Home உரத்த சிந்தனை ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

IMG-20201122-WA0027

யுடியூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், நண்பர் ஒருவர் சொன்னார் என்று ஒரு விஷயத்திற்காக எனக்கு போன் செய்தார்… “சார் இந்த விஷயத்தை இப்படி சொல்லுங்க… நாம கொளுத்தி போடுவோம்! அது பத்திக்கிட்டு எரியும்!” என்றார்.

சமூக ஊடகம் அல்லது காட்சி ஊடகம் என்று வரும்பொழுது சிலர் சாதாரணமாகவே இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை கேட்க முடிகிறது! செய்தி அல்லது செய்தியின் உள்ளர்த்தத்தை இவ்வாறு பத்திக்கிட்டுஎரியச் செய்யும் வகையில், கொளுத்திப் போடுவோம் என்ற எண்ணத்தையே பலரும் கொண்டிருக்கிறார்கள்! இதுதான் தற்போதைய தமிழகத்தின் ஊடகத்துறை சாபக்கேடு என்றே சொல்லலாம்!

சமூக ஊடகங்கள் கோலோச்சுகின்ற இந்தக் காலத்தில் காட்சி ஊடகங்களும் அத்தகைய மனப்போக்குக்கு மாறியுள்ளனர்! டிஆர்பி ரேட்டிங் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்! தங்கள் சார்பில் கொளுத்திப் போடும் விஷயம் எப்படி சமூகத்தில் பதட்டத்தை உருவாக்குகிறது என்பதைக் காணவே இத்தகைய மன ஓட்டத்தில் உள்ள பலரும் விரும்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது!

இத்தகைய நெருக்கடி நிலையில்தான் இன்றைய தமிழக ஊடகங்கள் பயணிக்கின்றன!

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று இத்தகைய மக்களை முன்னிறுத்தி தான் பாடினார்கள் என்னவோ?! அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் வக்கனையாக வார்த்தை ஜாலங்களால் இளைஞர்களின் மனத்தை கரைக்கு வந்த தனிநாடு கோஷ்டியினர் பிற்காலத்தில் தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து என்று உணர்ந்தபோது மாநில சுயாட்சிக்கு மாறிக் கொண்டனர்.

அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து ருசி பார்த்து இப்போது மீண்டும் தனித்தமிழ்நாடு கோஷத்தை முன் வைத்துள்ளனர் அவர்களுக்காக பல்வேறு இயக்கங்கள் புற்றீசல்கள் போல் முளைத்திருக்கின்றன
தேசியம் இழையோடிய இந்த மண்ணில்தான் திராவிட நாட்டு சிந்தனைகளும் விதைக்கப்பட்டன அதற்கான முக்கிய தளமாக அமைந்தவை ஊடகங்களில் திரைப்படம் எனும் ஊடகத்தின் வாயிலாக பிரிவினைவாத எண்ணங்களை விதைத்தனர் இன்று அவை விஷ விருட்சமாகி தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் இயக்கங்கள் கட்சிகள் நாளிலேயே பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் அச்சு ஊடகங்கள் சில அரசியல் சார்பற்ற அவர்களால் நடத்தப்பட்டு வந்தாலும் ஓரிரு நாளிதழ்கள் வார மாத இதழ்கள் அரசியல் கட்சிகளால் ஏன் அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றன அவற்றை பொதுமக்கள் வாங்குவதும் வாங்கும் அவரவர் விருப்பம் எனவே பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் அத்தகைய கட்சி சார்பு அரசியல் ஏடுகள் குறைந்த அளவிலேயே விற்பனை ஆகின்றன

ஆனால் காட்சி ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் இயக்கங்களாலேயே நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் அரசியல் சார்பற்ற செய்தி தொலைக்காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தகைய ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் பலரும் அந்தந்த கட்சி சார்பு நபர்களாகவே பார்க்கப்படுவது துரதிருஷ்டவசமாக ஒன்று

அத்தகைய காட்சி ஊடகங்களின் வழியாக செய்திகளும், உருவாக்கப்பட்ட காட்சிகளும், ‘கொளுத்திப் போடும்’ விதமாகவே மக்கள் மத்தியில் இலவசமாக திணிக்கப்படுகின்றன. எனவேதான் அச்சு ஊடகங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று பிரதமர் மோடி ஒரு முறை குறிப்பிட்டார். ஒவ்வொரு சர்வதேச அமைப்பிலும் இந்தியா மிக வலுவான இடத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமும் உலகளாவிய நற்பெயரைப் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

இந்திய தயாரிப்புகள் மட்டுமல்ல, இந்தியாவின் குரலும் தற்போது உலக அளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. ஒவ்வொரு சர்வதேச அமைப்பிலும் இந்தியா மிக வலுவான இடத்தை பெற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமும் உலகளாவிய நற்பெயரை பெறுவது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கப்படுவது போன்று இந்திய நிறுவனங்கள் இலக்கிய விருதுகளை வழங்க வேண்டும். இது காலத்தின் தேவை. நாட்டுக்கு அவசியமானது.

கொரோனா பரவல் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பணிகளை ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊடகங்கள் செயல்பட்டன. சில நேரம், ஊடகங்களும் விமசனத்துக்கு உள்ளாகின்றன என்றாலும் சமூக ஊடகங்களின் இந்த யுகத்தில் ஒவ்வொருவரும் விமர்சனங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

விமர்சனம் என்ற பெயரில் கட்சி சார்ந்து அரசியல் ரீதியான காழ்ப்புணர்வை நினைப்பதையே ஊடகங்கள் பல முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர் அத்தகையோரின் பின்னணியில் எதோ சில இசங்களும், உள்நோக்கங்களுடன் கூடிய குறிக்கோள்களும் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழகம் போன்ற மாநிலங்களில், வெறுப்புணர்வும் பிரிவினை எண்ணங்களும் பரப்பப்படுகின்ற தற்போதைய சூழலில், தேசிய எண்ணத்தையும் சிந்தனைகளையும் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் ஒரு சில ஊடகவியலாளர்களையாவது முன்னிறுத்த வேண்டிய கட்டாய சூழல் ஊடக உலகுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் ஊடகங்கள் முற்றிலுமாக மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.

காரணம் இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் அத்தகைய வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேர்மையான மற்றும் நேர்மறையான தன்மையுடன் தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயச் சூழலில் ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ளன!

ஊடகவியலாளர்கள் பலர் தங்களின் சார்புத் தன்மைய் கொண்ட செயல்பாடுகளால் தினந்தோறும் சமூக ஊடகங்களில் மற்றும் பொதுத் தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள்.

இது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்காலத்தில் இருப்பதற்கு காரணம் வாசகர்களின் விழிப்பு உணர்வே.
பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் கைகளில் இன்று ஸ்மார்ட்போன்கள் தவழ்கின்றன, அவை பொய்களை களையெடுத்து நிஜங்களை வாசகர் தளங்களில் கொண்டு சேர்க்கின்றன. அவற்றின் மூலம் ஊடகவியலாளர்கள் சிலரை, அரசியல் கட்சிகளின் கொள்கை பரப்பு செயலாளர்களாகவே அவை அடையாளப் படுத்திவிடுகின்றன.

இத்தகைய அபாயகரமான சூழலில்தான் தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் போன்றவற்றின் தேவை ஊடக உலகுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒருசார்புத்தன்மை என்பதிலிருந்து, பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும். அவர்களை தேசிய நோக்குடன் செயல்படும் இதழ்களும் சங்கங்களும் ஊக்குவிக்க வேண்டும் .

  • செங்கோட்டை ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version