வாஞ்சிநாதன் உட்பட விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார் வ.வே.சு.அய்யர்.
திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்டேச அய்யர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு, 1881-ம் ஆண்டு பிறந்தவர் வ.வே.சு.அய்யர். இவரது முழு பெயர் வரகனேரி வெங்கடேச சுப்ரமணிய அய்யர் என்பதாகும். தனது 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், 1901-ம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார். இவர் திருச்சியில் தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து, சுதந்திரப் போராட்டத்திற்கு வீரர்களைத் தயார்படுத்தும் விதமாக அவர்களுக்கு குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்பித்தார். விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார். அந்த வகையில் வாஞ்சிநாதனுக்கும், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது இவர்தான். புதுச்சேரியில் கரடிக்குப்பம் என்று அழைக்கப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.
கலெக்டர் ஆஷ்துரையை கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி, பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு ஆகும். ஆஷ்துரை கொல்லப்பட்ட பிறகு, புதுச்சேரியில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. எனவே மகாகவி பாரதியார், மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார், வ.வே.சு.அய்யர்.
காந்தி புதுச்சேரிக்கு வருகை தந்தபோது, அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தான் பயன்படுத்திய கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அகிம்சாவாதியாக மாறினார். 14 ஆண்டுகள், தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் சுதந்திரப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வ.வே.சு.அய்யர், 1920-ம் ஆண்டு பொது மன்னிப்பு பெற்று திருச்சியில் உள்ள வரகனேரி இல்லம் வந்தார். 1923-ம் ஆண்டு நெல்லை அருகே சேரன்மாதேவியில் குருகுலம் தொடங்கி மாணவர்களுக்கு கல்வியை புகட்டினார். 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி குருகுல மாணவர்களை உல்லாச பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்றபோது அவரது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற வ.வே.சு. அய்யரும் சுழலில் சிக்கி மரணித்தார். திருச்சி வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, தற்போது கிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.