2016 ஆண்டு பலன்: மேஷம்

மேஷம்:

மற்றவர்களின் நல்வாழ்விற்காக தன் பங்கை முன்வந்து தரும் மேஷ ராசி அன்பர்களே!

கிரகநிலை:

குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – ராகு ரண ருண ரோகஸ்தானத்திலும் – சனி பகவான் அஷ்டமஸ்தானத்திலும் – கேது விரையஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.         

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  சப்தம களத்திர  ஸ்தானம் –  லாப ஸ்தானம் –  தைரிய வீரிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார். 

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசி –    பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் –  பாக்கிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.          

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தொழில்  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  அயன சயன போக  ஸ்தானம் –  நவம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

 

ராகு கேது பெயர்ச்சி:

எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான  சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.

இவ்வாண்டில் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். பல நற்செயல்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைவீர்கள். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும்.

இளைய சகோதர, சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். அவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அவர்களால் சிறிது செலவும் உண்டாகலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மட்டுமின்றி வெளியில் செல்லும் போதும் சுகாதார வசதியை ருவாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் நிறையவே இருக்கிறது. குழந்தைகள் வகையிலும் பூர்வ சொத்துக்களாலும் வருமானம் உண்டு. பூமி, மனை, நிலங்கள் தொடர்பானவற்றில் இருந்த எதிர்ப்புகள் மாறி அனுகூலமான பலன் கிட்டும். தொழில் ரீதியாக எதிரிகள் முடங்கிப் போவார்கள்.

நண்பர்கள் வகையில் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம். அவர்களை விட்டு சற்று ஒதுங்கியே நில்லுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு நடத்தும் வாய்ப்புகள் உருவாகும். உடலில் சில நோய்க்கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதால் உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். இவ்வாண்டு முழுவதும் சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். ஆதாயமாக வரும் பணம் முழுவதையும் சேமிக்கும் வாய்ப்பு கிட்டும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு,

அரசுத்துறை ஊழியர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியில் மிகுந்த கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவார்கள். தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு நினைப்பதைவிட அதிகமாக சம்பள உயர்வும், பாராட்டும், பரிசும் கிட்டும். மனதில் தைரியம் உண்டாகும். தனக்குக்கீழ் உள்ள ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி சம்பள உயர்வை பெற்றுத் தருவார்கள். ஒருசிலருக்கு உத்தியோக உயர்வு, இடமாற்றம், புது வீடு வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல் ஆகிய பலனகள் நடக்கும். உங்களின் லட்சிய பயணத்தில் பிறரின் குறுக்கீடு இன்றி வெற்றிநடை போட தெய்வசக்தி துணை நிற்கும். குடும்பத்தில் உள்ள நீண்டகால பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீரென சுபச்செலவு வரும்.

 

தொழிலதிபர்களுக்கு,

விசைத்தறி தொழில் நடத்துவோர், இயந்திரம் தொடர்பான தொழில் செய்வோர் தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். வாகன தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் ஆர்டர் கிடைக்கும். தொழிற்சாலை பணிகளை மேற்பார்வையிட செல்லும் போது தகுந்த பாதுகாப்பை மேற்கொள்ளுதல் அவசியம். மனதில் உற்சாகமும், செயல் திறனும், அதிகரிக்கும். அரசு தொழில் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர் அனுகூலமான பலன் பெறுவர். தாயின் அன்பும் ஆசியும் கிட்டும்.

புத்திர வகையில் புகழும் பெருமையும் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும்.  அழகு சாதன பொருள் உற்பத்தி செய்வோர் மேன்மை பெறுவர். விஷப்பிராணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். கால்வலி, முதுகுவலி உடையவர்கள் சிகிச்சையை தொடர வேண்டி வரும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். தொழிலில் கிடைக்கும் ஆதாயம், தொழில் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிட்டும். புத்திரர்கள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.

 

மாணவர்களுக்கு,

தனக்குப் போகத்தான் தானம் என்ற எண்ணம் மனதில் குடிகொண்டிருந்தாலும் மற்றவர்களுக்கு சேவை செய்யும்  நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அவ்வாறு கிடைத்த வாய்ப்பை முழு மனதுடன் செயல்படுத்தி கல்வியில் வளர்ச்சி காண முடியும். நண்பர்களின் தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்கு துணைபோகாமல் இருந்தால், பின்னால் வரும் பெரிய துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பொருளாதாரமும், புகழும் உங்கள் நற்செயல்களுக்கு  துணைபுரியும். கல்வியில் இருந்த கவனச் சிதறல்கள் மாறி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். போக்குவரத்து இனங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நண்பர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். படித்துக்கொண்டே பகுதி நேர பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிட்டும். சகோதரர்களுடன் விட்டுக்கொடுத்து நடங்கள்.

பெண்களுக்கு,

தனியார் மற்றும் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நலன்  தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வாய்ப்பு உண்டு. மனதில்  இருந்த சஞ்சலங்கல் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். சகதோழிகளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு பொருளாதார நிலை வளம் நிறைந்ததாக இருக்கும். வீரு, பணியிடம் இவைகளில் ஏதேனும் ஒன்று மாறும் சூழ்நிலை உண்டு. சிலருக்கு பொன் ஆபரணங்களைபுதுப்பிக்கும் வாய்ப்பு கிட்டும். மன தைரியத்துடன் அணுகும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமணமான புதுப் பெண்களுக்கு புத்திரபேறு தாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிறு தொழில் செய்பவர்கள் குழுவினராக இணைந்து அரசின் உதவி பெற்று தொழிலில் மேன்மை அடைவர். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் பெருமை ஏற்படும்.

கலைஞர்களுக்கு,

 சினிமா, நடக கலைஞர்களுக்கு பொருளாதார அசதி அதிகமாகும். ஆடை வடிவமைப்போர், சித்திர, சிற்ப வேலை, தச்சு வேலை செய்பவர்கள் அதிகமான வேலை வாய்ப்பு பெறுவார்கள். கட்டடக் கலைஞர்கள், நகைத்தொழில் செய்வோர் புதிய தொழ்ல்நுட்பத்தை புகுத்தி பொருளாதார வசதி பெறுவர். தொழிலில் கிடைக்கும் பணம் போதுமான அளவுக்கு இருக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு,

சில சிக்கலான பேர்வழிகள் உங்களை ஆதரிப்பதாக கூரிக்கொண்டு அடைக்கலமாவது போல நடித்து உங்கள் பணத்திற்கும் பதவிக்கும் மறைமுகமாக ஊரு விளைவிப்பார்கள். உங்களின் பாரம்பரிய குணங்களால் சிரமமின்றி தப்பிவிடலாம். மென்மையான சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கடுமையான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வும், புகழும் பெறுவதில் மந்தநிலையும், பயணத்தால் அனுகூலமும் உண்டு. அரசியலோடு தொழில் நிறுவனம் நடத்துவோர் புத்திரர்களின் உதவியால் தொழில் மேன்மை பெறுவர்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை