spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசுதந்திர தின சிந்தனைகள்! ஓமந்தூரார் தமிழில் சொன்ன முதல் சுதந்திரச் செய்தி!

சுதந்திர தின சிந்தனைகள்! ஓமந்தூரார் தமிழில் சொன்ன முதல் சுதந்திரச் செய்தி!

- Advertisement -

#MadrasPresidence அன்றைய சென்னை ராஜதானியின் நேர்மையின் முகவரி , விவசாய முதல்வர், சமுகநீதி காவலர், தமிழ் பயிற்சி மொழியின் முன்னோடி என பல அடையாளங்கள் பெற்ற முதல்வர் #ஓமந்தூராரின் தமிழகத்திற்கு தமிழில் முதலாவது சுதந்திர தினச்செய்தி.

சுதந்திர நன்னாளில் மக்களுக்கு எனது வாழ்த்து பாரத மக்கள் தங்கள் நாட்டை தாங்களே ஆளும் உரிமையை அடையும் இம்மகத்தான நன்னாளில் இம்மாகாண மக்களுக்கு எனது வாழ்த்தும் வணக்கமும் உரித்தாகுக. இவ்வைபவத்தன்று அஹிம்சை மார்கத்தின் மூலம் நம்மை சுதந்திர இலட்சியத்துக்கு அழைத்துவந்த நம் மாபெரும் தலைவர் மகாத்தமா காந்தி அடிகளுக்கு நாம் எல்லோரும் நமது பக்தியையும் அன்பையும் தெரிவிப்பது நம் கடமை.

பாரத தாயின் அடிமைத்தளைகளை அறுத்தெறியும் திருப்பணியில் தங்கள் ஆவியை அர்ப்பணம் செய்த ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கும் தங்கள் சொத்து சுதந்திரம் இளமை ஆகிய சகலவற்றையும் தியாகம் செய்த லட்சக்கணக்கான ஆண்கள் பெண்கள் இளைஞர் குழந்தைகள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகுக.

சுதந்திரம் கற்பிக்கும் பாடம்:
இந்த சந்தர்ப்பத்தில் நம் நாடு சுதந்திரமாய் இருந்த காலத்தை நோக்கி எனது நினைவு செல்கிறது. நம்முன் ஒற்றுமைக்குறைவும் ஒரு சிலரின் துரோகமுமே முதல் முதலாக அந்நியர் நம் நாட்டின் மீது படையெடுக்க காரணமாயிற்று.

ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜ் கதையைப்பற்றியும் மகாராஷ்டிர ஆட்சியின் வீழ்சியைப்பற்றி சற்று யோசித்தால் தெரியும்.

1857ஆம் வருடத்தில் சுதந்திரப்போர் மிகுந்த வீரத்துடன் நடத்தப்பெற்று ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வெற்றி நமக்கு கிட்டவில்லை. ஆனால் அன்று ஏற்றப்பெற்ற சுதந்திரக்கனல் ஒளி குறைந்ததேயாயினும் அணையவில்லை. மக்கள் மனச் சோர்வடைந்தனர்.

28 வருஷங்களுக்கு பின்புதான் மக்கள் மறுபடியும் சோர்வு நீங்கி விழித்தெழுந்து சுதந்திர ஆர்வம் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையை அமைத்தனர்.

காங்கிரஸ் மகாசபை முதலில் சற்று தயக்கத்தோடு ஆரம்பித்து நாட்கள் செல்லச்செல்ல உரம் கொண்டு போராட ஆரம்பித்தது. அதன் கொடியின் கீழ்தான் நாம் இன்று சுதந்திரம் அடைந்திருக்கிறோம்.

சுதந்திரப்போர்:

1921-ல் மகாத்மா காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1930-1932ம் வருடங்களில் நடந்த சட்ட மறுப்பு இயக்கங்களால் தேச மக்கள் வலுப்பெற்று தங்கள் பலத்தை உணர ஆரம்பித்தனர். 1942 ஆகஸ்டில் மகாத்மா காந்தியடிகள் இந்தியாவை விட்டு வெளியேறு என்ற வீரவாக்கை நாடெங்கும் பரப்பியபோது சுதந்திரப்போர் உச்ச நிலையை அடைந்தது.

அதே ஆகஸ்ட் மாதத்தில் நாடு சுதந்திரம் அடைவது மிகவும் பொருத்தமுடையதே. நாம் பல இன்னல்களை அடைந்தோம் நம்மில் பலர் உடமைகளையும், உயிரயும் இழந்தனர். ஆயினும் மற்ற நாடுகளின் சுதந்திரபோரோடு ஒப்பிட்டால் நாம் அடைந்த கஷ்ட, நஷ்டங்கள் குறைவேயாகும். இதற்குக்காரணம் மகாத்மா காந்தியடிகளின் அஹிம்சா மார்கமே. நமது சுதந்திரப்போர் யார் மீதும் மனக்கசப்பும் பகையும் இல்லாமல் ஆட்சிமுறையின் மீது மாத்திரம் நடத்திய போர் உலகத்துக்கே புது வழி காட்டியது.

பெற்ற சுதந்திரத்தை காத்திடுவோம்:

நாம் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிக்காக்க வேண்டுமாயின் நமது நாட்டின் நிர்வாகத்தை சீரிய முறையில் நடத்த நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நமது நாடு இயற்க்கை வளங்கள் எல்லாம் அமைந்தது. ஆயினும் நமது மக்கள் மிகவும் எளிய நிலைமையில் இருக்கின்றனர்.

விவசாயம் மிகவும் அதிகமாயிருந்தாலும் போதிய அளவு உணவு கிடைக்கவில்லை. உணவுக்குக்கூட வெளி நாட்டார் தயவை எதிர்பார்க்கும் நிலைமையில் இருக்கிறோம். வேண்டிய அளவு துனியும் இல்லை. மற்றும் பல பொருள்களுக்கும் வெளி நாட்டாரை எதிர்பார்க்காத நிலைமைக்கு நாம் வந்தால் அன்றி அடைந்த சுதந்திரம் வீணேயாகும்.

இதுவரையிலும் சுதந்திரத்தை அடைவதற்காக அந்நியருடன் போராடுவதிலேயே நம் காலத்தை கழித்தோம். சுதந்திரம் அடைந்ததன் பொருள் என்னவென்றால் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாயிருந்த தடைகளை அகற்றிவிட்டோம். இனி நாம் நமது நாட்டு மக்கள் எல்லோரும் கல்வியிலும் செல்வத்திலும் வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கு ஏற்றவாறு நமது அரசாங்கத்தை நடத்துவதற்கு தயார் செய்ய வேண்டும்.

இந்நாட்டு பாமர மக்கள் முன்னேற்றமடைந்து வேண்டிய அளவு உணவு, உடை, குடியிருக்க வீடு ஆகியவற்றை அடைந்தாலொழிய நாம் சுதந்திரம் அடைந்தோம் என்பதற்கு பொருளில்லை. அறியாமை வறுமை என்னும் இராகு கேதுக்கள் அகன்றாலன்றி சுதந்திர சூரியன் பிரகாசிக்காது. வலியோர் எளியோரை வாட்டாது அவர்களை எல்லாத்துறைகளிலும் முன்னேற்றுவதற்கு உதவி புரிய வேண்டும்.

குழப்பம் குறையட்டும்:
நாடு முழுவதும் ஒரே குழப்பமாயிருக்கிறது. இந்தியா துண்டிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் உற்பத்தி சாதனங்கள் தல்லாட்டமடைகின்றன. ஆகையால் இந்தியனைப் பிறந்த ஒவ்வொருவனும் நமது நாடு உலகத்தில் மேம்பட்டு விளங்க தன்னாலியன்றவாறெல்லாம் பாடுபட கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். நமது மாகாணத்து சர்க்கார் ஊழியர்கள் திறமையிலும் புத்திசாலித்தனத்திலும், யோக்கியப்பொருப்பிலும் பேர்போனவர்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் அவர்கள் தங்கள் பொது ஜனங்களின் ஊழியர்கள் என்பதை உணர்ந்து இன்னும் அதிக ஊக்கத்துடனும் பற்றுடனும் சேவை செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்கள் வர்க்கத்தை மாசுபடுத்தும் செயலை செய்யும் சிலரை வெளியேற்ற வேண்டியது அவர்கள் கடமை.

பொதுமக்கள் தாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாட்டு மக்கள் என்பதை மனதில் கொண்டு தங்கள் பொறுப்பையும் கடமையையும் சரிவர உணர்ந்து நாட்டின் பொருளாதார ஆத்மார்த்திக சமூக முன்னேற்றத்துக்கு பாடு பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உணவு உற்பத்தியை பெருக்குவோம்:
இந்த சந்தர்ப்பத்தில் நமது மாகாணத்தில் தற்போதைய உணவு நிலைமையை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. உணவு நிலைமை மிகவும் சீர்கேடு அடைந்திருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் முன் வந்து தன்னால் கூடிய வரையும் ஆழாக்கு அரிசி கூடக் குறையாமல் கொடுத்து உதவிலானன்றி இந்த சங்கடமான கட்டத்தை தாண்டுவது கஷ்டம் ஆகையால் இந்தப்புனித நாளில் ஒவ்வொருவரும் தங்களிடம் உபரியாக உள்ள எல்லாத் தானியத்தையும் கொடுப்பதை ஒரு எக்ஞமாகக்கொண்டு கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் அடைந்த சுதந்திரத்தை மனித சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தும் அறிவு, ஆற்றல், தைரியம், தீர்க்க தரிசனம் ஆகியவற்றை நமக்கு அளிக்குமாறு எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளைப் போற்றுகிறேன்.

– கே.எஸ். ராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe