தினமணிக்கு இன்று வயது 86… வாழ்த்துவோம்!

நான் நேசிக்கும் தினமணிக்கு இன்று வயது 86, என்னுடைய நடுப்பக்க கட்டுரைகளை தொடர்ந்து 1979லிருந்து வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய தினமணிக்கு வாழ்த்துகள்.

டி.எஸ்.சொக்கலிங்கம்(தென்காசி) ஏ.என். சிவராமன்(கீழாம்பூர்), மாலன் இன்றைய ஆசிரியர் நண்பர் வைத்தியநாதன் (அம்பாசமுத்திரம்)எங்களுடைய நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள். ஐராவதி மகாதேவன் ஆசிரியராக இருந்த காலங்களிலும் சிறப்பாக இருந்தது. அதன் ஆசிரியர் சம்மந்தமும் அனைத்து கொள்கைப் போக்குகளுக்கும் தினமணியில் இடமளித்தவர்.

தினமணியில் அரைகுறைப் பாமரன், கணக்கன் என்று பல புனைப் பெயர்களில் எழுதிய பத்திரிக்கைத் துறையின் மூத்த முன்னோடி ஏ.என்.சிவராமன் என்னை 1979 என்று நினைவு, உயர் நீதிமன்ற எனது சேம்பர் தொலைபேசியில் அழைத்தார். (அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது). நீங்கள் இராதாகிருஷ்ணனனா? நான் ஏ.என்.சிவராமன் பேசுகிறேன். எங்கே இருக்கிறீர்கள் என்றார். நான் கோர்ட்டில் இருக்கிறேன் என்றேன். மாலை 4 மணிக்கு தினமணி அலுவலகத்திற்கு வரமுடியுமா என்றார்.

வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாலை 5 மணிக்கு சென்று அவரை சந்தித்தேன். அன்றைக்கு தினமணி அலுவலகம் அண்ணா சாலையில் கிளப் ஹவுஸ் ரோடில் உள்ள எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருந்தது. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்தன. உங்கள் கட்டுரை நல்லாயிருக்குது என்று சொல்லிக் கொண்டே காபி வரவழைத்தார்.

எந்த ஊர் என்றார். நான் கோவில்பட்டி பக்கத்திலுள்ள கிராமம் என்றேன். அப்படியா எனது துணைவியார் ஊரும் கோவில்பட்டி தான் என்றார்.

இப்படியாக இருபது, இருபத்தைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த நினைவுகள் இன்றைக்கும் கண்முன்னே காட்சியாக இருக்கிறது.

மறுநாளே அந்த கட்டுரை தினமணியில் பிரசுரமானது. இன்று வரை முக்கியமான நாட்டு நடப்புகள், அரசியலைக் குறித்தான 800 கட்டுரைகள் வரை கணக்கில் வரும். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஏ.என்.சிவராமன்.

பெரியவர் ஏ.என்.சிவராமன் அவர்களை அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு வரும். இன்றைக்கு தினமணி நாளிதழ் தந்த ஊக்கம், அனைத்துப் பத்திரிக்கைகளிலும் கட்டுரை எழுதக் கூடியதொரு வல்லமையையும் அடியேனுக்குத் தந்தது.

தினமணி பிரசுராலாயம் ஆரம்பத்தில் 1940களின் இறுதியில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டது.

மாநில சுயாட்சியைக் குறித்து முதன்முதலில் ‘மாகாண சுயாட்சி’ என்ற தலைப்பில் ஏ.என்.சிவராமனின் நூலை 1950 காலக்கட்டங்களிலேயே தினமணி வெளியிட்டது. இதைப் போலவே அரசியல் கோட்பாடுகள் செல்கின்ற சாக்ரடீஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் வெளியாயின. இன்றைக்கு பாரதியின் 97வது நினைவு நாள். தினமணிக்கு 84வது பிறந்தநாள்.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” – என்ற இந்த பாரதியின் வரிகளை தாரக மந்திரத்தோடு தினமணி தொடர்ந்து செயல்படுகிறது.

இன்னமும் தினமணிக்கு பணிகள் கடமைகளும் இருக்கின்றன. தினமணி திரும்பவும் தன்னுடைய நூல் வெளியீட்டு பதிப்புத் துறையையும் துவக்க வேண்டும். தன்னுடைய பக்கங்களையும் சற்று கூடுதலாக்க வேண்டும். அதனுடைய தலையங்கங்கள் நாட்டிற்கு வழிகாட்டுகின்றன. மேலும் வளர்க தினமணி!

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்குரைஞர், செய்தித் தொடர்பாளர் திமுக.,)
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...