spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

- Advertisement -

மகாலட்சுமியின் அருளை அள்ளித்தரும் தினமாகத் திகழ்வது ரத சப்தமி ( 03-02-2017)

உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாக கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள்.

சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.

சூரிய சக்தியால் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர் உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனை சுற்றியே அமைகின்றன. சூரியனை கடவுளாக வழிபட்டு வரும் மதத்திற்கு ‘சவுமாரம்’ என்று பெயர்.

சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களேடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் அடைந்தார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும், வெப்பத்தை தரக்கூடிய வல்லமையையும் பெற்றார்.

காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால், பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தர்’ என்பார்கள்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.

அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விசு என்றும், ஐப்பசி மாதப்பிறப்பை ஐப்பசிவிசு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார்.

சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரில் பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கின்றன. இந்தக் குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன.

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.

அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர்.

சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7–ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில், 7–வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் போன்றவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது.

ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர் களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

அன்று சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை செய்து இரண்டையும் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி ரொட்டி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும்.

வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹீ
தன்னோ சூரிய பிரசோதயாத்’
– என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லலாம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார்.

சூரியனுக்கு உகந்தவை:

தானியம்     – கோதுமை
மலர்     – செந்தாமரை
வஸ்திரம்     – சிவப்பு ஆடை
ரத்தினம்     – மாணிக்கம்
நிவேதனம்    – கோதுமை சக்கரன்னம்
சமித்து     – வெள்ளெருக்கு
உலோகம்     – செம்பு

7 வாகனங்களில் பவனி  வரும்  ஏழுமலையான்  

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ரதசப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு ஏழு மலைகள் இருப்பதால் ஏழு குதிரைகள் போல் நினைத்து இங்கு ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார். பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் தான் வலம் வருவார்.

ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவது அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள்.

வாயு புத்திரனான அனுமன் சூரியனிடம் இருந்தே கல்வி கற்றான் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

பீஷ்மருக்கு  நீர்க்கடன்:

மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் வரம் பெற்று இருந்ததால், பீஷ்மரின் உயிர் உடனடியாக பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர்.

அப்போது அங்கு வந்த வியாசரிடம், ‘நான் என்ன பாவம் செய்தேன். என் உயிர் போகவில்லையே’ என்று பீஷ்மர் மனம் வருந்தினார்.

அதற்கு வியாசர், ‘ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் தான் என்றார். உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை துச்சாதனன் துகில் உரிந்த போது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா? என்று கேட்டார்.

அதற்கு வியாசர் எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும், காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பை கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். அதற்கு வியாசர் அவரிடம் எருக்க இலை ஒன்றை காட்டி எருக்கஇலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் உள்ளது. ஆகவே அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன் என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால் அமைதியாக இருந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று உயிர் நீத்தார்.

பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்  கடன் அளிப்பார்கள் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். அதனால் தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது.

ரத ஸப்தமி தினம் 3-2-2017, வெள்ளிக்கிழமை.
Ratha Sapthami Snanam and Arghyam

சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோகி திருப்புவதால் இன்று ரத ஸப்தமி என்று பெயர்.
இன்று காலையில் ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி
கீழ் கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம் அகலும்.

रथसप्तमी स्नान – अर्घ्य मंत्राः
सप्त सप्ति प्रिये देवि सप्त लोक प्रदीपिके।
सप्त जन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम्।। 1
यद्यत् सर्वं कृतं पापं मया सप्तसु जन्मसु।
तन्मे शोकं च मोहं च माकरी हन्तु सप्तमी।। 2
नौमि सप्तमि देवि त्वां सर्व लोकैक मातरम्।
सप्तार्क पत्र स्नानेन मम पापं व्यपोहय।। 3

इति स्नात्वा अर्घ्यं दद्यात्

सप्त सप्ति रथ स्थान सप्त लोक प्रदीपक।
सप्तम्या सह देव त्वं गृहाणार्घ्यं दिवाकर।। 4
दिवाकराय नमः अर्घ्यं समर्पयामि।

ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம், இதமர்க்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe