2016 – ஆண்டு பொது பலன்கள்

பொது பலன்கள்

எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2016ம் புத்தாண்டு:

 நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2016 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

 உத்திர நக்ஷத்ரம் கன்னி ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் – ஆயுசுடனும் – ஆரோக்கியத்துடனும் – அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் – திருமணம் கைகூடி வரவும் – சந்தாண பாக்கியம் கிட்டவும் – நல்ல வேலை கிடைக்கவும் – வெளிநாடு பயணம் இனிதே பெறவும் – வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

 இந்த ஆண்டு சிவனுக்கும் சாஸ்தாவிற்கும் அய்யனாருக்கும் உகந்த நக்ஷத்ரமான உத்திரநக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் – காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் – எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் லகனதிபதி ராசிநாதன் புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான பரமனையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். மன்மத வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே. ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியனுடன் இணைந்தும் – தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தைரியஸ்தானத்திலும் –  தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தானத்திலும் சுக களத்திர சப்தமாதிபதி குரு லக்னத்திலும் – பஞ்சம ரண ருண ரோகாதிபதி சனி தைரிய ஸ்தானத்திலும் – லாபாதிபதி சந்திரன் லக்னத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனும் – செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே சுபகாரகன் குரு லக்னத்தில் சஞ்சரிக்கும் நிகழ்வானது 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அறிய நிகழ்வாகும். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் லாபாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அவர் குருவுடன் இணையும் போது குரு சந்திர யோகம் எனப்படும் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. தனது பார்வையால் குருவும் செவ்வாயும் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் – பாக்கியஸ்தானத்தையும் நிரப்புகிறார்கள். இது குருமங்கள யோகத்தைக் காட்டுகிறது. மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் – இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது.

 

உயர்வான வாழ்க்கைக்கு எண் 2:

 1 + 1 + 2 + 0 + 1 + 6 = 11 = 1 + 1 = 2;

 இது சந்திரனுடைய எண்ணாகும். சந்திரன் நட்பு வீடான கன்னியில் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் குருவுடன் இணைந்திருக்கிறார். மனதையும் இறைவியையும் குறிக்கும் எண் இரண்டாகும். ஒன்று என்பது ஆரம்பமானால் அதை இரட்டிப்பாக்கும் சக்தி கொண்டது இரண்டாவது எண்ணாகும். எனவே இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் அளிக்கும் என நம்பலாம். மேலும் ஆண்டின் கூட்டுத் தொகையானது 9. இந்த எண் தைரியகாரகன் செவ்வாயைக் குறிப்பதாகும். இவ்வருடம் எந்த ஒரு செயலையும் தொடங்க விரும்புபவர்கள் அம்மனையும்  – முருகனையும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் கைகூடும்.

 வளமாக இருக்க போகும் ராசிகள்:

ரிஷபம் – மிதுனம் – மகரம் – மீனம்

 முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:

கடகம் – சிம்மம் – கன்னி – தனுசு

 இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:

மேஷம் – துலாம் – விருச்சிகம் – கும்பம்

 பொதுப் பலன்கள்:

 கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் – மழலை பாக்யமும் – வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை – எழுத்துதுறை – ஆசிரியர் துறை – கணிதம் – ரசாயணம் – ஆண்மீகம் – சோதிடம் – வழக்கறிஞர் துறை – புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது வீட்டை தானே பார்ப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் – டீசல் – கச்சா எண்ணை – சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் – வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா – அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் – சுமத்ரா தீவு – ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

 இவ்வாண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்: வாக்கிய பஞ்சாங்கப்படி:

குருபகவான்:

வருட ஆரம்பித்தின் போதே குருபகவான் அதிசாரமாக கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். 2016 – ஜனவரி மாதம் 22ம் தேதி (மன்மத வருஷம் – தை மாதம் 8ம் தேதி) வக்ர நிவர்த்தியாக ஆரம்பிக்கிறார். சிம்மத்தில் நட்பாக இருக்கும் குரு பகவான் கன்னி ராசிக்கு ஆகஸ்டு மாதம் 1ம் தேதி (துன்முகி வருஷம் – ஆடி மாதம் 17ம் தேதி) மாறுகிறார். கன்னிக்கு மாறும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையாக மகர ராசியையும் – சப்தம பார்வையாக மீன ராசியையும் – நவம பார்வையாக ரிஷப ராசியையும் பார்க்கிறார்.

 ராகு நிலை:

2016 – ஜனவரி மாதம் 7ம் தேதி (மன்மத வருஷம் – மார்கழி மாதம் – 22ம் தேதி) – வியாழக்கிழமை:

கன்னி ராசியிலிருக்கும் ராகு பகவான் சிம்ம ராசிக்கு மாறுகிறார். மாறும் ராகு பகவான் மிதுனம் – கும்பம் – துலாம் ராசிகளைப் பார்க்கிறார். (சிலர் ராகுவிற்கு பார்வையில்லை என்பர்)

 கேது நிலை:

2016 – ஜனவரி மாதம் 7ம் தேதி (மன்மத வருஷம் – மார்கழி மாதம் – 22ம் தேதி) – வியாழக்கிழமை:

மீன ராசியிலிருக்கும் கேது பகவான் கும்ப ராசிக்கு மாறுகிறார். ரிஷபம் – சிம்மம் – தனுசு ஆகிய ராசிகளை பார்க்கிறார் கேது பகவான். (சிலர் கேதுவிற்கு பார்வையில்லை என்பர்)

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.