குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.
இதோ இந்த குரு பெயர்ச்சி, மீன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
மீன ராசி
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய
65/100
கல்வி மானாகவும் நல்ல ஆடைகளை அணிவதில் விருப்பமுள்ளவராயும், எதிரிகளை அவமானப் படுத்துபவராயும் இருக்கும் மீனராசி அன்பர்களே!
இதுவரை 9ல் இருந்த குருபகவான் இனி ராசிக்கு பத்தில் செல்கிறார். இது அவ்வளவு நல்ல பலனை தராது. ஏற்கனவே சனி கேது பத்தில் இருந்து இடைஞ்சல் கொடுத்திருக்கின்றனர், ராகுவும் 4ல் இருந்து சொத்து போன்ற பிரச்சனைகளை தந்திருப்பார் அவற்றை இதுவரை 9ல் இருந்த குருபகவான் முறியடித்து நல்லது செய்திருப்பார்.
ஆனால் தற்போது முதல் மூன்று மாதங்களுக்கு நிலமை சாதகமில்லை, எதிலும் நிதானம் தேவை, ஜனவரி 23, 2020ல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ல் பெயர்ச்சியாகி நல்லதை அள்ளி தருகிறார் மேலும் ஏப்ரல் மே, ஜூன் இந்த மூன்று மாதங்கள் குருவும் அதிசாரமாய் 11ல் வந்து பலனை அள்ளி தருகிறார். செப்டம்பர் 2020க்கு பின் ராகு பெயர்ச்சியும் நன்மை தரும்.
பொதுவில் நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை கொஞ்சம் கவனமாகவும் எதிலும் நிதானம் பொறுமையை கடைபிடித்து நடந்தால் வீண் விவாதங்களை தவிர்த்தல், பொருளாதார சிக்கலை கடன் வாங்காமல் தவிர்த்தல் போன்றவை நல்ல பலனை தரும்,
ஜனவரி 23,2020க்கு பின் பொருளாதாரம் மேம்படும், புதியவீடு, வாகனம் எல்லம் வரும், திருமணம் தடைபட்டோருக்கு திருமணம் உண்டாகும், எதிலும் ஒரு மகிழ்ச்சி, விருந்து கேளிக்கை என்று செல்லல், புனிதயாத்திரைகள் போகுதல் என்று குரு பெயர்ச்சி முழுவதும் நன்றாகவே இருக்கும்.
கடன்கள் அடையும், உத்யோகத்தில் தொழிலில் ஒரு நல்ல நிலை உண்டாகும், பொதுவில் குரு பெயர்ச்சி முதல் மூன்றுமாதம் கஷ்டம் பின் நல்ல காலம்
உடல் ஆரோக்கியம் :
முதல் 3 மாதம் கொஞ்சம் மன அழுத்தம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரமும் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தும், மருத்துவ செலவுகளை வைக்கும். குடும்ப அங்கத்தினர்களுக்கும் உடல் பாதிப்பை ஏற்படுத்தும், பிப்ரவரி 2020 முதல் நல்ல சூழல், வியாதிகள் குணமாகுதல், மகிழ்ச்சி, ஆரோக்கியம் சீர்படும் வைத்திய செலவு குறையும், சரியான ஆகாரப்பயிற்சியை மேற்கொள்வீர்கள், குடும்பத்தினரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
குடும்பம் மற்றும் உறவுகள் :
ஆரம்பத்தில் கணவன்/மனைவிக்குள் இருக்கும் கருத்துவேறுபாடு அதிகரிக்கும், நெருங்கிய உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபம் உண்டாகும், குடும்பத்தை சிலகாலம் பிரிந்திருக்க நேரிடும். பிப்ரவரி 2020க்கு பின் நெருங்கிய உறவினருடன் இருந்த சண்டை சச்சரவுகள் முற்றிலும் நீங்கி சுமூக உறவு ஏற்படும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் மீண்டும் சேருவீர்கள், உறவினர்களுடன் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகள் மூலம் அனுகூலம் உண்டு உங்கள் வார்த்தைகள் எடுபடும் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கும். பலமான முன்னேற்றம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
முதல் 3 மாதம், வேலை பளு அதிகரிக்கும், விரும்பாத இடமாற்றம், சிலர் வேலையை விடும் கட்டாயத்தில் இருந்திருக்கலாம். வேலை சிலருக்குப் பறிபோயிருக்கும். பிப்ரவரி 2020க்கு பின் நல்ல சூழல், வேலையில் உற்சாகம், வேலை மாற விரும்புவோருக்கு ஏற்ற காலம் இது. புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும், வெளிநாட்டில் குடிபுக விரும்புவோருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் பணிச்சுமை குறைவு, வேலையில் உத்வேகம் உத்ஸாகம் எல்லாம் இருக்கும். கடன் வாங்கி இருந்தால் இந்தவருடம் அதை அடைப்பீர்கள் உத்தியோகத்தினால் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும்.
தொழிலதிபர்கள் /வியாபாரிகள் :
நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை கணக்கு வழக்குகளில் கவனமாய் இருத்தல் நல்லது, எதிரி தொல்லை இருக்கும், அரசாங்க தொந்தரவு இருக்கும், புதிய முயற்சிகள் கை கொடுக்காது, பிப்ரவரி 2020 முதல் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய வர்த்தகம் கை கொடுக்கும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அரசாங்க அனுகூலமும் நன்றாக இருக்கும். இதுவரை இருந்துவந்த எதிரிகள் மறைவர், புகழ் செல்வாக்கு உயரும், வருமானம் இரட்டிப்பாகும். தொழிலை விஸ்தரிக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
கலைஞர்கள் :
பரவாயில்லை என்று சொல்லும்படியான குருபெயர்ச்சி, புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும், வருமானம் அதிகரிக்கும், ரசிகர்கள் செல்வாக்கு கூடும். கடன் தொல்லை மறையும், இழந்த புகழ் மீண்டும் கிடைக்கும், விருந்து கேளிக்கை என்று மனம் லயிக்கும், வருகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவீர்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அரசியல்வாதிகள் :
பிப்ரவரி 2020க்கு பின் புதிய பதவி தேடிவரும், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும், தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்படுவர், பணம் பலவழிகளிலும் வரும், மக்களிடம் நல்ல பெயர் இருக்கும். எதிரிகள் மறைவர். தர்மங்களை செய்வது மேலும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.
விவசாயிகள் :
பயிர் விளைச்சலில் அதிக மகசூல் உண்டாகும், கால்நடையின் மூலமும் வருமானம் பெருகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும் புதிய நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மானாவாரி பயிர்களும் நல்ல பலனை தரும்,இல்லத்தில் சுப நிகழ்வுகளாம் மகிழ்ச்சி உண்டாகும் சக விவசாயிகளிடமும் அனுகூலமான நிலை ஏற்படும்.
மாணவர்கள் :
புதன் சஞ்சாரத்தால் அதிக அக்கறை கொண்டு படிப்பார்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்களிடத்தில் பாராட்டை பெறுவார்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டு படிப்பை விரும்புவர்களுக்கு அது ஈடேறும். உயர் படிப்பில் முன்னேற்றம் இருக்கும்
பெண்கள் :
மகிழ்ச்சியான பெயர்ச்சி, குடும்பம் நல்ல முன்னேற்றம் அடையும், கணவன் மனைவிக்குள் அந்யோந்யம் அதிகம் இருக்கும், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பெருகும். ஆடை ஆபரண சேர்க்கை சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும், பிள்ளைகளால் பெருமையும் புனித யாத்திரைகளும் இருக்கும், திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும், சிலருக்கு குழந்தை பாக்கியமும் இருக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வேலையில் நல்ல நிலை ஏற்படும் பிடித்தமான உத்தியோகம் கிடைக்கும். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு அரசாங்க அனுகூலமும் வங்கி கடன் உதவிகளும் கிடைத்து தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர வகையில் சாதகமான நிலை உண்டாகும்.
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரை வழிபடுங்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுங்கள். நெய் விளக்கேற்றுங்கள். முடிந்தவரை பெருமாளுக்குப் பிரசாதம் ஆராதனம் செய்து ஏழை எளியோருக்கு அதைக் கொடுங்கள். உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்.
குறிப்பு :-
இதுவரை 12 ராசிகளுக்குமாக மேற்சொன்ன பலன்கள்
பொதுவானவை. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் இருக்கும் ஜோதிடரிடம் காட்டி குருவின்
நிலை, சனி, ராகு,கேதுக்களின் நிலையையும் அறிந்து உங்கள் சரியான பலன்களை பெறுவதே உத்தமம் ஆகும். மேலும் பரிகாரம் என்பது பிரம்மாண்டமாகப்
பூஜைகள் ஹோமங்கள் செய்வது, ஷேத்திராடனம் செல்வது மட்டுமே என்று எண்ண வேண்டாம்.
தங்களால் முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி தானம்,
வறிய பெண்களுக்கு மாங்கல்ய தானம், முதியோர்களுக்கு சரீர ஒத்தாசை ஆகியவற்றைச் செய்தலும் நற்பலன் தருபவை ஆகும்.
சர்வே ஜனோ சுகினோ பவந்து:
குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம் FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808 Skype / Whats app : 8056207965 Email.: [email protected] Contact Timings for fixing appointment – 6 AM to 8 AM & 8.30 PM to 10 PM