நியூமராலஜி: 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 1
இவ்வெண் கொண்டவர் சனியுடன் சூரியன் சேர்ந்த ஆதிக்கப்பலன் கொண்டவர். சராசரி உயரமும், சிவத்த உடலும் இருக்கும். சுருட்டை முடி நிறைய இருக்கும். கண்கள் பளிச்சென்று கருமையழகுடன் இருக்கும். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.
துணிவு உள்ளவர். வென்றிட வேண்டும் என்ற தாகம் உள்ளவர். சிறு வயதில் உடம்பு படுத்தும். சுமாராகவே படிப்பு வரும். ராஜா போல வாழ வேண்டும் என்று நினைப்பவர். நேர்மையான முறையில் எதையும் முடிக்க முயலுவர். இல்லாவிட்டால், எப்படியும் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவே நினைப்பர்.
இவருடன் வயதில் மூத்தவர்களை காதலிப்பார். அஞ்சாமல் காதல் திருமணம் செய்வர். சீர்படாமல் மேடுபள்ளமுள்ள வாழ்வில் 28 வயதுக்குப் பிறகு ஒரு தொழிலமைய பொருளாதாரத்தில் உயருவர்.
கல்வி பல காரணங்களால் தடைப்படுமாதலால் தம் தொழில் திறமையால் உழைத்து முன்னேறுவார். மெக்கானிக், வண்டி வாகன உறுப்புக்கள், மின்சாரக் கருவிகள் வியாபாரம் சிறக்கும். எலெக்ட்ரிஷியன்களாக, மிகச் சிலர் என்ஜீனியர்களாக இருப்பர். கூலி வேலைகளில் வாழ்வைத் தொடங்குவோரும் பெரிய நிலையைத் தம் உழைப்பால் அடைவர்.
கண் பாதிப்பு ஏற்படும். கோபம் வெப்பம் தரும் குறைபாடுகளும் தாக்கும். பிபி, மூலம், இதய கோளாறு போன்ற நோய்கள் தாக்கலாம். உடலில் ஆங்காங்கே வலிகள் வரும்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 2
சனியுடன் சந்திரன் சேர்ந்த ஆதிக்கப்பலன். குட்டையாகவே இருப்பர். முடி அடர்ந்திருக்கும். கண்கள் பெரிதாக ஒளியுடன் இருக்கும். சிரித்தபடி இருப்பார். மாநிறமாக இருப்பர்.
சஞ்சலமனமும் சபலசித்தமும் இருக்கும். சாதுபோல் நடவடிக்கை இருக்கும். மூடநம்பிக்கை அதிகமிருக்கும். கணீர் என்ற குரலிருக்கும். தம்மை ஒரு பெரிய அறிவாளியாகவும் சாமர்த்திய சாலியாகவும் பெரிதாக எடைபோட்டு இருப்பார். துக்கமும் சுகமும் அடிக்கடி மாறி மாறி இவருக்கு ஏற்படும்.
இவர்கள் வீட்டில் கொடும்புலி போல நடந்து கொள்ளுவர். இவருக்கு மனமொத்த வாழ்க்கைத் துணை அமையும். நல்ல வாரிசுகள் பிறக்கும். சந்தேகம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை இவர்களை மிகவும் சிரமப்படுத்தும்.
இன்ஜீனியர், போட்டோ கிராபர்களாக, கலைஞர்களாக இருப்பர். இரும்புக்கடை, லேத் பட்டறை நல்லவை. கணினி பொறியியலாளர் என பத்திரிக்கையில் பேராசிரியர் ஆக வேலை பார்க்கலாம்.
மனக்குழப்பம், அம்னீசியா, கபம், தொடர்பான சளி, இருமல், தலைவலி, உடலில்நீர் சேருதல், காசநோய், மூச்சுக் கோளாறு வரலாம்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 3
இவருக்கு சனியுடன் குரு சேர்ந்து வரும் ஆதிக்கப் பலன். சராசரி உயரம் இருக்கும். குருபலம் அதிகமானால் உயரம் கூடும். மறந்தும் சிரித்துவிட மாட்டார்.
தெய்வ பக்தி, பூசை, புணஸ்காரம் உள்ளவர். காரியம் நிறைவேற சிரித்தபடி பேசும் குணம் கொண்டவர். வெற்றி பெற சரியாகத் திட்டமிட்டுக் காரியத்தை இரவு பகல் பாராமல் செய்து முடிப்பர். வாக்குக் கொடுத்தால் காப்பாற்றாமல் விடமாட்டார். பிறருக்கு உதவுவார்.
காரிய வெற்றிக்காகக் கடவுளைத் தொழுவர். இடையூறு செய்பவரைக் கூர்மையான சொற்களால் சுட்டெரிப்பர். சகோதரருடன் ஒற்றுமை இராது.
தொடக்கத்தில் பல சங்கடங்களைச் சந்தித்திருப்பர். மனமாகியும் ஆகாத நிலை வாட்டும். இவர்களால் குடும்பத்துடன் ஒத்துப்போக முடியாது. குடும்ப வாழ்க்கை மனவேதனையே தரும்.
நல்ல கல்வியை எப்படியாவது கற்றுவிடும் இவர்கள் சுயமாகவே தொழிலைத்தேடிக் கொள்வர். ஆசிரியராக, பேராசிரியராக, அரசாங்க அதிகாரிகளாகக்கூடப் பணிபுரிவர். சினிமா பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை, சுரங்கத்தொழில் அலுவலங்களில், அறநிலையத்துறை, ஆலயங்கள், மடங்கள் சார்ந்த பணிகளில் இருப்பர்.
தொண்டை, தோல் பாதிக்கப்படும். வயிற்றில் அமிலத் தொல்லை, அஜீரணம் இருக்கும். பித்த வாந்தி, மலேரியா காய்ச்சல் உண்டாகும். கபத் தொல்லையால் மூச்சுக் கோளாறு ஏற்படும்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 4
சனியுடன் ராகு சேர்ந்த ஆதிக்கப் பலன் இவர்களுக்கு. அளவான உயரம் அமைந்திருக்கும். சனி பலம் மிகுமானால், குட்டையாகவே காணப்படுவர். ரெட்டை நாடி சரீரத்துடன் பருமனாக இருப்பர்.
சிறுவயதிலேயே பெரிய மனிதர் போல முதிர்ச்சியுடன் பேசுவார். நிறைய நண்பர் எங்கு போனாலும் அமைவர். இவர்தம் பேச்சு சுவதரசியமாக இருக்கும். பல தகவல்கள் வெளிப்படும். படிக்காத இவெண்காரர்கூட நன்கு உறுதிபடத் தம் அனுபவ ஆதாரத்துடன் பேசுவர்.
மிகச் சிறுவயது முதலே பெற்றோரை, விட்டுத் தனியாகவே பெரும்பாலானோர் வசித்து வருவர். வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்களும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகும்.
சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டுப் பிரிந்து விடுவார். சிலருக்கு இளமையிலேயே பெற்றோர் இறந்து விடுவதும் உண்டு. சுறுசுறுப்பாக வேலை செய்வார். எனவே பிறர் குடும்பத்துடன் இணைந்தும் வாழ்வார். காதல் இடம் பெறும் ஆனால் தோல்வில் முடியும்.
சிலர் படிப்பு தடையேற்பட அனுபவக் கல்வியே பெரிதாக பெரும் தொழில் திறமையை அடைவதுண்டு. ராகு பலம் அதிகமானால் நன்றாகப் படித்துப் பட்டம் வாங்கி இருப்பர். அச்சகக் கலைப் படிப்பும், கணினிப் படிப்பும், கணக்கியலும், சட்டம், மருத்துவம் போன்ற துறையிலும் படிப்பர். ஆசிரியராகவும், பத்திரிக்கைத் துறையிலும் இருப்பர்.
காய்ச்சல் கண்கோளாறும் வரும். நீரிழிவு, மூலம், வயிற்றுக் கோளாறு வரும். பிற்காலத்தில் மறதியும் மனம் ஒருங்கிணைப்பற்ற நிலையும், வாதமும் உண்டாகும்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 5
இவ்வெண் கொண்டவர் சனியுடன் புதன் சேர்ந்த ஆதிக்கப் பலன் உடையவர். உயரமாக சிவப்பாக அளவான பருமனுடனிருப்பார். வேகமாகச் செயல்படுவார். எந்த வயதிலும் அழகாக இளமையுடன் சுறுசுறுப்பாக இருப்பர்.
அசைக்க முடியாத மனஉறுதியுடன் சற்றுக் கொடூரமான மனமும் இருக்கும். மனம் எப்போதும் ஏதாவது யோசித்தவாறிருக்கும். இவரைப் பெற்றவராலும் நெருங்கிப் பழகுபவராலும்கூடப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இவர்கள் மனம்விட்டு எவரிடமும் பேச மாட்டார்.
சிறுவயதில் சற்று மந்தமாகவே இருப்பர். பிறரைவிடத் திறமைசாலி எனப் பெயர் பெறப் போட்டியிடுவர். மனம் குழம்பும்போது சரியாக வேலை செய்ய மாட்டார். அடிக்கடி குழம்பித் தவிப்பர். அதிக நேரம் தூங்கியே கழிப்பர்.
எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமிருக்கும். ஆனால் மறதி பெரிய இடைஞ்சலாகும். கடவுள் பக்தி, பெரியோரிடம் மரியாதை இருக்கும். பொதுத் தொண்டு செய்து, பிரபலமாக விரும்புவர்.
பெறிய குடும்பத்தில் சகோதர சகோதிரிகளுடன் பிறந்திருப்பர். காதல் விவகாரம் சிறு வயதிலேயே இடம் பெறும். இவர்கள் என்ன எப்போது செய்வார் என எவராலும் முன்கூட்டி அறிய முடியாது.
படிப்பதிலும், தொழிலிலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். விஞ்ஞானம், கணினி பொறியியல், மின்சாரம், மொழியியல், பத்திரிக்கைத்துறை பட்டம் பெறலாம். மருத்துவராகலாம். பொருளாதாரம் படித்து ஐ.ஏ.எஸ் ஆகலாம். விளையாட்டு வீரர் ஆகலாம். அரசாங்கத்திலோ, தனியார் அலுவலகத்திலோ வேலை பார்த்தாலும் சொந்தத் தொழில் செய்வதையே நாடுவர்.
நரம்புத்தளர்ச்சி, இரத்தக் குறைவு இருக்கும். வாதம் தாக்காமலிக்க யோகாசனமும் பயிற்சி செய்தால் நல்லது. கை, கால் நடுக்கம், நீரோபாலிபர் வரும். வயிற்றுக் கோளாறு, பிபி, மூலம் போன்ற நோய்கள் தாக்கலாம்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 6
இவர்கள் உயரமாக இருப்பர். கன்னங்கள் உப்பியிருக்கும். கண்கள் பெரியதாக இருக்கும். மாநிறமாக இருப்பர்.
தமக்கு முக்கியத்துவத்தையும் தம் சுகத்தையுமே முதலில் வேண்டுவர். நல்லவர். பிறர் குறைகளையும் தீர்க்க உதவுவர். நன்றாகப் படிப்பர். அநேகர் இளம் வயதில் தாயை இழந்து விடுவர். பசி தாங்க மாட்டார்.
தெய்வ பக்தி இருக்கும். மூடத்தனத்தை எதிப்பார். காரியவாதிகள். பிறரை அடக்கியாளுவர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள நினைப்பவர். புரிந்துகொள்ளும் அறிவும், கல்வியறிவும் நன்கு அமையும். சண்டைக்காரராகவே வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்துப் போராடி வெற்றிப் பெறுவர்.
பிறந்த குடும்பம் பெரியது. பிறந்த இடத்திலிருந்து வெளியேறி வசிப்பார். பெற்றோரை விட்டும் தனித்திருந்தும் வளருவார். சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் அடிக்கும். இவர் காதல் வயப்பட்டு, விரும்பிய துணையை அடைவர்.
கற்பனை வளமும் கவிதை மனமும் கொண்ட இவர்கள் கலை, கலை சார்ந்த தொழிலில் மிகப் பிரகாசிக்க முடியும். ஆனால் அரசியல் ஈடுபாடு அதிகமுண்டாகும். பாட்டு, இசையமைப்பு, பாடல், புனைதல், கதைவசனம் எழுதுதல், நடித்தல், இயக்குநராக வேலை செய்தல் எல்லாம் இவருக்கு வரும்.
பிபி, டென்ஷன் இவற்றின் மிகுதியால் இதயப் பாதிப்பு ஏற்படலாம். வயிறு தொடர்பான கோளாறு ஏற்படும். இவர்களுக்கு வயிறும், குடலும் பலவீனமானவை. சருமப் பாதிப்பான நோயும் வரும். சலதோஷம், மூச்சுக் குறைபாடு வரலாம்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 7
சராசரி உயரமிருக்கும். சனியுடன் கேது சேர்ந்து உண்டாகும் ஆதிக்கம். சிலருக்கு முன்பற்கள் எடுப்பாயிருக்கும். சதைபிடித்த உடல் இருக்கும். கறுப்பான தோற்றம் இருக்கும்.
வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்பர். எடுத்த காரியம் எல்லாம் தடையாகும். பெற்றோர் ஆதரவிருக்காது. கல்வித்தடை, முயற்சியில் தடை, அன்பிற்குத் தடை எனத் தொட்டதற்கெல்லாம் தடையுண்டாகும். உள்ளம் வேதனைப்பட்டாலும் வெளியில் நண்பர்களுடன் உல்லாசமாக திரிவர். எந்நிலையிலும் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். கௌரவத்தை நாடுவர். கம்பீரத்துடன் இருப்பர்.
நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பர். பெற்றோரைப் பிரிவர். சரியான வருமானம் இல்லாமல் இருப்பர். திருமணமானால் தாமதமாகவே நடக்கும். வாழ்க்கை கடைசி வரை ஏதாவது குறையுடனே வாழ்வர்.
கிடைக்கும் சிறு சிறு வேலைகளிக்ல காலம் கழிப்பர். நடிக்க, பாட, எழுத இயக்க, நாடகங்களில், சினிமாவில் வதனொலியில், தொலைக்காட்சியில் வாய்ப்புத் தேடுவர்.
தொழிற்சாலைகளில், கடைகளில், கல்யாண மண்டபங்களிலும் வேலை பார்ப்பர். அச்சகம், பதிப்பகம், ஸ்டூடியோ முதலிய இடங்களில் வேலை செய்வர்.
வெப்பத்தால் வரும் அம்மை, அக்கி, மூலம், வயிற்றுக் கோளாறு, தலைவலி, கண்நோய், போன்ற நோய்கள் தாக்கும்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 8
முழுச்சனி ஆதிக்கத்தில் சனியுடன் சனி சேர உள்ளவர். முகம் உருண்மையாக களையாக இருக்கும். உயரமாக ஒல்லியாக இருப்பர். நெற்றி சுமாரான அகலம் இருக்கும்.
காரிய வெற்றிக்கு தந்திரமாகச் செயல்படுவர். காரியம் முடியக் கச்சிதமாகப் பேசுவார். ரகசியத்தை வெளியிடவே மாட்டார். சாதாரணமானவராகவே இருப்பார். எண்ணியதை முடிக்க கடுமையாக உழைப்பார். அதிகம் பேசவே மாட்டார். சாதாரண நிலையிலிருந்து உதவியின்றிச் சுயமாகவே முன்னுக்கு வந்திடுவார்.
சகோதரர்களுடன் பிறந்தாலும் தனியாகவே இருப்பர். சிறு பருவத்திலேயே தந்தையை இழந்திருப்பார். தாய் மீது பாசம் அதிகமிருக்கும். படிப்பு தடைப்படும். காதல் விளையாட்டெல்லாம் அறியாப் பருவத்தில் நடந்திருந்தாலும் வம்புகளால் பாதிக்கப்பட மாட்டார்.
கடும் உழைப்பிற்கு தயாரான இவர்கள் தம் ஆதரவற்ற நிலையுணர்ந்து ஏதாவது ஒரு வேலை செய்து பணம் சம்பாதிக்க நினைப்பர். தொழிற்சாலைகளில் லேபராக, டைப்பிஸ்டாக இருப்பர். சிறுகடை வைப்பர்.
தலைவலி, வயிற்றுத் தொல்லை, பல், ஈறு நோய்கள் வரும். வாதத் தொல்லைகளான மலச்சிக்கல், மூட்ட, கழுத்து, முதுகு வலிகள் வரும். கால்களில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும்.
பிறந்த எண் 8-ல் கூட்டு எண் 9
சனியுடன் செவ்வாய் சேர்ந்து வரும் ஆதிக்கப் பலன் கொண்டவர். சராசரி உயரமாகக் கட்டுடலுடன் இருப்பார். சிவப்பாக இருப்பார். கவர்ச்சியுடன் கம்பீரமும் சேர்ந்தே தோற்றம் அழகாக இருக்கும்.
சாதுவாக அமைதியான முகத்துடன் இருக்கும் இவர்கள் அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழுந்து போர் வீரராகி விடுவார். உடல் மன பலம் இரண்டும் உள்ளவர். எந்தச் செயலையும் சோம்பலின்றிப் பக்குவமாகச் செய்வர்.
இளவயதில் தந்தையை இழப்பர். தொழில் திறமை, உழைப்பு என்னும் இரண்டு துடுப்புகளுடன் சமூக எதிர்ப்பில் எதில் நீச்சலடித்தே முன்னேறுவார். யோகம் வேதாந்தம் இவரைக் கவரும். பிறந்த இடத்தை விட்டு வேறிடம் சென்று பிரபலமும் புகழும் பொருளுமடைவார்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கூடியவர். வறுமையால் இவர் குடும்பம் பாதிக்கப்படும். காதல் விவகாரம் தோற்கும். வாழ்க்கை இவர்களுக்குப் பல தோல்விகளை, தடைகளையே தரும். திருமணம் கூட மகிழ்ச்சியாயிராது. வியாதியாலோ, வறுமையாலோ மனைவியை இழப்பார்.
இவர்கள் கலை, கலை சார்ந்த தொழிலுக்கு ஏற்றவராவர். நடிப்பு, இயக்கம், கதை, வசனம் எழுதுதல் போன்றவற்றில் நன்கு திறமை வரும்.
போலீஸ், இராணுவம், மருத்துவத்துறை, சட்டத்துறையில் பணிபுரிந்தாலும் மேன்மையுறுவர்.
உஷ்ண தொடர்பான நோய், வாதத் தொடர்பானவை, தலைவலி, கண்நோய் வரலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.