கும்பகோணம் தீவிபத்து குற்றவாளிகள் விடுதலை! மேல்முறையீடு தேவை!

94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது தமிழகத்தில் பரவலாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருந்து தப்பி உயிருடன் உலவி, தீயில் கருகி இறந்த அந்தக் குழந்தைகளின் ஆன்மா அமைதி பெற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உதவாதுதான்!

கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், வகுப்பறைகளை விட்டு வெளியில் வரக்கூட முடியாத நிலையில் 94 குழந்தைகள் கருகி இறந்த பாதகத்தை எவரும் மறந்திருக்க முடியாது. இதற்குக் காரணமாக அசிரத்தையுடன் செயல்பட்டவர்கள் மீது எந்த விதத்திலும் கருணை காட்டத் தேவையில்லைதான்!

இந்த விபத்துக்குக் காரணமான பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும், சமையலர் சரஸ்வதிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும், அவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்திற்கான தண்டனையாகக் குறைத்தும், இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட மேலும் 7 பேரை முற்றிலுமாக விடுவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

முன்னதாக கும்பகோணம் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சம்பத் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம்,‘‘எந்த விதிகளையும் கடைபிடிக்காமல், அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளியில் 900 மாணவர்களைச் சேர்த்து படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு’’ என்று கூறியிருந்தது.

“நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 5 அதிகாரிகளும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டனை என்று வந்துவிட்டதால் அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய அரசுத்துறை அதிகாரிகளுக்கும் தண்டனை உண்டு. பாத்திரம் அறியாமல் பிச்சைப் போடுவதைப் போல கருணையே காட்டக் கூடாத கொடிய குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் கருணை காட்டியிருப்பது சிறிதும் நியாயமல்ல” என்று இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், “கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவதற்காக தொடக்கம் முதலே முயற்சிகள் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இவ்வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆசிரியர்கள், அதிகாரிகள் என மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ளவர்களும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை தீக்கு பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.” என்று அரசியல் ரீதியாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

94 குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் இன்னும் தீரவில்லை. விபத்தில் உயிர் தப்பி இன்றும் கூட விபத்தின் தழும்புகளுடனும் வலிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் குடும்பத்தினர் கூடுதல் இழப்பீடு கோரி வழக்குகள் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் அவர்கள் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் குற்றம் இழைத்தவர்களுக்கு விடுதலை மட்டும் கிடைத்து விடுகிறது என்று சமூக வலைத் தளங்களில் இந்தத் தீர்ப்பு குறித்து பரவலான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன.

இருப்பினும், இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதை மறுப்பதற்கில்லை!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: