நியூமராலஜி: 6ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 1
சுக்கிரனில் சூரியன் சேர்ந்து உண்டாகும் ஆதிக்கப் பலன் உடையவர் இவர். கண்கள் ஒளியுடன் விளங்கும். ஒளி பொருந்தி கவர்ச்சியாக அழகுடன் தோற்றம் இருக்கும். ஒளி பொருந்தி கவர்ச்சியாக, அழகுடன் தோற்றம் இருக்கும்.
அதிகார தோரணையில் பேச்சிருக்கும். அடக்கியாளும் போக்கில் நடத்தை இருக்கும். தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். சாப்பாட்டில், உடுத்துவதில் பிரியம் அதிகம் உள்ளவர். வெகுளித் தனமாகப் பழகுவார். குரல் வளம் நன்கு இருக்கும். மற்றவரிடம் இனிக்க இனிக்கப் பேசும் திறமை உள்ளவர்.
பிறரைவிடத் தாம் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தமக்கு அடங்கியே பிறர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இரக்கமும், தானம் செய்யும் குணமும் இருக்கும். பழிவாங்கும் உணர்வும், ஆத்திரமும் இவர்களுக்கு உண்டு.
காதலும் பெண்கள் மீது பிரியமும் உள்ள நல்ல ரசிகரான இவர்கள் காதலில் தீவிரம் காட்டி எதையும் பொருட்படுத்தாமல் காதலித்தவருடன் சேர்ந்துவிடுவர். இவர்களுக்கு மனமொத்த துணை அமைந்திடும்.
வாரிசு, மனைவி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் பெரிய வாழ்க்கை அமையும். இறுதிக்காலம் வரை ஏதாவது ஒரு தொழிலும் வருமானமும் அமைந்திருக்கும்.
உடல் வருத்தி உழைக்க மாட்டடார். கவிதை, கதை, நாடகம், கட்டுரை எழுதிக் காசாக்கவும் விரும்புவார். கலை, அரசியல், நளின அழகுப் பொருள் வியாபாரம், சொத்து வியாபாரம் போன்றவை எல்லாம் பொருத்தமான தொழில்கள் ஆகும்.
சர்க்கரை, சிறுநீரகப் பாதிப்பு, மூடக்கு வாதம் போன்ற நோய்கள் உண்டாகலாம். யோகாசனமும், காய்கறி அதிகம் உண்ணலும் நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும்.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 2
இவர்கள் உயரமாகவும், பெண்மை கலந்த தோற்றத்தில் மிக அழகாக இருப்பார். அடர்ந்த முடி அழகாய் அமைந்திருக்கும். சுக்கிரனுடன் சந்திரன் இணைந்து உண்டாகும் ஆதிக்கம்.
செல்லமாக, செல்வாக்காகப் பிறந்து வளர்ந்தவர். எதிர்த்துப் பேசுவர். பேச்சு, சண்டை போடுவதிலும் திறமைசாலி. இதேபோல அரட்டை அடிப்பதிலும் உல்லாசமாகப் பேசி மயக்குவதிலும், பிறரை மகிழ வைப்பதிலும் கெட்டிக்காரர்கள்.
நன்றாகப் படிப்பர். இசை, நடனம் பயிலுவர். உடல் வேகம் போல மன வேகம் கொண்ட இவர்கள் சிறந்த கலைஞர்களாவர். உணர்ச்சி வசப்படக்கூடியவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு முடிவிற்கு வருவார்.
மனம் இப்படியும் அப்படியும் ஊஞ்சலாடும். உண்மையறியாமல் குழப்பம் ஏற்படும். இவர்களுடைய அதிர்ஷ்டம் இவரை வெற்றி பெறச் செய்யும். சமயத்திற்கேற்ப பேசி நடந்து வெற்றியுடன் ஆனந்தமும் கொள்வர். இரக்கம் இவரை ஏமாளியாக்கிவிடும்.
இவருக்கு யார் உதவினாலும் விசுவாசமில்லாமல் அவரிடமும் சச்சரவிடுவார். சகவாசம் அமைவதற்கேற்ப தீய பழக்கங்கள் அமையும்.
இவர்கள் காதலித்தாலும் குடும்ப வழக்கப்படிதான் பெரியோர் பார்த்து வைத்தவரையே மணப்பர். ஏனெனில் அச்சம், ஒரு நிலையற்ற மனம் காரணமாகும். இவருக்கு நல்ல துணை அமையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நல்ல வாரிசு அமையும்.
கற்பனை வளமும் கலாரசனையும் அறிவும் ஈடுபாடும் இருப்பதால் கலை சார்ந்த தொழில்களில் பிரகாசிப்பார். அதாவது கவிதை, கதை, கட்டுரை, நாவல் இயக்குவர். பேச்சாளர்களாக வக்கீல்களாக, நகைச்சுவை நடிகர்களாக, ஜவுளிக்கடை நடத்துபவராக இருப்பர்.
நீர் உடலில் சேருவதால், தலையில் கோர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் கோளாறுகள், கை, கால், கழுத்து மூட்டுக்கள், வலி, வாதத் தொடர்பானவை, கபம் தொடர்பான சளி முதலிய தொல்லைகள் வரலாம்.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 3
சுக்கிரனுடன் குரு சேர்ந்து தரும் ஆதிக்கப் பலன் உடையவர்கள். உயரமாக சதைப்பிடிப்புடன் வாட்டசாட்டமாகவும் இருப்பர். அடர்ந்த கூந்தல் முடி, நீண்டு வளைந்த புருவங்கள் முடியடர்ந்திருக்கும்.
இவருக்கு நல்ல குரல் வளம் இருக்கும். அருமையாகப் பேசுவர். பன்மொழி கற்றிருப்பார். புத்திசாலித்தனம் நன்கிருக்கும். கல்லூரிப் படிப்பிற்குத் தடையமையும். ஊன், உறையுள், உடை இவற்றுக்கு குறைவின்றி வசதியோடு வளர்ந்தபடி படிப்பர். ஆக்கப்பூர்வச் செயல்களில் ஈடுபடுவர். நேரத்தை உல்லாசமாகக் கழித்தாலும் பயனுள்ளதைக் கற்பர்.
எந்த ஒரு பதவியையோ, புகழையோ, நல்லதையோ அடைய இவர்களுக்குத் தகுதியிருந்தாலும் போராடியே அதைப் பெறும் கடின நிலை இவருக்கு அமையும். இரக்கமும் பிறரிடம் தாட்சணியமும் பார்த்து நடப்பார். பிறருக்கு உதவுவார்.
கலை சார்ந்த தொழிலில் பெரும்பாலும் இருந்து நிறையச் சம்பாதிப்பார். கதை, வசனம், அரசியல், கட்டுரை எழுதுவதில் மேடையில் பேசுவதில் வல்லவராகிடுவர். எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறுவர்.
காதல், துணிவான குடும்பம் அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறுவர். ஆனாலும் தனிமையில் இருக்க நேரிடும். பெண் வாரிசு பிறக்கும். அசுர குருவுடன் தேவ குரு சேரும் இவர்கள் போராட்டங்களை எங்கும் எதிலும் சந்தித்தே ஆகும்படி நேரும்.
கலையும் கலை சார்ந்த தொழிலும் மிகவும் ஏற்றது. அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. சிறு வயதிலேயே கலைத்துறையில் ஈடுபட்டுச் சம்பாதிப்பர். ஆசிரியர் பணி, கணித மேதை, பெரிய நிறுவனம், அரசாங்க அலுவலங்களில் பெரிய அதிகாரிகளாக இருப்பர்.
அசிடிடி, மலச் சிக்கலும், வாத பாதிப்பும், மூட்டு வலி போன்ற நோய்கள் வரலாம். நரம்புத் தளர்வு, சிறுநீரகத் தொல்லை உண்டாகலாம். சர்க்கரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 4
சுக்கிரனுடன் ராகு சேர்ந்த ஆதிக்கப் பலன் இவருக்கு வரும். உயரமாக இருப்பர். பருமனாகவும் வாட்ட சாட்டமான தோற்றத்துடனிருப்பர். கண்கள் லேசாக மாறுகண்ணுடன் அமைந்திருக்கும்.
நன்கு விரைவாகப் பேச வல்லவர். பேச்சில் நகைச்சுவையும், உலக விவரமும் கலந்து பிரமிக்க வைக்கும். நன்கு குரல் வளம் அமைந்திருக்கும். இவர்கள் பேச்சு கவிதை போல் இருக்கும்.
தெய்வ நம்பிக்கை உடையவர்கள். குழந்தை போலப் பொறுப்பின்றி இருப்பர். எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையாவது செய்துவிட்டு அவதிப்படுவர். பிறருக்கு நிறைய உதவுவார். இவர்களின் சிந்தனை அற்புதமாக இருக்கும். நடவடிக்கை மட்டமானதாகும்.
சமயத்திற்கேற்ப எதையும் செய்ய நினைப்பர். எளிதில் பிறரிடம் ஏமாறுவர். வேதாந்தமும் யோகமும் ஒருபுறம் மனத்தை இழுத்தாலும் உலக சுகவாழ்கை இவர்களை விடாது. பிறந்த இடத்தை விட்டு பிற இடங்களுக்கு வந்து பிரபலமாவார்.
கலை, கலை சார்ந்த தொழிலே பொருத்தம். கதை, கவிதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என படத்துறை என அனைத்து துறையிலும் இருப்பர். கலை வண்ணத்துடன் கட்டடம் கட்டுபவரான இன்ஜீனியராக, அரசியல் தலைவர் போன்ற துறையில் இருப்பார்.
இவருக்கு சர்க்கரை நோய் வரலாம். வெப்பத்தால் நோய்கள் உண்டாகும். மஞ்சள் காமலை தாக்கலாம்.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 5
சுக்கிரனும் புதனும் சேர்ந்து தரும் ஆதிக்கப் பலன். சராசரி உயரமும் கவர்ச்சியான உடலும், தெளிவான முகமும் இருக்கும். காது சற்று மந்தமாகக் கேட்கும்.
மிகச்சிறந்த நட்பைத் தரக்கூடியவர். தெய்வ பக்தி உள்ளவர். விதியை நம்புவர். எதையும் ஆர்வத்துடனும் அக்கறையுடன் செய்வர். செலவாளியாக இருப்பர். வேளைக்கு உண்ணாது உறங்காதுகூடச் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடும் இவரை நெருங்கிய மனிதரும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
ஆடம்பரமாக நடப்பர். எளிமையான நல்ல பெண்களை விரும்புவார். காதலிப்பார். திருமணமும் நடக்கும். தம்மிடம் பிறர் யோசனை கேட்பதையே விரும்புவார். இவர்களைப் புரிந்து கொள்ளப் பொறுமை வேண்டும்.
அழகுணர்வுடன் அழகை ரசித்து மகிழும் இவர்கள் காதலிப்பர். பெரியவர் பார்த்து வைக்கும் முன்பே காதலித்துவிடுவர். சாதிமதம் கடந்துகூடக் காதல்புரிவர். மனமொத்த இல்லறம் நடக்கும். சொந்த வீடு, சொத்து வரும். ஏதாவது காரணத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தும் இருக்க நேரும்.
கலையார்வமும், கலைத்திறமையும் இருந்தாலும் சுயமரியாதையை விடாமல் தொழில் செய்ய நினைப்பர். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், இயக்கம், பாடல் இயற்றுதல் எல்லாம் இவர்களுக்கு நன்கு வரும். அதிர்ஷ்டமும் நன்றாக அமையும். புதிய முறை, நவீன நாகரிகம், இளமை நடைமுறை, கேளிக்கைகள், அரட்டை எல்லாம் விரும்புபவராக இருப்பர்.
ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி உண்டு. சர்க்கரை வியாதி தாக்கக்கூடும். உடற்பயிற்சி செய்வது நல்லது.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 6
சுக்கிரனில் சுக்கிரன் சேர முழு சுக்கிர ஆதிக்கமாகும். இவர் சராசரி உயரமுடையவர். சுருன் முடி நிறைய இருக்கும்.
காரிய வெற்றிக்காக தெய்வ வணக்கம் செய்வர். வெகுளித்தனமாக இருப்பார். சிறந்த புத்திசாலி. எதையும் எளிதாகப் பயின்று விடுவர். நல்ல நகைச்சுவையிருக்கும். சொந்த அறிவில் வாழுவர். தாமே எதையும் செய்து சாதிக்க விரும்புவர். புலன்களை நல்ல கூர்மையுடன் வைத்திருப்பர். பார்க்க இனிய தோற்றத்துடன் விளங்குவர்.
வைராக்கியம் உள்ளவர். உண்மையாக காதலிப்பர். சிலர் தனியாகவே வாழுவர். எதையும் முழுச்சிறப்புடன் முடிப்பர். பிறரைவிட நன்றாக செய்து பாராட்டு பெறும் குணம் கொண்டவர். வசதிமிக்க வாழ்வு பெற அற்புத சாதனை புரிய இடைவிடாது முயலுவார். எதிரிகளை வீழ்த்திடுவார்.
செல்வக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்ந்தவர். நல்ல கல்வியும் நல்லோர் பழக்கமும் உண்டு. காதல் உணர்வு ஏற்படும் ஆனால் வெற்றி பெறாது. பெயர் எண் இவர்களை அதிகம் பாதிக்குமாதலால் அதன்படி சில மாறுதலேற்படலாம்.
எடுத்துக் கொண்ட தொழிலில் உழைத்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெற்று முன்னேறுவர். கலை, கலை சார்ந்த தொழில்கள் கை கொடுக்கும். ஆடை தைப்பவர். ஜவுளிக்கடை, நவரத்தினக் கற்கள் வியாபாரம், ஓட்டலில் உயர் வேலை, சினிமா கலைஞர் பணி கிடைக்கும்.
உஷ்னத் தொடர்பான நோய்கள் தாக்கக்கூடும். சர்க்கரை நோய், பிபி, வயிற்று வலி, மூலம், கண் நோய், இதயப் பாதிப்பு வர வாய்ப்புண்டு.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 7
நல்ல உயரமான தோற்றம் உடையவர். சுக்கிரனுடன் கேது சேர்ந்த ஆதிக்கம் இவருக்கு வரும். கவிதை புனையும் திறமை உண்டு. இறை பக்தி இருக்கும். பிரமிக்கும் படியான பேச்சிருக்கும். பணிவான பேச்சு உடையவர். நல்ல குடும்பத்தில் நல்ல சூழ்நிலையில் பிறந்திருப்பார்.
தூய மனிதர். எளிமையான ஆடைகளே அணிவர். காதல் விவகாரம் சிறு வயதிலேயே ஏற்படும். வெற்றி பெறாது. துக்கத்தை உள்ளத்திலே வெகு நாள் வைத்திருப்பார். பொதுவாகக் கலகலப்பானவர். நண்பர்களை பெரிதும் விரும்புவார்.
வாழ்க்கையில் 34 வயதில் திடீர் மாறுதல் ஏற்படும். வாழ்வில் ஏதாவது துக்கம் இடம் பெறும். பிராத்தனை, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவார். பிறர் இவரை அதிஷ்டகரமானவராக உல்லாசமானவராக நினைக்கும்போது தனிமையை விரும்பும் தத்துவ சிந்தனையை அடைந்திடுவார்.
நிறையச் சம்பாதிக்கக் கூடிய இவர்கள் குடும்பத்தில் எல்லாரையும் மகிழ்வாக இருக்கும்படி செய்வார். அனைவரையும் நேசிப்பார்.
இவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். அமைதியாகவே வாழ்க்கை நடக்கும்.
கலைசார்ந்த தொழிலில் செல்ல விரும்புவார். எழுத்துத் திறமையும், பேச்சுத் திறமையும் இருக்கும். சிலர் நல்ல நடனக்காரராக இருப்பார். கலை என இன்றி எத்தொழிலானாலும் அசாத்தியத் திறமை பெற்றிருப்பர். சினிமா, நாடகம், தொலைக்காட்சிகளில் எழுத்தாளராக, பாடலாசிரியராக, வசன கர்த்தாவாக இருப்பார்.
வெப்பம் மிக உண்டாகும் நோயால் பாதிக்கப்படுவார். வாதம் பாதிக்கும் வாய்ப்பு அதிகம். மூட்டு வலி, முதுகுவலி போன்ற நோய்கள் வரும். சர்க்கரை, மூச்சுக் கோளாறு, இதயபாதிப்பு ஏற்படலாம்.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 8
சுக்கிரனில் சனி சேர்ந்து தரும் ஆதிக்கப் பலன். அளவான உயரம் இருக்கும். உடல் வாட்டசாட்டமாகக் அமையும். முடி அடர்ந்திருக்கும். கனவில் மிதப்பது போன்ற கண்கள் பார்வை இருக்கும்.
தெய்வ நம்பிக்கை மிக்கவர். அதிகம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். உணர்ச்சி வசப்படுபவர். உலக வாழ்க்கையை ரசிப்பவர். இடைவிடாது தடைகளும் 35 வயதுக்குப் பிறகு ஏற்படும். அயராத முயற்சியும் உறுதியும் கொண்டவர்.
சிறுவயது வாழ்க்கை எளிதாக இனிதாக இருக்கும். நடுவயதில் சங்கடமான வாழ்வாகும். பின்னாளில் அமைதி கிட்டும். உறுதியும், கண்டிப்பும், சிக்கனமும் பிற்பகுதி வாழ்க்கையில் காட்டுவர். நிறைய ஊர் சுற்றுவர்.
காதல் விவகாரம் இருந்திருக்கும். நல்ல துணை கிடைக்கும். மணவாழ்வு நல்ல முறையில் அமையும். பிற்பகுதி வாழ்வில் சற்றுச் சிரமங்களேற்படும். கடைசிக் காலம் அமைதியாகக் கழியும். பணவசதி இருக்கும். குழந்தைகள் கல்வி சிறக்கும்.
கலையார்வம் இருந்தாலும் இன்ஜினியர் ஆவர். சினிமா, பத்திரிக்கை, வியாபாரத்துறைகளில் முதலில் லாபம் அமைவர். பிறகு இழப்பைச் சந்திப்பர். நீதிபதிகளாக, பேராசிரியர்களாக, ஓட்டர் முதலாளிகளாகவும், பத்திரிக்கைத் துறை, பள்ளிக்கூடங்களில் நிறுவனராக இருப்பார்.
அஜீரண கோளாறு, வயிறு பலவீனம், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் தாக்கலாம்.
பிறந்த எண் 6-ல் கூட்டு எண் 9
இவருக்கு சுக்கிசரனுடன் செவ்வாய் சேர்ந்த ஆதிக்கப் பலன் கொண்டவர். சுமாரான உயரம், கண்கள் சிவந்து அழகாக இருக்கும்.சிலருக்கு தலை பெரிதாக இருக்கும்.
கலாரசனையும் கடவுள் பக்தியுமிருக்கும். ஓவியத்தன்மை நன்றாக அமைந்திருக்கும். உடலில் சக்தியும் மனத்தில் உறுதியும் இருக்கும். பேச்சு கோபமாகவும், விட்டுக் கொடுக்காமல் வம்பு இழுப்பதாகவும் அமையும். அடிக்கடி விழுதல், காயம் படுதல் நிகழும். விதியை நம்பினாலும் விடாமுயற்சியும் உடையவர். தந்திரமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவர்.
படிக்கும்போது விளையாட்டுப் போட்டிகளில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறுவர். பிறரை வென்றிட முடியும் என்று நம்பி வென்று காட்டுவர். இசை, நடனம், கவிதை, படம் எனப் பல கலைகளில் திறமை அமையும். சொந்த வாழ்வைத் தாமே உருவாக்கிக் கொண்டு பிரபலமடைவர்.
இவர்கள் பாக்கியம் செய்தவராதலால் திடீர் நன்மைகிட்டும். விரும்பியவரை மணம் முடிப்பர். நல்ல வாரிசுகள் அடைவர். மகிழ்வும், நிம்மதியும் வாழ்க்கையில் கொண்டிருப்பர். கூட்டுக் குடும்பம் இருக்கும். உற்றார், உறவினர், நண்பர் அனைவரும் கூடி சமாதனமாக வாழ்வர்.
கலை, கலை சார்ந்த தொழில் அமையும். நடிப்பு, கதை, வசனம் பாடல், இயக்கம் எனப் பல துறைகளில் சிறப்பான திறமையுடனிருப்பர். எரிபொருள், எண்ணெய் தொடர்பானஆடம்பர அழகுப் பொருள் தொழிலில் ஈடுபடுவார். சுரங்கத்தொழில், ரியல் எஸ்டேட், வண்டி வாகனம் வாங்கி விற்றல் போன்ற தொழில் செய்வர்.
உயர் ரத்த அழுத்தம், ஜுரம், மூலம், வயிற்றுவலி வரும். வாதப் பிடிப்பு இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். கை, உடல் நடுக்கமும், சோர்வும் ஏற்படாமல் இருக்க உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.