spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமண விலக்கும்... மன விலக்கும்!

மண விலக்கும்… மன விலக்கும்!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் முக்கியப் பிரச்னையாக இருப்பது கணவனும் மனைவியும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதுதான். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டு, அவர்கள் சேர்ந்து வாழ வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.

முன்பு ஏராளமான பேர் ஆனந்தமாக மணவாழ்வு வாழ்ந்தார்கள். இன்று பலருக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஏன் இப்படி? பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணங்களும் சரி, காதல் திருமணங்களும் சரி, இரண்டுமே குறுகிய காலத்தில் ரத்தாகின்றன. ஏன்?

முன்புள்ள இல்லறத்திற்கும் இப்போதுள்ள இல்லறத்திற்கும் ஏதோ சில முக்கிய வேறுபாடுகள் இருக்க வேண்டும். அந்த வேறுபாடுகள் எவை என்று கண்டறிந்து அவற்றை நீக்கி விட்டால், இப்போதும் முன்புள்ளது போலவே ஆனந்தமான இல்லறம் சாத்தியமாகும். அந்த வேறுபாடுகள் தான் என்ன?

முதலாவது, முன்பு சந்தோஷமாக வாழ்ந்தவர்கள், அடிக்கடி வெளிப்படையாகச் சண்டை போட்டுக் கொண்டார்கள்! கணவன் மனைவி என்றால் அடிக்கடிச் சண்டை போட்டுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியாக இணைந்து வாழ முடியும்!

இதென்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா? இது கதையல்ல. நிஜம். ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறது வள்ளுவம்.

ஆண், பெண் என்றாலே உடல் கூறிலிருந்து எல்லாமே வேறுபடத்தான் செய்கின்றன. எனவே மனதளவிலும் பல மாறுபட்ட கருத்துகள் உருவாவது இயல்புதான். அந்த மாறுபாடுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட வேண்டும். அப்படி வெளிப்படுத்தும் முறைதான் சண்டை போடுவது என்பது.

கணவனும் மனைவியும் சண்டை போடுவதில் என்ன தவறு? சண்டை போடுகிறவர்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள் என்றுதானே பொருள்? பிறகு கலந்துபேசி ஒரு சமாதானத்திற்கு வந்தால் போகிறது.

சமாதானத்திற்கு வரமுடியாமலே சண்டை நிறைவடைந்தாலும் தான் என்ன? நம் கருத்தை வெளிப்படுத்திவிட்டோம் என்ற மகிழ்ச்சியான உணர்வு கணவனுக்கும் மனைவிக்கும் கிடைக்குமல்லவா?

அண்ணனுடனும் தம்பியுடனும் அக்காவுடனும் தங்கையுடனும் ஏன் அப்பா அம்மாவுடன் கூட நாம் சண்டை போடுவதில்லையா என்ன? அதற்காக அந்த உறவை ரத்தா செய்துவிட்டோம்? சண்டை போடுகிற உரிமையும் பிறகு சமாதானமாகி ஆனந்தமாக வாழ்கிற கடமையும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இல்லாமல் பின்னே அடுத்த வீட்டுக்காரர்களுடனா இருக்கப் போகிறது?

உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படையாகத் தெரிவித்து விட்டால் நம் குமுறல்களுக்கு ஒரு வடிகால் கிடைத்து விடுகிறது. பிரச்னை தீர்வதென்பது இரண்டாம் கட்டம். ஆனால் அது வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட உடனேயே அந்த அளவில் அது அமைதி கண்டு விடுகிறது.

அல்லாமல் வெளிப்படைப் பேச்சை நிராகரித்து நம் எண்ணங்களை மனத்தில் வைத்துக் குமுறும்போது மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகி அது விவாக ரத்தாக வெடிக்கிறது.

ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா விஷயங்களிலும் ஒன்றுபட்டுப் போகும் தம்பதி என்று உலகில் எங்கும் யாரும் கிடையாது. கருத்து வேறுபாடுகள் இல்லாத தம்பதி இருக்கவே இயலாது. கருத்து வேறுபாடுகளே இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அந்த வாழ்வில் சுவாரஸ்யமே இராது.

கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாத அளவு அன்பின் ஆழம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கருத்து வேறுபாடுகள் இயல்புதான் என்பதைப் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து வாழும் மனமுதிர்ச்சி இருவரிடமும் இருக்க வேண்டும்.

இல்லறத்தைப் பொறுத்தவரை யார் தோற்கிறார்களோ அவர்களே வெல்கிறார்கள். ஒருவர் தாமே விரும்பி மகிழ்ச்சியாகத் தோற்கிறபோது அங்கே அவர்களின் இல்லறம் ஜெயிக்கிறது. நல்ல தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து யார் முதலில் தோற்பது என்பதில் போட்டி நிலவவேண்டும்!

இதெல்லாம் சிரமமான விஷயமே அல்ல. என் கணவன், என் மனைவி என்ற அன்புரிமை வருகிறபோது தோல்வி எத்தனை சுகமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

காதல் திருமணமானாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் சரி, விவாகரத்திற்கான அடிப்படை, நாம் நினைத்ததுபோல் நம் வாழ்க்கைத் துணை அமையவில்லை என்ற எண்ணம் தான். இந்த எண்ணமே தவறு. அது எப்படித் தவறு என்பதைப் பார்ப்போம்.

நாம் நம் துணையைத் தேர்வுசெய்வதாக நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் அது தேர்வல்ல. தானே அமைவதுதான். நாம் தேர்வு செய்தாலும் கூட, காலப் போக்கில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நம் வாழ்க்கைத் துணையிடம் இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். பிறகு நமக்குப் பிடித்த மாதிரி நாம் தேர்வுசெய்தோம் என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான் அல்லவா?

காலப்போக்கில் நாமும்தான் பல வகைகளில் மாறுகிறோம். திருமணத்தின்போது வெண்டைக்காய் பிடிக்காமல் இருந்த ஒருவருக்குச் சில வருஷங்களுக்குப் பிறகு வெண்டைக்காய் மிகவும் பிடிக்கிறது! இது ஓர் உதாரணம். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

நாம் எப்படி மாறினாலும் நம்மை நம் வாழ்க்கைத் துணை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நம் வாழ்க்கைத் துணையிடம் நமக்குப் பிடிக்காத ஒரு சிறு மாற்றம் நேர்ந்தாலும் கூட நாம் அளவுகடந்து சிணுங்குகிறோம். இது என்ன நியாயம்?

உண்மையில் திருமண உறவு மட்டுமல்ல. எந்த உறவும் நம் தேர்வல்ல. நம் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி என ரத்த பந்தத்தால் வரும் எந்த உறவும் இயற்கையாக நேர்வதுதான். நாம் விரும்பித் தேர்வுசெய்து கொள்வதல்ல.

இவர்களுடனெல்லாம் ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் நாம் வாழ்கிறோம். ஆனால் வாழ்க்கைத் துணை என்று வந்துவிட்டால் மட்டும் கருத்து வேறுபாடே இல்லாமல் எல்லா வகையிலும் நமக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இது சரியா எனச் சிந்திக்க வேண்டும். கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு என்பது மிக மிக இயல்பான விஷயம் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறார்கள். பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் மிக விரைவில் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்!

முன்பெல்லாம் பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் வாழ்த்துச் சொல்லிக் கொள்வதும் பரிசு வழங்கிக் கொள்வதுமான செயற்கை வழக்கங்கள் இருந்ததில்லை.

இத்தகைய நாட்களில் தம்பதிகள் வீட்டிலுள்ள பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவார்கள். சேர்ந்து கோயிலுக்குப் போவார்கள். தங்கள் நல்வாழ்க்கைக்காகவும் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்பார்கள். ஏனென்றால் தங்கள் வாழ்க்கைத் துணையே இறைவன் தங்களுக்குக் கொடுத்த பரிசுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

மனநலம் குன்றிய மனைவியை வாழ்நாள் முழுதும் பராமரித்த கணவனையும், ஊனமுள்ள கணவனுக்கு வாழ்நாள் முழுதும் பணிவிடை செய்த மனைவியையும் நாம் முன்பு நிறையப் பார்த்திருக்கிறோம். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணத்திற்கு முன் விபத்தில் கால் போனதும், திருமணம் ஆனபின் இது நடந்திருந்தால் நான் என்ன செய்யப் போகிறேன் என அதே பெண்ணை மாப்பிள்ளை திருமணம் செய்துகொண்டதும் கூட இதே தேசத்தில் நடந்திருக்கிறது.

உடல் ஊனத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் தம்பதியர் ஆனந்தமாக வாழ்ந்த தேசம் இது. ஆனால் எல்லாம் நிறைந்திருந்தும் அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து வரை செல்லும் மன ஊனம் படைத்தவர்கள் அதிகம் பெருகியுள்ள மோசமான காலம் இது.

விவாகரத்து தவறல்ல. ஆனால் தவிர்க்கவே இயலாத மிக நியாயமான காரணங்களுக்காகத் தான் விவாகரத்து என்ற பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்க வேண்டும். இயன்றவரை அனுசரித்து வாழ்வதுதான் வாழ்வு.

வாழ்க்கைத் துணையிடம் உள்ள சில தீய பழக்க வழக்கங்கள் பிடிக்கவில்லை என்றால், தொடர்ந்து முயற்சி செய்து அந்தப் பழக்கங்களிலிருந்து வாழ்க்கைத் துணையை மெல்ல மெல்ல மீட்கலாம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும், கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும் என லட்சிய இல்லறத்திற்கு இலக்கணம் வகுத்தார் கண்ணதாசன். என்ன வேறுபாடுகள் இருந்தாலும் எத்தகைய கருத்து மோதல்கள் இருந்தாலும் அன்பால் மனங்கள் இணைந்து விட்டால், அங்கே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

  • திருப்பூர் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe