Home அடடே... அப்படியா? “தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”! வீடுதோறும் பிரசாரம்!

“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”! வீடுதோறும் பிரசாரம்!

grahasamparka
தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள் வீடுதோறும் பிரசாரம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்

உறங்கியது போதும்!
விழித்துக் கொள்க! வெற்றி பெறுக!

“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”! என்ற தலைப்புடன் கூடிய சிறு பிரசுரங்களை வீடுதோறும் நேரடியாகச் சென்று வழங்கி, அதிலுள்ள கருத்துகள் குறித்து சிறிது நேரம் விவாதிக்கும் வகையில் பிரசாரத் திட்டத்தை தெய்வீகத் தமிழக சங்கம் முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இந்த பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.

இந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு!

‘சார் வணக்கம்’, என்று ஒரு குரல் வீட்டு வாசலிலிருந்து ஒலித்தது. வாசலில் கூட்டமாக சிலர் நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ கும்பாபிஷேகம் வசூல் வேட்டை என்று நினைத்து முகத்தை சுளித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

‘சார் இந்தாங்க’, என்றவாறு ஒரு பாக்கெட் சைஸ் புத்தகத்தை கையில் கொடுத்தார்கள். உற்று நோக்கும் போது அவர்கள் இந்துக்களுக்கு ஆதரவாக ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

என் அனுமானம் சரிதான். சில கருத்துக்களை பகிர்ந்துவிட்டு நகர்ந்தார்கள். அவர்கள் கொடுத்த புத்தகத்தின் அட்டையில் “தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள் . . . “ என்று அச்சிடப்பட்டிருந்தது.

இரண்டாம் பக்கத்தில் ‘ நான் எனது குடும்பம், குழந்தைகள் என வாழ்வது போதுமா?’ என்ற தலைப்பில் நாம் கவனிக்கத் தவறிய சமூக அவலங்களை பட்டியலிட்டிருந்தனர். மூன்றாம் மற்றும் நான்காம் பக்கத்தில் தமிழின் அருமை, பெருமை பட்டியலிடப்பட்டிருந்தது. ஐந்தாம், ஆறாம் பக்கத்தில் மதமாற்றம் பற்றியும் அதனால் தேசம் சந்திக்கும் அபாயம் பற்றியும் பட்டியலிடப்பட்டிருந்தது.

ஏழாம் பக்கத்தில், ‘கோவில்கள் . . . அன்று’ என்ற தலைப்பில் கோவில்கள் பற்றிய குறிப்புகள் இருந்தது. எட்டாம் பக்கத்தில், ‘கோவில்கள் இன்று’ என்ற தலைப்பில் தமிழக கோவில்களின் இன்றைய அவல நிலை பட்டியலிடப்பட்டிருந்தது.

<em>தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள் வீடுதோறும் பிரசாரம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் <em>

எட்டாம் பக்கத்தில் காணப்பட்ட முக்கியமான சில வாசகங்கள்.

ஃ ‘கோவில்களை பாதுகாக்க என ஏற்படுத்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை, ஆலயங்களை சீரழித்து வருகிறது.

ஃ மொத்தமுள்ள 36000 கோவில்களில், பல ஆயிரம் கோவில்களில் விளக்கேற்றக்கூட ஏற்பாடு இல்லை.

ஃ சுமார் 4.75 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில், 50000 ஏக்கர் நிலங்களை காணவில்லை.

ஃ திருடப்பட்ட 1204 சாமி சிலைகளில், 56 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு, அதிலும் 18 மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றவை, சில அதிகாரிகள், அரசியல்வாதிகளின் உடந்தையோடு வெளி நாடுகளுக்கு கடத்தப்படுள்ளன’,

ஃ சராசரியாக, ரூபாய் 5000 கோடிக்கும் மேலான வருவாய் ஈட்டக்கூடிய திருக்கோவில்களில், வெறும் ரூபாய் 65 கோடி மட்டுமே கணக்கில் காட்டி அதிலும் ஊழல் அதிகாரிகளின் ஆடம்பரத்திற்கு செலவழிக்கப்படுகிறது.

ஃ இதுவரை ஒரு கோவில்கூட அறநிலையத்துறை சார்பாக கட்டியதில்லை.

ஃ சுயநல நாத்திகவாதிகள் அறங்காவலர்களாகவும், ஹிந்து அல்லாதவர்கள் அற நிலையத்துறை அதிகாரிகளாகவும் இருக்கும் போது நிர்வாகம் எப்படி நியாயமாக இருக்கும்?

இந்த எட்டாம் பக்கத்தில் சொல்லப்பட்டிருந்த பட்டியலை படித்தவுடன் மனம் கனக்கத் தொடங்கியது. இதில் யாரைக் குற்றம் சாட்டுகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், எதுவும் தெரியாதது போல எருமையின் முதுகில் பெய்யும் மழை போல உணர்வில்லாமல், தடித்த தோலுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

சமூக அக்கறை சிறிதேனும் நம்மிடமிருந்தால்:

பல ஆயிரம் கோவில்கள் விளக்கில்லாமல் இருண்டு கிடக்கிறதே! ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பியிருப்போமே! வேடிக்கைதானே பார்க்கிறோம்.

‘ஐம்பதாயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை’, என்று தெரிந்தும், அமைதியாகத்தானே இருக்கிறோம். வீட்டில் காணாமல் போன நசுங்கிய சொம்புக்காக வருத்தப்படும் நாம் காணாமல் போன ஐம்பதாயிரம் ஏக்கர் நிலத்தைப் பற்றிய கவலை நம்மிடம் இருக்கிறதா? வேடிக்கைதானே பார்க்கிறோம்!

‘திருடப்பட்ட 1204 சாமி சிலைகளில், 56 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 18 மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது’, என்ற செய்தியை படித்தவுடன், திருட்டை கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத சமூகத்திலா நாமிருக்கிறோம்? என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது. வேடிக்கைதானே பார்க்கிறோம்?

ஒரு மேதாவி சில நாட்களுக்கு முன், ‘இருக்கும் வரை கடவுள், காணாமல் போனவுடன் சிலையா?’ என்று கேட்டிருந்தார். அட மேதாவியே! ‘அடுத்தவர் மகளை மணந்தவுடன், அவள் உனக்கு மகளாவதில்லை. மனைவியாகிறாள். அதெப்படி அங்கே மகள், இங்கே மனைவியா? என்று என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறீர்களா? இருக்கும் இடத்தின் அடிப்படையிலும், யாரிடத்தில் எது இருக்கிறதோ அதன்படியும் அதன் பெயரும் உபயோகமும் மாறும். கோவிலில் இருந்தால் கடவுள். திருடனிடம் இருந்தால் அது சிலை. இதை புரிந்துகொள்ளாத முட்டாள்களின் பேச்சையும் இந்த உலகம் ரசிக்கிறது என்பது வேதனையானது

ரூபாய் 5000 கோடி வருமானத்தை, ரூபாய் 65 கோடியாக கணக்கு காட்டும் போது நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பஸ்ஸில் நடத்துனர் ஒரு ரூபாய் கொடுக்காவிட்டாலும் வம்படியாக பேசி வாங்கும் நாம், இந்த விஷயத்தில் வேடிக்கைதானே பார்க்கிறோம்!

இப்படி கேள்விகளை நாம் எழுப்பிக்கொண்டே போகலாம். இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில், “நம்மிடம் ஓனர்ஷிப் இல்லை” அதாவது, இந்து என்ற உணர்வு இல்லை. கோவில்களும், அதன் மீது உரிமையும் நமக்கில்லை என்ற சிந்தனை நம்மிடம் வெகுகாலமாக ஒட்டிக்கொண்டுள்ளது. அதைவிட மோசமான சிந்தனை, ‘நமக்கு தொந்தரவில்லாமல் இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் நகரட்டும். எந்த பிரச்னையும் இல்லை’, என்று நாம் ஒவ்வொருவரும் நினைப்பதே.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு மகாபாரதத்தில் உத்யோக பர்வம் – அத்தியாயம் 4ல் சொல்லப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

கேசனி என்பவள் அழகான பெண். அவளை மணக்க பிரகலாதனின் மகன் விரோசனனும், சுதன்வா என்பவனும் விரும்பினார்கள். இருவரும் கேசனியிடம் சென்றார்கள். தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ‘இருவரில் யார் உயர்ந்தவரோ அவரை மணப்பேன்’, என்று கேசினி கூறினாள். இருவரில் யார் உயர்ந்தவர் என்ற விவாதம் எழுந்தது. விவாதத்தில் யார் ஜெயித்தாலும் அவனை கேசனி மணந்து கொள்வாள். யார் வெற்றிபெற்றது என்பதைச் சொல்ல ஒரு நடுவர் வேண்டுமல்லவா!

‘விரோசனனின் தந்தை பிரகலாதனே நடுவராக இருக்கட்டும்’, என்று போட்டியாளர்களில் ஒருவனான சுதன்வா சொன்னான். அதன் அடிப்படையில் இருவரும் பிரகலாதனை சந்தித்தார்கள்.

‘பிரகலாதரே! எங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்று அறிய விரும்புகிறோம். தர்மத்தின் பாதையிலிருந்து தவறாமல் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’, என்று சுதன்வா கேட்டுக்கொண்டான்.

பிரகலாதன் பேசினான்.

‘தர்மம் என்பது இப்படித்தான்’ என்று வரையறுத்துச் சொல்ல முடியாதது. அதற்கு நிறம் கிடையாது. கத்தி முனையைவிட கூர்மையானது. அதைப் பற்றி முழுமயாக அறிந்தவர் போல யாரால் பேச முடியும்? சுதன்வாவே! இங்கே உன்னோடு போட்டியில் இருக்கும் விரோசனன் என்னுடைய மகன். இந்த நிலையில் உங்கள் இருவருக்குமிடையே நியாயத்தை வழங்க வழி தெரியாமல் திகைத்து நிற்கிறேன்’, என்றான் பிரகலாதன்

சுதன்வா பேசினான்

‘கேட்கப்படும் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்வது உங்களது கடமை. தவறான பதிலை தெரிந்தே சொன்னாலும் சரி, அல்லது பதிலைச் சொல்ல தயங்கி பேசாமல் இருந்தாலும் சரி, நீங்கள் பாவம் செய்தவராவீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆகையால், தயக்கமில்லாமல் தெரிந்த பதிலை நியாயமாகச் சொல்லுங்கள்’, என்று கூறினான் சுதன்வா.

பிரகலாதன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. மனத் தெளிவு பெற நினைத்தான். தர்மங்கள் அறிந்த ஒரு ஹம்சப் பறவையிடம் சென்றான்.

<em>தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள் வீடுதோறும் பிரசாரம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் <em>

‘பறவையே! என் மகனும் மற்றொருவனும் விவாதத்தில் ஈடுபட்டு என்னிடம் நியாயம் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்று கேட்டார் பிரகலாதன்.

‘பிரகலாதா! மகன் என்பதால் அவனுக்கு நீ ஏராளமான செல்வங்களை கொடுக்கலாம். அது உன் இஷ்டம். அதே நேரத்தில், மற்றொருவருக்கு அதைப் போல செல்வத்தை கொடுத்தே தீரவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், மகனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, உன்னிடம் வரும் போது அவர்களுடைய கேள்விக்கு எது நியாயமான பதிலோ, அதைச் சொல்லவேண்டும். இதுதான் தர்மம்’, என்று கூறியது ஹம்சப் பறவை.

‘ஹம்சப் பறவையே! எனக்கு ஒரு சந்தேகம். இது போன்ற நேரத்தில் ஒருவன் தனது மனதில்பட்ட உண்மையை தெளிவாக எடுத்துச் சொல்லவில்லையென்றால், அவனுக்கு ஏற்படக்கூடிய விளைவு என்ன?’ என்று கேட்டார் பிரகலாதன்

‘பிரகலாதா! தர்மத்தை அறிந்த ஒருவன் அதை எடுத்துச் சொல்ல வேண்டிய நேரத்தில் மெளனமாக இருந்துவிட்டால் தர்மம் அவனை அழித்துவிடும். ஒரு சபையில் ஒருவன் கண்டனத்திற்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டால், அவன் கண்டிக்கப்பட வேண்டும். அப்படி அந்த சபை அவனை கண்டிக்கவில்லை என்றால், அந்த சபைக்கு எவன் தலைவனோ, அவன் தவறு செய்தவனின் பாவத்தில் பாதியை அடைந்துவிடுவான். தவறு செய்தவனுக்கு நான்கில் ஒரு பாகம் பாவம் மட்டுமே போய்ச்சேரும். மீதமுள்ள நான்கில் ஒரு பங்கு பாகம், அந்த சபையில் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களைப் போய்ச் சேர்கிறது.

அதே நேரத்தில், கண்டிக்க வேண்டியவனை கண்டிக்கும் சபைத் தலைவன் பாவம் அற்றவனாகிறான். கண்டிக்கும் சபையோர்களையும் பாவம் வந்து சேராது. இதனால், தவறு செய்தவனுக்கு மட்டுமே பாவம் முழுமையாகப் போய்ச் சேர்கிறது’ என்று சொல்லியது பறவை.

இதைக் கேட்ட பிரகலாதன் தன் மகன் விரோசனனிடம் ‘சுதன்வாதான் உன்னைவிட உயர்ந்தவன்’, என்ற நியாயமான தீர்ப்பை அளித்தான்.

இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷயம் மிக எளிமையானது. நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளை நாம் தட்டிக்கேட்க வேண்டும். அவ்வளவுதான்.

கோவில் நிலங்களுக்கும், இந்துக்களுக்கும் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என்ற முறையில் தவறுகளை கண்டிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அரசுக்கும் இருக்கிறது. ஆனால், நம்முடைய அரசுகள் இத்தகைய கண்டிப்புகளைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த கால வரலாறு இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் அப்படி இருந்துவிட முடியாது. இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும், கோவில் நிலங்களில் செய்த தில்லுமுல்லுகளையும் ஒரு இந்து என்ற முறையில் நாம் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும். இது நாள் வரை நம்முடைய அமைதி தவறு செய்தவர்களை பாவங்களிலிருந்து காப்பாற்றி வந்துள்ளது. இதனால், நம் கணக்கிலும் பாவங்களை சேர்த்துள்ளது. இந்தப் பாவங்கள் தான் இந்துக்களின் இன்றைய நிலைக்கு காரணமோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

எது எப்படியோ, இன்றிலிருந்தாவது, ஒவ்வொரு பிரச்னையிலும் நமது குரலை எழுப்புவோம். நம்முடைய ஒவ்வொரு எழுச்சியும் உணர்வில்லாமல் மழுங்கிக்கிடக்கும் மற்ற இந்துக்களை தட்டி எழுப்பட்டும். இது இந்துக்களை நிந்திப்பவர்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய நிலையில் தேர்தலும், ஓட்டும்தான் இந்துக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் களம். இதை புரிந்துகொள்ளுங்கள், துள்ளியெழுங்கள். பாவத்தில் பங்கு நமக்கு வேண்டாம்.

உறங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் முயற்சியில் இறங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். விழித்துக் கொள்வோம். இழந்த உணர்வை மீட்டெடுத்து அடுத்த தலைமுறை இந்துக்களுக்கு அப்பழுக்கில்லாத உலகையும், இந்து தர்மத்தையும் விட்டுச் செல்வோம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version