முதல் டெஸ்ட் 3ஆம் நாள் ஆட்டம்: 291ல் ஆட்டமிழந்தது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 291 ரன்களில் முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன் குவித்து ஆட்டம் இழந்தது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுதான். இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 190 ரன்களும் புஜாரா 144 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் போட்டியின் இரண்டாம் நாளில் தனது பேட்டிங்கை துவக்கியது இலங்கை அணி. ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி விக்கெட்களை வரிசையாக இழந்தது. அந்த அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. பின் மூன்றாம் நாள் இன்று துவங்கியதும் ஓரளவு ரன் சேர்தது. மேத்யூஸ் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியை பாலோ ஆன் ஆவதில் இருந்து காப்பாற்றுவதற்காக பெரேரா கடுமையாக முயன்றார். பெராரே ஒருமுனையில் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன. இலங்கை அணி 78 ஓவர்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் திர்லுவன் பெரேரா 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் முகம்மது ஷமி 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். இலங்கை அணி பாலோ ஆன் பெற்ற போதிலும், இலங்கையை பேட் செய்ய பணிக்காமல் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது. 309 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம் உள்ளதால், இலங்கை அணியை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: