பெண் சாப தோஷம் போக்கும் பைரவ வழிபாடு!

சிலரது ஜாதகத்தில், பெண் சாப தோஷம் இருக்கும். அந்த சாபம், வெளியிலிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ கூட வந்திருக்கலாம். உதாரணத்துக்கு, சகோதரியிடம் பணம் வாங்கி, சகோதரன் ஏமாற்றுவது, ஒரு பெண்ணை ஏமாற்றி, மற்றொருத்தியை மணமுடிப்பது, திருமணமான பின், காரணமின்றி விவாகரத்து செய்வது, மருமகளை, மாமியார் கொடுமைப்படுத்துவது என, இதுபோல் பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், தங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை சபித்திருப்பர்.

இந்தச் சாபம், அவர்களை மட்டுமல்ல, அவர்களது பரம்பரையையே பாதிக்கும். அவ்வீட்டில் உள்ள பெண்கள் விதவைகளாகி விடவோ, திருமணத்தடை, சொத்துக்கள் கரைதல் மற்றும் அகால மரணம் போன்ற சம்பவங்கள் ஏற்படும். இக்கொடிய சாபத்தில் இருந்து விடுபட, பைரவரை வணங்க வேண்டும். பைரவரின் அவதார நாள், கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமி திதி. இதை, ‘மகாதேவாஷ்டமி மற்றும் பைரவாஷ்டமி’ என்று அழைப்பர்.

‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலில், பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சிவனிடம், இறவா வரம் வேண்டி தவம் இருந்தான் தாருகாசுரன். அவனுக்கு காட்சியளித்த சிவன், ‘உடலுக்கு இறப்புண்டு என்பதே உலகி நியதி; அதனால், உனக்கு இறப்பு யாரால் நிகழ வேண்டும் என்பதை கேள்…’ என்றார்.
பலம் மிக்க தன்னை, ஒரு பெண்ணால் நிச்சயம் அழிக்க முடியாது என்று அகங்காரத்துடன் நினைத்தவன், ‘ஒரு பெண்ணைத் தவிர, வேறு எதனாலும், யாராலும் எனக்கு இறப்பு வரக் கூடாது…’ என்று வரம் பெற்றான்.

சிவனிடம் பெற்ற வரத்தினால், அவன் பல்வேறு அட்டூழியங்களை செய்து வந்ததால், தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். இதனால், சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த பகுதியை எடுத்து, ஒரு சுடரை உருவாக்கினாள் பார்வதி தேவி. அச்சுடர், பெண்ணாக வடிவெடுத்தது. ‘காளம்’ என்ற விஷம் படிந்த அப்பெண்ணுக்கு, ‘காளி’ என பெயர் சூட்டினாள்.

தாருகாசுரன் இருக்கும் திசை நோக்கி கோபத்துடன் திரும்பினாள் காளிதேவி. அவளின் கோபம், கனலாக வடிவெடுத்து, தாருகாசுரனை சுட்டெரித்தது. பின், அக்கனலை, குழந்தையாக மாற்றி, அதற்கு பாலூட்டினாள் காளிதேவி. அதன்பின், சிவபெருமான் காளியையும், அக்குழந்தையையும் தன் உடலுக்குள் புகச் செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டுப் பேரையும் ஒன்றாக்கி, அக்குழந்தைக்கு, ‘பைரவர்’ என்று பெயர் வைத்தார் சிவன்.

பைரவரின் வாகனம் நாய்! சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல் வளர்ப்பர். மற்றும் சிலரோ அதன் மீது கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் வரும் இன்ப – துன்பங்களை சமமாக பாவித்து, இறைவனிடம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன.

அந்த வேதத்தின் வடிவமாக நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, ‘வதஞோளி’ என்ற பெயரும் உண்டு.

தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் இடத்தில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., தூரம் சென்றால், தகட்டூர் கிராமத்தை அடையலாம். இங்கே பைரவரை மூலவராகக் கொண்ட கோவில் உள்ளது. மேலும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் கோவில்கள் உள்ளன. சாபநிவர்த்தி வேண்டுவோர் பைரவருக்கு அபிஷேகம் செய்து, வடை மாலை சாத்த வேண்டும்.

நமக்கு சாபம் கொடுத்த முன்னோர் பற்றிய விவரம் தெரிந்தால், அவர்கள் வயதை ஒத்தவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்.
மகாதேவ அஷ்டமியன்று பைரவரை வணங்கி, சாப நிவர்த்தி பெறுங்கள்.

– தி.செல்லப்பா

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...