாள்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின்
அளவுக்கேற்ப – இரண்டு பக்கங்களிலும் நன்றாகத்
தொங்கும்படி வண்ணவண்ணவேலைப்பாடுகளுடன்
ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
அதைப் பிரித்து காட்டச் சொல்லி, நுணுக்கமாக
பார்த்துவிட்டு,கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

“பட்டையன் (யானைப் பாகன்) கிட்டே கொடுத்து
இன்னிக்கே போடச் சொல்லு….”

பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: