- Ads -
Home ஜோதிடம் நியூமராலஜி நியூமராலஜி: 5ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 5ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 5ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

5, 14, 23ஆம் எண்ணுக்கான பொதுப் பலன்:-

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 1

இவ்வெண் கொண்டவர்கள் புதனுடன் இணைந்து ஆதிக்கப்பலன் ஏற்படும். சற்று உயரமாகவும் சிவந்த நிறமும் உடையவர்களாக இருப்பர். இவருக்கு முடி மென்மையாக நீளமாகக் கருமையுடன் இருக்கும். மலர்ச்சியுடன் சிரித்த முகத்துடன் தோற்றமிருக்கும்.

இவர் அறிவாளியாக இருப்பர், நியாயத்தை மீறி நடக்காதவர். சாத்திரங்களுக்குக் கட்டுப்பட்டே செயல்படுவர். எதையும் புதிய முறையில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அடக்கி ஆளவும், பிறரைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறவும் எப்போதும் ஆனந்தமாக இருக்கவும் விரும்புவர்.

மிகவும் பரபபரப்பாக செயல்படும் குணம் கொண்டவர். வேலையின்றி இவர்களால் இருக்கவே முடியாது. சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவர். பெரியவர்களிடம் மரியாதை, தெய்வ பக்தி கொண்டவராக இருப்பார். வாழ்நாள் போக போக பிடிவாதமும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படும் குணமும் உண்டாகும்.

பெற்றோர் ஆதரவை எதிர்பார்த்திருக்க மாட்டாரை. சுயமாக வேலையில் சேர்ந்து உழைப்பார். நண்பர்களின் உதவி கிடைக்கும். காதல் புரிவர். குடும்ப வாழ்க்கை நீட்டிப்பது கடினமே. பிற்பகுதி வாழ்க்கை கொஞ்சம் அமைதியாகப் போகும்.

தொழிற்சாலைகளில், அரசாங்க அலுவலகங்களில் அதிகாரிகளாக இருப்பர். ஆனாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார். இயந்திரங்கள் தொடர்பான உற்பத்தி, விற்பனை இடங்களில் பணி புரிவார். பதிப்பகம், வங்கி, நிதி நிறுவனங்களில் இருப்பார்.

வயிறு பாதிப்புறும், கபத்தாலும், பித்தத்தாலும் வரும் நோய்கள் தாக்கும். சிலருக்கு குடி பழக்கம் உண்டாகும். பிற்பகுதி வாழ்வில் சர்க்கரை நோய் பாதிக்கும். இறுதிவரை சுறுசுறுப்புடன் இருப்பார்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 2

இவருக்கு புதனுடன் சந்திரன் இணைந்து தரும் ஆதிக்கப்பலன் உண்டாகும். சராசரி உயரத்துடன் பார்ப்பதற்கு குட்டையாகவே தோற்றமளிப்பர். சிவப்பாகவும், அழகாகவும் இருப்பர். இவர்களுக்கு பெரிய காந்தக் கண்கள் ஒளியுடன் இருக்கும். கள்ளங் கபடமற்ற தோற்றத்துடன் குழந்தை போல இருப்பர்.

கற்பனை வளமும், அறிவும், சுறுசுறுப்பும் இருப்பவர்களாக இருப்பார். வாக்கு வன்மை, எழுத்து வன்மை, நகைச்சுவையுணர்வு, உலக அறிவும் தழுவிய மனித நேயமும் உள்ளவர். தன்னம்பிக்கை மன உறுதியை விடமாட்டார். ஆனால் ஊக்கமும், மனத் தளர்ச்சியும் மாறி மாறி அமையும்.

பிறரை எளிதில் நம்பி விட மாட்டார். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்க டென்ஷனை அடைவார். காரிய வெற்றியே இவர்களுக்கு டானிக். இவர்கள் கணித்துக் கூறும் முடிவுகள் சரியாகவே இருக்கும். பண ஆசை இவர்களுக்கு அதிகம் இருக்காது. சிலரது பழக்கத்தில் பெண்மை தெரியும். வீடு, அலுவலகம் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவர்.

இவர்களுக்கு இளம் வயதிலேயே அதிர்ஷ்டம் அடிக்கும். கொஞ்சமாவது பூர்விகச் சொத்து இருக்கும். ஆனால் படித்துப் பட்டம் பெற்றுவிடும் இவர்கள் நன்றாகச் சம்பாதித்து விடுவர். இவருக்கு அமையும் துணை நல்லதாகவே அமையும் பெற்றோர்கள் பார்த்துபடி திருமணம் வாழ்க்கை அமையும். எளிதில் எதிலும் இவர்கள் மன நிறைவே அடையமாட்டார்.

நகைச்சுவை நடிகர், வக்கீல், நாடக ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பக முதலாளி எனப் பல முகங்களில் பிரபலமாகிப் புகழ் பெறக் கூடியவர்கள் இவர்கள். புத்தகம் படிக்கும் பழக்கமும், நுண்ணறிவும் இவர்களுக்கு இருப்பதுடன் கற்பனைச் சக்தியும் இருப்பவராவர். டாக்டராகவும், சட்ட வல்லுநராகவும் புகழ் பெறுவர். சொந்த தொழிலுக்கு முதலுடன் கூட்டாளி அமைவர்.

நீர் தொடர்பான நோய் உண்டாகும். ஆஸ்த்துமா, சளி, வயிற்றுப் பிரச்னை, நரம்புத் தளர்வு, இலேசான மனக் கோளாறு போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 3

இவ்வெண் கொண்டவர்கள் புதனும், குருவும் இணைந்து தரும் ஆதிக்கம் உடைவர்கள். நல்ல உயரமும், செந்நிறமும் அழகும் கொண்ட கவர்ச்சிகரமான தோற்றத்துடன் இருப்பர். இவருக்கு மேல் நெற்றி சிறிது கூராக இருக்கும். மூக்கு நீண்டு எடுப்பாக அமைந்திருக்கும். மரியாதைக்குறிய மங்கலமான மனிதராகக் காணப்படுவார்.

இவர்கள் அமைதியை விரும்பும் பொறுமைசாலிகள். துன்பங்களைச் சகித்துக் கொள்பவர்கள். அத்துடன் நல்ல அறிவாளிகள். நுண்ணறிவும், சாத்திர அறிவும் உடையவர். வெறும் அரட்டையத்துப் பலருடன் கூடி பொழுது கழித்துப் பிரியும் மனிதராக இல்லாமல் நோக்கம், அதை அடையத்திட்டம், அதற்கேற்ற செயல்பாடு என்றிருப்பர்.

தகவல்கள் நிறைந்ததாக இவருடைய பேச்சு இருக்கும். மகிழ்வாகப் புதுப்புது சங்கதிகளைப் பொறுமையுடன் விளக்குவர். பிறர் மனம் புண்படும்படி செயல்பட மாட்டார். காரணத்தோடு பக்குவமாகப் பேசி நடப்பர். திறந்த புத்தகம் போல இருப்பர். ஓரளவு சுயநலம் உள்ளவராவர்.

குடும்பப் பாசம், தொழிலாசை உடையவர். தவறு என பிறரிடம் ஏதாவது பட்டால் நேரடியாகக் கேட்டு விளக்கம் பெறுவர். வயதானாலும் சுறுசுறுப்போடு இருப்பார். திருமணம் தடையின்றி நடக்கும். நல்ல பெண் மனைவியாக அமைவாள். நல்ல வாரிசு சிறிது தாமதமாக உண்டாகும்.

இவர்கள் முதலில் கிடைக்கும் தொழிலில் அமர்வர். பள்ளி ஆசிரியர், கணக்கர் என அமர்வர். புதியவற்றைக் கண்டுப்பிடிப்பவராக, பத்திரிக்கை ஆசிரியராக, பதிப்பகத்தாராக, டிரவல்ஸ் நடத்துபவராக, நாடகம், கதை, கட்டுரை எழுபவராக இருப்பர். ஜோதிடராக  (குறிப்பாக நாடி சோதிடம்) பார்ப்பவராக இருப்பர். சிலர், தொழிற்கூடங்களில், அரசுப் பதவிகளில், தனியார் அலுவலக அதிகாரிகளாக இருக்கக் காணலாம்.

நரம்புத்தளர்ச்சி இவர்களுக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தம், கண் கோளாறு, வயிற்றுச் சிக்கல், மூலம், கபம், பித்தம் தொடர்பான நோய்கள் தாக்கக்கூடும். காது கொஞ்சம் மந்தமாகக் கேட்கும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 4

சுருட்டைத் தலைமுடியுடன் மிக உயரமாக இருப்பர். மேலும் உயரத்திற்கு ஏற்ப உடல் பருமனுடன் பெரிய தோற்றமுடன் அழகாக இருப்பர். மாநிறமாகவும், அழகாகவும் இருப்பர்.

அறிவும் விளையாட்டுப் புத்தியும் இருக்கும். சுறுசுறுப்பும், குறும்புத்தனமும் அதிகமாகவே இருக்கும். நன்கு பேசி எவரிடமும் பழகி நகைச்சுவையாகப் பேசுவர். நல்ல கணீரென குரல் ஆளை நடுங்கச் செய்வது போல இருக்கும். பலகுரல் மன்னராகப் பல பிரபல ஆசாமிகள் போலவே பேசுவர். இவர்களிடம் சவால் விட்டு எதிலும் எவராலும வெல்ல முடியாது.

ஒளிவு மறைவாய் இருக்கத் தெரியாது. துணிவுடன் பேசி தொல்லைகளை வளர்த்துக் கொள்வர். சில தீயவர் சேர்க்கையும் கெட்ட பழக்கமும் இவர்களுக்கு உண்டாகும். தொழிலாகவோ, பொழுது போக்காகவோ எதையாவது செய்துக் கொண்டே இருப்பர். மனித நேயம் உள்ளவர்.

இளவயதில் காதலிப்பர். இவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் மயங்கி விடுவர். திருமணத்திற்குப் பிறகு சிறந்த குடும்பத் தலைவராக இருப்பர். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். நல்ல வாரிசுகளும் உண்டாவர். நண்பர்களும், சொந்த பந்தங்களும் ஆதரித்து கூடியிருக்கப் பெரிய வாழ்வு வாழ்வர்.

அழகை ரசிக்கும் இவர்கள் புதுமையையும் விரும்புவார்கள், ஆகையினால், நவீன ஆடை, அழகுப் பொருள், வாசனைப் பொருள் வர்த்தகம் செய்வர். இரும்பு மிஷின்களுள்ள தொழிற்சாலைகளில் உயர் அதிகாரிகளாக, சோதிடர்களாக, பெரிய கல்வியாளர்களாகவும் இருப்பர்.

சொந்ததில் தொழில் நடத்தவே பெரிதும் விரும்பும் இவர்கள் தொழிலதிபராக இருந்தாலும், வேலை செய்து சம்பளம் பெறுபவரானாலும், நிறையப் பணம் சம்பாதிப்பர். ஒரு தொழில் போனாலும் அவ்வப்போது ஏதாவதொன்றைப் புதிதாகத் தொடங்கிக் கொண்டே இருப்பார்.

சாதாரணமாக இவர்கள் உடம்பிற்கு ஒன்றும் வராது. வெறும் காய்ச்சல், தலைவலிகள் இருக்கும். 40 வயதிற்கு மேல் உயர் ரத்த அழுத்தம், வயிறு, வெப்பத்தாலும் குடி போன்ற கெட்ட பழக்கத்தாலும் பாதிக்கப்படும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 5

இது புதனுடன் புதன் சேர்ந்து முழு ஆதிக்கத்தைத் தருவது. உயரமாக இருப்பர். சிவப்பாகவும், அழகாகவும் இருப்பர். அளவான அங்கங்கள், நல்ல பல் வரிசை, சிரிக்கும் கண்கள் கொண்டிருப்பர்.

திறந்த மனம் உடைய இவர்கள் தனிமையை விரும்புவார்கள். அழகை விரும்பும் இவர்கள் காதல் வாழ்க்கையில் ஈடுபடுவர். நட்பிற்கும், காதலுக்கும் அடிமைப்பட்டு விடுவர். புதுமையான மனிதராகப் பேசப்படுவர். சாதனையாளராக புகழ் பெறுவர்.

அவசரமாக எதையும் செய்வர். பரபரப்புடன் நடப்பர். பிறரையும் அவசரப்படுத்துவர். தாம் நினைத்ததை நினைத்தபடி செய்யப் பிறரைத் துன்புறுத்துவர். மனத்தில் பொறுமை உண்டு. சிரமங்களைத் தாங்கிக் கொள்ளுவர். அனைவரும் விரும்பும்படி நடந்துக் கொள்வர். எடுத்த காரியத்தையும் முடித்தே தீர வேண்டும் என்று குறிக்கோளோடு செயல்படுபவர்.

ஞாபக சக்தி அதிகம் உள்ளவர். அன்பினால் யாரையும் வசியம் செய்திடுவார். கௌரவமாக வாழும் இவர்கள் மனம் விரக்தியடையும். அரசபோகத்தையும், பெற்றோர் உற்றோரைப் பிரிந்து தனிமையிலேயே துறவிபோல வாழ்வர்.

இளம் வயதிலேயே காதல் வசப்படுவர். தம் மனத்தின்படி தேவையைப் பிடிவாதமாக நிறைவேற்றிக் கொண்டு விடுவர். இவர்களுக்கு மனமொத்த வாழ்க்கைத்துணை அமையும். குடும்பம் மீது அக்கறையுடனேயே வாழ்வர். நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

நல்ல கல்வியும், அநுபவமும் உடையவராக இருப்பர். சொந்தத் தொழிலில் ஈடுபடும் ஆர்வம் உள்ளவர்.  இன்ஜீனியராக, கணினியில் சிறந்த மேதையாக இருப்பார். சிலர் தொழிற்சாலைகளில் நிர்வாகியாக, முதலாளியாக இருப்பர். மருத்துவத் துறையும், கட்டடப் பொறியாளர் பணியும் இவர்களுக்குப் பொருத்தமானதே. சிலர் கல்லூரிகளில் பேராசிரியர்கவும் காணப்படுவார்.

வெப்பத்தால் வரும் நோய்கள் உண்டாகும். ரத்த அழுத்தம், ரத்தப் புற்று போன்ற நோய்கள் வரலாம். பல், ஈறு சம்பந்தமான நோய் ஏற்படும். கை, கால், முதுகு வலி போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 6

புதனுடன் சுக்கிரன் இணைந்து தரும் ஆதிக்கம். இவர் உயரமாகவும், கவர்ச்சியாகவும் இருப்பர். பரந்த நெற்றியும், அடந்த புருவமும் அமைந்திருக்கும். மாநிறமாக காணப்படுவர்.

இயல்பாகவே இவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார். அனைவரையும் கவரும் வகையில் பேசி மயக்குவார். தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். சிலருக்கு பெண் தன்மை சிறிது இவர்களுடைய நடை உடை பாவனைகளில் இருக்கும்.

இவர்கள் சூதுவாதின்றிப் பேசிப் பழகுவர். சத்தம் போட்டுச் சிரித்து பேசும் குணம் கொண்டவர். மேலான லட்சியங்களுடன் ஒரு கவிஞராக இருப்பார். அதிகமாக உணர்ச்சிவசப்படுவார். சுவையான உணவு வகைகளை உண்ண விரும்புபவர்.

ராஜோ குணமும் சாத்விக குணமும் கலந்து இவரிடம் இருக்கும். நியாயத்திற்காகப் போராடுவர். தம்மை நம்பியவரைக் கைவிடாமல் முடிந்தவாறு காப்பாற்றுவார். காதலில் எளிதில் சிக்குவார். யோகம், தவம், தத்துவப் பாதையில் மனம் போகும். துறவறம் கூட இவருடைய நோக்கமாக வரலாம்.

அடிதடிகளுக்குப் பின் சிலர் காதல் மணமுடிப்பர். சிலருக்கு திருமணமே ஆகாமலேயே போகும். மனமொத்த துணை கிடைக்கும். உலக வாழ்வில் அனைத்தையும் பார்த்துவிட்டே போவர்.

கலை சார்ந்த தொழிலுக்கு முதலிடம் தருவர். குறைந்த உடலுழைப்பில் நிறையப் பொருள் பண்ணும் வேலையைத் தேர்ந்தெடுப்பர். இசை, நாட்டியம், இசைக்கருவி, நடன, நாடக சபாக்கள் சார்ந்த தொழிலும் செய்வர். சினிமாப் பாடலாசிரியர், கதை வசனக்காரர், பதிப்பகம், பத்திரிக்கை நடத்துவர். கல்யான மண்டபம் நடத்துவர்.

பெண்களை அதிகம் விரும்பும் இவர்களுக்குப் பால்வினை நோய் வரும். மூட்டுகளில் வலி, உடல் சோர்வு, சர்க்கரை, சிறுநீரகக் கோளாறு, வாதத் தொடர்பான நோய் போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 7

இவ்வெண் கொண்டவர்கள் புதனுடன் கேது சேர்ந்து தரும் பலன் இவர்களுக்கு. உயரமாகவும் அழகாகவும் இருப்பர். மரியாதையை விரும்புகிறவர், சாது என கூறலாம். நிதானமாக நடப்பார். மெதுவாகப் பேசுவார்.

இவர்கள் தூய்மையான மனிதர்கள். ஆடையும் தூயதாக அணிவர். கண்ணியம் மிக்கவர். நீதி, நேர்மை, மான அவமானம் மிகவும் பார்ப்பர். ஆடம்பரத்தை விரும்ப மாட்டார். நண்பர்கள், உறவினர் என்று கூடி வாழவே விரும்புவார். எதிலும் புதுமை, புதியவற்றை விரும்புவார்.

நடுவயது வரை படிப்பு, வேலை என வாழ்க்கை நன்கு போகும். நன்றாக படித்து பட்டம் பெறுவார். நல்ல வேலையோ, சொந்தத் தொழிலோகூடச் செய்வார். நடு வயதிற்கு மேல் அலுப்படையவர். மனம் விரக்தி கொள்ளும்.

இவர்களுக்குத் தக்கபடி மனமொத்த இல்லறத் துணை அமையும். பெண் வாரிசு உண்டாகும். வாழ்க்கை நன்கு செல்லும் ஆனாலும் பணப்பிரச்னை இருக்கும். குடும்பத்தை நன்கு அமைதியுடன் கொண்டு செல்ல உதவும். இவர்கள் மனம் தனிமையை நாடும்.

இவர்கள் அறிவும் ஞானமும் சேர்ந்தமையப் பெற்றவர்களாதலால் எல்லாரும் போல சாதாரணமாக ஏதாவதொரு வேலையில் இருந்து விட மாட்டார். சிற்றபக்கலை போன்று நுட்பத்தொழில் புரிவார். பேராசிரியராக, வக்கீலாக, சட்ட ஆலோசகராக, மருத்துவராக, பண்ணைக்காரராக, நிர்வாகிகளாக, ஆன்மிக பத்திரிகை ஆசிரியராக இருப்பர்.

வயிறு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி இருக்கும். காது மந்தமாகும். காய்ச்சல் முட்டு வலிகள் பின் வயதில் உண்டாகும்.

 பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 8

புதனுடன் சனி இணைந்து ஆதிக்கம் செலுத்துபவர் இவர். அளவான உயரத்தோடு இருப்பர். கட்டுடலும், கவர்ச்சியான தோற்றமும் இருக்கும். கண்களோரம் சிரிப்பதுபோல இருக்கும். கறுப்பாக இருப்பர்.

படு சுறுசுறுப்பாக இருப்பர். எதிலும் நன்கு திறமை, தைரியம் மிக்கவர். புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு சமயம் சாது போல இருப்பார். ஒரு சமயம் பயங்கரமாகச் சண்டையிடுவர். பெற்றோர்கள் ஆதரவு இருக்காது. மிகப் பலர் சிறு வயதிலேயே தொழிலில் நுழைந்திடுவர்.

கலை நாட்டம் இருக்கும். கணிதம், கணினி, விஞ்ஞானப் பாடங்களில் சிறந்து விளங்குவர். பொறியியல் படிக்கலாம். விளையாட்டுக்களில் உடற்பயிற்சிகளில் ஆர்வம் உண்டாகும். காதல் வயப்படுவர் ஆனால் கல்யாணத்தில் முடியாது. முன்பாதி வாழ்க்கை படிப்படியாக முன்னேற்றம் காணும். பின்பாதி வாழ்வு நோய் பாதிப்பும் சில சருக்கல்களும் உண்டாவதாக இருக்கம்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பர். உறவினருடனும் தகராறு உண்டாகும். தந்தையால் உதவி அவ்வளவாக இருக்காது. சிறு சிறு பழிகள் ஏற்படும். கல்வித்தடை வரும். பிற்காலத்தில் வாரிசுகளால் அமைதி ஏற்படும். கடன் ஏற்பட்டு அடையும். சொந்த வீடு வாசல் அமையும்.

எப்போதும் நல்ல வேலைக்காரரான இவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவர். பிறர் சொல்லாமலேயே வேலைகளை மளமளவெனச் செய்வர். இவரை யாம் குறைத்துச் சொன்னால் கோபப்படுவர். தொழிற்சாலை உலைகளில், இயந்திரங்களில் வேலை புரிவர். பதிப்பகம் நடத்துவர். நெசவு. உணவு, விடுதி, எழுதுதலும் செய்வர்.

வெப்ப மிகுதியால் நோய்கள் வரும். ரத்த அழுத்தம், மலம், ஹிரண்யா, ஹைட்ரோசில் போன்றவை தாக்கக்கூடும். வயிற்றுக் கோளாறு, கண் பாதிப்பு, நரம்பு வியாதி போன்றவை ஏற்படும்.

பிறந்த எண் 5-ல் கூட்டு எண் 9

இவ்வெண் கொண்டவர்கள் புதனுடன் செவ்வாய் இணைந்து வழங்கும் ஆதிக்கப்பலன். உயரமும், அளவான பருமனும் கொண்டு வாட்டசாட்டமாக, சிவப்பாகக் கம்பீரமாக காட்சியளிப்பர்.

மனத்துணிவும், புத்தித் தந்திரமும் உள்ளவர்கள். ஆபத்துக்குத் துணிந்த சாகசங்களைச் செய்வர். சக்திக்கு மீறிய வேலைகளில் தலையிட்டு சங்கடப்படுவர். சாமர்த்தியமாக ஏதாவது கூறிச் சமாளித்து விடுவர்.

ஒப்பந்தம் செய்து கொண்டும் பிறர் வேலைகளை முடிப்பர். பொது சேவைகளிலும் ஈடுபடுவர். மக்கள் செல்வாக்கு இவருக்கு இருக்கும். கட்டப் பஞ்சாயத்தும் செய்வர். நியாயம், பொது நன்மைக்காகவும் போராடுவர்.

பகையும், வம்பும், பிரச்னையும் அடிக்கடி இவருக்கு உண்டாகும். மன உறுதியும், திறமையும் பிறரைப் புரிந்து நடக்கும் தன்மையும் இவர்களை ஹீரோக்களாக்கும்.

அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தூக்கம், அரட்டை, விளையாட்டும் படிப்புமாக முற்பகுதி வாழ்க்கை செல்லும். காதல் உண்டாகும். இவர்களுக்கு அதிக நன்பர்கள் இருப்பார்கள். கண்டதும் காதலும், காதலில் தந்திரமும் வம்பும் உண்டாகும். குடும்பம் நன்றாக மகிழ்வுடன் நடக்கும்.

வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வமும் இவர்களுக்கு அதிகம். கவர்ச்சியும் சுறுசுறுப்பும் உள்ளவர் என்பதால் வேலை எளிதில் கிடைக்கும். கலை ஈடுபாடும் இருக்கும். பாட்டு, நடனம், எழுத்து, நடிப்பு என இருப்பார்.

ஜுரம், ரத்த அழுத்தம், ரத்தக் கட்டி, மஞ்சட் காமாலை, வயிற்று வலி, மூலம் ஆகிய நோய்கள் வரலாம். கை, கால், முதுகு, கழுத்து வலி, வாயுத் தொல்லை, இதயக் கோளாறு முதலியவை உண்டாகலாம்.

  பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version