- Ads -
Home ஜோதிடம் நியூமராலஜி நியூமராலஜி: 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

3, 12, 21, 30ஆம் எண்ணுக்கான பொதுப் பலன்:-

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 1

குரு பகவானுடன் சூரியன் சேர்ந்து தரும் பலன் இவர்களுக்கு. இவ்வெண் கொண்டவர் சற்று உயரமான தோற்றமும், அடர்த்தியான புருவமும் கொண்டவராக இருப்பர். வட்ட வடிவ முக அமைப்பையும், முடி கருமையாகவும் சாய்ந்து நடப்பவராக இருப்பர்.

சாத்திரம், சட்டங்களை மீறாதவர். தாம் செய்ய வேண்டிய காரியங்களை கவணமுடன் செய்து முடிப்பவர். குடும்பத்தில் அதிக பாசம் கொண்டவராக இருப்பர். அடக்கி ஆளும் தன்னையும், கண்டிப்பாகவும் இருக்கும் குணம் கொண்டவர். தம் பேச்சில் அனைவரையும் கவர வேண்டும் என்று என்னுபவர்.

இவருக்கு இரக்ககுணம் குறைவாகவே இருக்கும். சிக்கனம் எனும் பெயரில் கஞ்சத்தனம் சற்று அதிகமாகவே இருக்கும். தெய்வ பக்தி கொண்டவர். மனமாரத் தவறுச் செய்ய தயங்குபவர். சிறு வயதிலேயே நலமான வாழ்க்கையமையப் பெறுவார்.

மிகச் சிறிய வயதிலேயே திருமணம் யோகம் இவருக்கு உள்ளது. மனமொத்த துணையை அடைவார். செய்யும் தொழிலின் மூலம் நல்ல பணவரவு உண்டாவதுடன், சொத்து, வீடு, வாசல், வாகனம் ஆகியவை மனம்போல் இவருக்கு அமையும். முதலில் சாதாரணமாகத் தொடங்கும் வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகு மேலும் பண வசதி பெற்று ஓங்கும். நல்ல வாரிசு  உண்டாகும்.

கல்வியில் சிறந்து விளங்கும் இவர் அரசுப் பணிகளில் அமர்வார். அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்வர். ஆசிரியர், பேராசிரியர், தனியார் நிறுவனங்களில் பெரிய அதிகாரிகள் பதவி பெறுவர். அக்னி தொடர்பான பொன், இரும்புத் தொடர்பான வேலை செய்வர். அறக்கட்டளை, கருவூலம், போக்குவரத்துத்துறை போன்ற பணிகளில் ஈடுபடுவர். பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் சிறந்தவர்.

வெப்பமான உடல் என்பதால் வெப்பம் சார்ந்த நோய்கள் உண்டாகும். கண்களில் கோளாறு, தோல் வியதி, அசிடிடி, மூலம், பித்தத் தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 2

இவ்வெண் கொண்டவர் குருவுடன் சந்திரன் இணைந்த பலன் தரும். சராசரி உயரம் கொண்டவராகவும் மஞ்சள் நிற தோற்றமும் கொண்டவர். அடந்த முடியும் புருவம் சற்று மேலே தூக்கியும் காணப்படும். இவர் அழகான வடிவமும் மதிக்கத் தக்கதாகக் கவர்ச்சியான கண்களும் இருக்கும்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்.  அனைவரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சட்ட திட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பார். பல மகான்களைத் தரிசிப்பர். பல புண்ணியத் தலங்களைச் சுற்றுவர்.

அமைதியை விரும்புவர். பொருத்தமான காரணமிருந்தால் சரியான சமயத்தில் கோபப்படுவர். சாப்பாடும், தூக்கமும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிக்கனக்காரரான இவர்கள் நன்கு உழைப்பர். சகிப்பு தன்மை கொண்டவர்.

காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவார். மனத்திற்கு பிடித்த இல்லரத்தில் நுழைவர். இதேபோலச் செய்தொழிலிலும் வெற்றி பெறுவர். அதிஷ்டம்  வந்து சேரும். காதலின்றியே மணம் புரிந்து கொண்டாலும் மனைவியை மிகவும் நேசிப்பவர். முதலில் சாதாரணமாக குடும்பம் நடத்தினாலும் பிறகு மேன்மை பெற்றிடும். இவர்களின் பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகச் செல்லும்.

எழுத்து , இசை, ஆன்மிகம், அரசியல், கவிதை, கட்டுரை, நாடகம் என விரும்பி ஈடுபடுவர். ஆனாலும் ஆசிரியராக, கணக்கராக குமாஸ்தாவாக, சாதாரணமாகவே ஒரு மாதச் சம்பள வேலையாக அரசாங்க அல்லது தனிமனிதர் நிறுவன அலுவலகங்களில் தொடங்கும். குரு திறமையையும், சந்திரன் அதிஷ்டமும் இவர்களுக்கு உண்டாகும்.

கண் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், அசிடிடி, அல்சர் போன்ற பித்த நோய்கள், தோல் நோய்கள் ஏற்படலாம். தொண்டையில் கோளாறு எப்போதும் இருக்கும்.

 

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 3

குருவுடன் குரு சேர்ந்த ஆதிக்கமுடையவர். இவர்கள் நல்ல உயரமும், உடல் சற்று பருமனாகவும் இருக்கும். கண்களில் அறிவு தீக்ஷணியம் இருக்கும். சிறு வயதிலேயே பெரியவர் போல் இருப்பர்.

மிகவும் ஒழுங்காக குடும்ப வழக்கப்படி பரம்பரை ஆச்சாரத்தை விடாமல் வாழுவர். பண்பான செயல்களைச் செய்வர். நன்கு கல்வி கற்பர். தூய ஆடையுடன் நல்ல மங்களகரமான பேச்சுடன் இருப்பர். தெய்வ பத்தி அதிகம் கொண்டவர்.

பொது நலம் நாடிப் பொது வேலைகளில் ஈடுபட்டாலும் தன் நலம் நாடி அடைவர். புகழ்த் தாகம் தணியாது. பிறந்த எண்களிரண்டும் 3 ஆகவே பெயர் எண்படி உள்ள பலனையும் அறிந்து தக்கபடி இணைத்துப் பார்த்துக் கெள்ளவும். 1 அல்லது 4 வந்தால் மிகவும் அதிஷ்டமாக அமையும்.

கவர்ச்சி மிக்க இவர்களுக்கு நல்ல துணை அமையும். உழைத்து மேலும் மேலும் முன்னேறுவர். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கும் திறமை உள்ளவர். குடும்ப வாழ்க்கை ஆறுதல் தரும். நீண்ட சகல போகங்களுடன் வாழ்வார்.

அநேகமாக ஆரம்பத்தில் இவர்கள் சாதாரணமாகவே வாழ்க்கையைத் தொடங்குவர். பேச்சில் சிறந்து விளங்குவதால் புகழும் பொருளும் பெறுவர். நடிகராகி முதலிடத்தைப் பிடிப்பதும் உண்டு. ஆசிரியர்களாக இருப்பர். அரசு அலுவலகம், தனியார் நிதி நிறுவனம், பாங்குகள் முதலியவற்றிலிருப்பர்.

ரத்தம், சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும். நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், மனச்சிதைவு ஏற்படலாம். காரணம் அதீதக் கோபமும், மிகவும் பிற உணர்ச்சிவசப்படுவர். உடலில் நீர் அதிகம் சேரலாம். உடற்பயிற்சி, நல்லுணவு நோய்களைத் தவிர்ப்பன.

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 4

இவ்வெண் கொண்டவர் குருவும் ராகுவும் சேர்ந்து ஆதிக்கமுடையவர்கள் நீங்கள். அலையலையான தலைமுடியும், அலைபாயும் கண்களும் சற்று உடல் பருத்தும் காணப்படுவர். நிறம் சற்று கருப்பாக இருக்கும்.

சகிப்புத்தன்மை உள்ளவர். உடலில் வரும் துன்பங்களை தாங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். சகோதர, சகோரிகளுடன் நல்ல தெய்வ நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அருமையாகப் பேசும் சாமர்த்தியமும், நல்ல குரல் வளமும் இவருக்கு அமைந்திருக்கும். சூழ்நிலைக்கேற்ப தன் குணத்தை மாற்றிக் கொள்பவர்.

கணிதத்தில் திறமை உடையவர். நகைச்சுவையாகப் பேசி பழகுபவர். இவரிடம் பேசுவதற்கு அனைவரும் விரும்புவர். நல்லனவற்றில் மனம் செலுத்துவர். தம் மதத்தில் அசைக்க முடியாத பற்றுக் கொண்டிருப்பர். உறுதியான தெய்வ பக்தி இருக்கும். ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர். சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்வார். திடீர் திடீர் என நிகழ்ச்சிகள், நல்லதும், கெட்டதுமாக இவர் வாழ்வில் நிகழும்.

3ன் பலம் அதிகமிருப்பவர் கெட்ட பழக்கமில்லாதவராக இருப்பர். யோக வேதாந்தத்திற்கே அர்ப்பணமாக நடப்பர். 4ன் பலம் அதிகமானால் சில கெட்ட பழக்கம் இருக்கும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவே பணம் சம்பாத்திப்பவராக இருப்பார்கள். திடீர் அதிஷ்டம் உண்டாகும். மனமொத்த வாழ்க்கை துணை அமையும். பிள்ளைகளால் பிற்பகுதி வாழ்க்கை மேன்மையுறும்.

குமாஸ்தா வேலை, அரசு, தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்பர். தொழிற்சாலை, அச்சு, போக்குவரத்து, பத்திரிகை, சினிமா, சர்க்கஸ் இவையெல்லாம் இவர்களுக்கு பொருத்தமானது. ஆசிரியராகவும், உடற்பயிற்சி தரும் ஆசிரியராகவும் இருப்பர்.

இவர்களுக்கு ஈரலில் கோளாறு ஏற்படலாம். பித்தத் தலை வலியும், கபத் தொல்லையும் எப்போதும் உண்டு. தொண்டையில் கோளாறு இருக்கும். தோல் தொடர்பான நோய்கள் மற்றும் வாயுத்தொல்லைகளுக்கு ஆட்படலாம்.

 

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 5

இவ்வெண் கொண்டவர் குரு பகவானுடன் புதன் இணைந்த பலன் உடையவர். உயரமாகவும், ஒல்லியாகவும் சிவந்த நிறமும் கொண்டவராக இருப்பர். தலைமுடி செம்பட்டை நிறம் இலேசாகக் கலந்து இருக்கும்.

இவருக்கு நுட்பமான அறிவும், விஞ்ஞானத்தில் விருப்பமும் உடையவராக இருப்பர். கணக்கியல், கணினியியல் பற்றிய அறிவை எளிதாகப் பெறுவர். சோதிடம், வானியல், நாகரிகம், நவீன செய்திகளை அறிந்து வைத்திருப்பர். மந்திர ஜெயம், தவம், தியானங்களைப் பயிலுவதில் ஆசையுள்ளவர். தம் கருத்துக்களை மற்றவர்களிடம் வெளிபடுத்த வேண்டும் என்று நினைப்பவர். சிந்தனைத் தெளிவும் சீக்கிரமே அடைவர். வயதாக ஆக இளமை கூடும்.

நண்பர்கள் சூழலும், அரட்டைக் கச்சேரியும் இவருக்கு பிடித்தம். வேலை இல்லாமல் சும்மா இவர்களால் இருக்கவே முடியாது. இவருடன் போட்டி போட்டு யாரும் எளிதில் வெல்ல முடியாது. சாத்திரம் சம்பிரதாயமெனில் தட்ட மாட்டார். பிறருக்கு அப்புறம் தோன்றும் கருத்து இவர்களுக்கு முன்னதாகவே தோன்றி விடும். ஒரு செயலை உடன்குடன் நினைத்து செயல்படும் குணம் கொண்டவர்.

இவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். பல கலைகள் அறிந்தவராக இருப்பார். புதன் கிரகமானதால் சபல புத்தி தோன்றும்.  குடும்ப வாழ்க்கையில் விரக்கி இருந்தாலும் பிற்பகுதி சுமாரக இருக்கும்.

வக்கீல், நடிகர், பத்திரிக்கை, எழுத்தாளர், பதிப்பக முதலாளி, புரோகிதர், ஜோதிடர், முதலிய வேலை அல்லது பதவிகளில் இருப்பார். மைய அரசு அல்லது மாநில அரசுப் பணிகளில் இருப்பவர் கூட, டெலிபோன், தந்தி, தபால் துறையிலும், கல்வித் துறையிலும் இருப்பர்.

இவர்கள் மிக அதிகப் பரபரப்பும், சுறுசுறுப்பும் உள்ளவராகையால் நரம்புத் தளர்வு இருக்கும். தோல் நோய், உயர் அழுத்தம், சர்க்கரை நோய் தாக்கக்கூடும்.

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 6

குருவுடன் சுக்கிரன் இணைந்து தரும் பலனைப் பெற்றிடுவர். உயரமாகவும், அழகாவும், சதைபிடித்த மேனியுடன் கம்பீரம் விளங்கத் தோன்றுவர். மிகச் சிலரே குட்டையாக காணப்படுவர். காரணம் சந்திரனோ, சனியோ ஆகும்.

இவர்கள் சாத்திரம், கலையறியுள்ள குடும்பத்தில் பிறந்திருப்பர். கல்வி நன்றாக அமையும். சிலருக்கு தடைபடவும் வாய்ப்புள்ளது. கலை ஞானமும், சொந்த அறிவும் இருக்கும். சுயமாக நிறையப் படிப்பார். அவர்கள் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடகினாலும் மிகப் பெரிய நிலையை அடைந்திருவர். பேச்சு ஆற்றல் மிக்கவர்.

பிறரைப்பேசிக் குழப்பி விடுவர். சிரித்தபடியே தம் காரியத்தை சாதிக்கும் சாமார்த்தியம் கொண்டவர். உழைக்க பலவகையில் பொருள் சேர உதவும். தமக்கு ஏற்படும் தோல்விகளை எதிளில் மறைத்துவிடுவார். தற்பெருமை, கண்மூத்தனமான சுகநாட்டம், தந்திர மிக்கவரானாலும் தப்பாகப் பேசி மாட்டிக் கொள்ளவர்.

கலையும், கலை சார்ந்த தொழிலும் இவருக்கு மிகப் பொருத்தமாகும். எழுத்தால், பேச்சால் பிழைக்க முடியும். எதையும் எவ்வளவு ஆற்றலிருப்பினும் முழுமையாகச் செய்யவிடாது இவர்தம் போக நாட்டம், புகழ்நாட்டம் தடை செய்யும்.

இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து பெரிய குடும்பமாகவே வாழுவர். இவர் குடும்பத்தார் இவரால் எல்லா வசதியும் பெற்று உயர்ந்திடுவார். கடைசிவரை சுகானுபவமும் வசதிமிக்க வாழ்வும் ஆக வாழ்வார்.

கால்கள் வலுவிழக்கும். சிறுநீரகக் கோளாறு, வாயுத் தொல்லை, தோல் வியாதி, குறைந்த இரத்த அழுத்தம், கண் கோளாறு,  இதயக்கோளாறு, சர்க்கரை நோய், செரியாமை ஆகிய நோய்கள் வரும்.

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 7

இவ்வெண் கொண்டவர்கள் குருவுடன் கேது இணைந்த ஆதிக்கப் பலன் உண்டாகும். இவர்களுக்கு முடி அதிகமாகவும் அழகாவும் இருப்பர். சதையற்ற முகமும், ஒல்லியான உடல் வாகும் உறுதியுடனும் காணப்படுவர்.

கண்ணியமாக நடந்துக் கொள்வர். இவர் எந்த செயலையும் அச்சமற்று செய்யும் குணம் கொண்டவர். பிறர் பாதிக்கப்படாதிருக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர். தன்மானம் மிக்க இவர் தம் கருத்தோடு மாறுபட்டால் அவசியமானால் கடைசி வரை போராடாமல் விட மாட்டார். குழப்பம், சந்தேகம் இல்லாமல் எதையும் தெளிவுடன் செய்யும் ஆற்றல் கொண்டவர்.

குரு அருளால் சிறிய வயதிலேயே ஒழுக்கமும், நல்ல குடும்ப வாழ்க்கையும் இருக்கும். காதல் இவருக்கு ஒத்து வராது. பிறரை எக்காரணத்தைக் கொண்டும் மட்டந்தட்ட மாட்டார். மன உற்சாகம் இருக்கும்போது நிறையப் பேசும் இவர்கள் சோர்ந்து போனால் மௌனமாக இருந்து விடுவர். நண்பர்கள் இவருக்கு குறைவாகத் தான் இருப்பார்கள்.

முன் வாழ்க்கை வசதியாக இருந்ததுபோல பிற்பகுதி வாழ்க்கை வசதியாக அமையாது. வறுமையுடன் நோய்களும் படுத்தும். மண வாழ்வில் தடை, சோகம் ஏற்படும்.

தொழிலில் தேக்கம், பணி நீக்கம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியைவிடத் துக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். சிறு வருமானத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியவராவர். இவருக்கு அபாரமான எழுத்துத் திறமை இருக்கும். சொந்தத் தொழில் புரிவர். உண்மையை அப்பட்டமாகப் பேசி முன்னுக்கும் வர முடியாமல், கர்மாவை தொலைக்கவும் முடியாமல் அவதிக்குள்ளாவர்.

வெப்பம் மிகுந்தும், சர்க்கரை, மூல நோய்கள் போன்ற வியதிகளில் அவதிப்படுவர். வாயுத்தொல்லை, தோல் வியாதி, அடிமுதுகு வலி, வாத ஜுரம் ஆகியவை உண்டாகும்.

 

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 8

இவர்கள் குருவுடன் சனியும் கூடிய பலன் கிடைக்கும். சாதாரணமான உயரமும், உறுதியான உடலும், கட்டான மேனியமைப்பும் இருக்கும். கருமையான முடியும், பழுப்பு நிற மேனியும் கொண்டவராக இருப்பர்.

கல்வி பெறுவதில் தடை உண்டாகும். உடற்பயிற்சில் அதிக நாட்டம் செலுத்துவர். கற்றது குறைவாக இருந்தாலும் அதிகம் தெரிந்தவர் போல் நடந்து கொள்ளும் குணம் கொண்டவர். விட்டுக் கொடுத்துப் போக இவருக்கு தெரியாது. சுறுசுறுப்பும் சோம்பேறித்தனமும் மாறி மாறி இவரை ஆட்கொள்ளும்.

அரசியல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டால் பிரபலமடைவர். பிறர் பசி பொறுக்கமாட்டார். நட்பிற்கு அடிமையாவார். நன்கு உழைத்தாலும் வருமானம் குறைவாகவே கிடைக்கும். எப்படியாவது பணம் புரட்டிச் செலவு செய்வர். அடிக்கடி விபத்துக்களைச் சந்திப்பர். தலையில் காயம் ஏற்படும், மனத்திற்குப் பிடித்தவருக்காக எதையும் செய்வார். தேசப் பற்றுடன் போராடினால் தியாகியாகப் புகழ் பெறலாம்.

சிறு வயதில் காதலில் ஈடுபட்டுக் கலாட்டாக் கல்யாணம் செய்வார். ஆனாலும் திருமணம் சரிப்பட்டு வராது. தந்தையை இழந்து சுயமாக பிழைப்பர். தாய்மேல் அதிகம் பாசம் கொண்டவராக இருப்பர். இவருடன் பழகுபவர்கள் கூட இவருக்கு துரோகம் செய்வர். பிற்கால வாழ்க்கை சற்று நிம்மதியாக வாழுவார்.

தொழிற்படிப்பில் பட்டமோ, டிப்ளமாவோ வாங்கியிருப்பர். விளையாட்டு ஆசிரியராகவோ, உடற்பயிற்சி ஆசிரியராகவோ இருப்பர். வண்டி, வாகனத் தரகர், ஓட்டுநர் வேலை பார்ப்பர். அரசியலில் பேச்சாளராக இருப்பர். சாதாரணமாக சிறு தொழில் நடத்துபவராக இருக்கலாம்.

அடிக்கடி விபத்தைச் சந்திப்பர். காயங்கள் ஏற்படும். வயிறு மிகப் பலவீனமானது. வயிற்றுக் கடுப்பு, தலைவலி, கண் கோளாறு, போன்ற நோய்களுக்கு ஆட்படலாம். அஜீரணம், பித்த வாந்தி, அசிடிடி, தோல் நோய்இ வாதக் கோளாறு, கை, கால் வலிகள் வரும்.

 

பிறந்த எண் 3-ல் கூட்டு எண் 9

இவ்வெண் கொண்டவர் குருவுடன் செவ்வாய் சேரும் ஆதிக்கப்பலன். உயரம் சற்று அதிகமாகவும் உடல் பலத்துடன் இருக்கும். கை,கால் பருமனாக இருக்கும். அடர்ந்த புருவம், இமைகள் தடித்தும் இருக்கும்.

தந்திரமும், அறிவும் மிக்க இவர்கள் ஆத்திரமும், கோபமும் சற்று அதிகமாகவே இருக்கும். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். ஆன்மிகம் தெரிந்த பெரியவர்களிடம் வந்து தெய்வ சங்கதிகளைத் தெரிந்து கொண்டு பூஜைகளில் இறங்குவார். பிறர் மனதை எடைபோட்டு ஆளை அறியக்கூடிய இவர்கள் வந்த சண்டை சச்சரவை விட மாடார்கள்.

கல்வி, கலைகளில் ஈடுபாடுள்ளவர். மிகத் தைரியமாக ஆபத்தான வேலைகளிலும் தலை கொடுப்பார்கள். பிறருக்கு அடங்கி வாழமாட்டார். நன்கு சிந்தித்துத்தான் எதிலும் ஈடுபடுவார். குடும்பப் பொறுப்பும், பாசமும் உள்ள இவர்கள் குடும்பத்தை விரும்பி நடத்துவார். தம் பாசத்தை நேரிடையாகக் காட்டிக் கொள்ள மாட்டார். இவருக்கு வழ்க்கை துணை நன்றாக அமையும். பிறந்த இடம் விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்வார்.

தொழில்கள் அனைத்தும் இவர்களுக்குப் பொருத்தமானவை. இராணுவத்தில் ஆசிரியர், போலீஸ் பயிற்சியாளர், உளவாளி, விளையாட்டு வீரர், சாகசத்கதை, புரட்சிக் கவிதை எழுதுபவர். கட்டட வேலை போன்ற கடும் உழைப்பு தேவைப்படக் கூடிய தொழில் புரிவார்.

இவர்கள் காய்ச்சல், அசிடிடி, வயிற்று வலி, அம்மை, தோல் நோய்கள் போன்றவற்றை தாக்கக்கூடும். ரத்த சோகை ஏற்படும். விபத்து, காயங்கள், மின்சார விபத்துக்கள் நேராமலும் கவனமாக இருக்க வேண்டும். பல், கண், காது கோளாறுகள் ஏற்படும்.

பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version