spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்மே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்!

மே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்!

- Advertisement -

Bhagwan Surya Devஇந்த வருடம் 4-5-2018 முதல் 28-5-2018 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்கிறது பஞ்சாங்கம்.

இந்தக் காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன் வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை “கர்ப்ப ஓட்டம்’ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம்.கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம்.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா?

யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழை பெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இந்திரனுக்கு காண்டவ வனன்’ என்ற பெயரும் உண்டு.

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார்.

அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “”உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார்

“அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரடியாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

“உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஸ்வேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அது நீங்குவதற்கு தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றான்.

“அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன்.

“நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்து விடுகிறான்” என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தால்தான் அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட முடியும் என நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில்தான் அக்னி தேவன் உதவி கேட்டான்.)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன் “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் எனக்கு வில்லும் அம்பறாத் தூணியும் அம்புகளும் வேண்டுமே. காரணம் நாங்கள் இங்கே நீராடத்தான் வந்தோம்.” என்றான்.

உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன் “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான்.  மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன், அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்றான்.

இவ்வாறு அக்னி தேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என புராணம் கூறுகிறது.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்; அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்!

பொதுவாக, இது ஆராதனைக்குரிய நேரம், நல்லவற்றை நாம் சிந்திக்கும் நேரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe