spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதேசியப் பயிர் வளர்ந்து செழித்த மண்ணில்தான் ‘களை'களும் மலிந்திருக்கின்றன!

தேசியப் பயிர் வளர்ந்து செழித்த மண்ணில்தான் ‘களை’களும் மலிந்திருக்கின்றன!

- Advertisement -
rss-bharatha-matha
rss-bharatha-matha

சமீபத்திய மழையில் சென்னையில் எங்குமே தண்ணீர் தண்ணீர்தான். பெருமழையில் தவிக்கிறது சென்னை. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்குப் பக்கத்து இடங்களான கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம் அம்மன் நகர், இராமாவரம் போன்ற இடங்களுக்கு நானும், எனக்கு மகளும் நடந்து சென்று பார்த்து வந்தோம்.

நெசப்பாக்கம் பகுதி அம்மன் நகரில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருந்ததில் அப்பகுதியில் இருத்த அத்தனை வீடுகளும் சேதம் அடைந்திருக்கிறது . வீடு முழுதும் சகதியும், சேறுமாக இருக்கிறது.ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து தங்களது வீட்டை சுத்தம் செய்கின்றனர். வீட்டு வாசலிலேயே குளிர்சாதனப் பெட்டியும், மேசையும், நாற்காலிகளும், நனைந்த படுக்கைகளும், பாய்களும் குப்பையாகக் குவிந்து கிடக்கிறது.

மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கொண்டு தருகின்ற உணவுகளை மழையில் நனைந்தபடியே மக்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்து மிகவும் வருந்தினேன். இதே நிலைதான் சென்னையின் மற்ற இடங்களிலும்.

(1) இந்த மக்களைச் சோற்றுக்குக் கையேந்த வைத்தது மழையா?
(2) இல்லை இலவசத்திற்கு அடிமைப்பட்டு மூன்று தலைமுறைகளாகத் தவறானவர்களை ஆட்சியில் அமர்த்திய நாமா?
(3) இல்லை ஓட்டுப் பிச்சை வாங்கி ஊழலில் திளைக்கும் அரசியல் கொள்ளைக் காரர்களா ? “கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை” என்று பழம் பெருமை பேசிய தமிழர்கள் மழைநீரை வீணாக்காமல் எத்தனை புதிய அணைகளில் தேக்கி வைத்தார்கள் ?

படிக்காதவர் என்று கேலி செய்யப்பட்ட திரு. காமராஜர் காலத்தில்தான் மணிமுத்தாறு நீர்த்தேக்கம், வைகை நீர்த்தேக்கம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. 1967க்குப் பிறகு எத்தனை நீர்த்தேக்கங்களை இந்த அரசியல் வாதிகள் கட்டி இருக்கின்றனர்? பெரிய பெரிய அரண்மனைகளாகத் தங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொள்ளத் தெரிந்த இந்த அரசியல் வியாபாரிகளுக்கு நாட்டு நலம் கொஞ்சமேனும் இருந்ததா?

தாமிரபரணி, காவேரி, வைகை போன்ற ஆறுகளில் மணற் கொள்ளை அடிக்கத் தெரிந்தவர்களுக்கு அந்த ஆற்றைத் தூய்மைப் படுத்தத் தெரியவில்லை, ஆழப் படுத்த நேரம் இல்லை. ஆறுகள் எல்லாம் ஓடைகளாகக் குறுகி விட்டன. அவற்றில் செடிகளும், பாசிகளும் மண்டிக் கிடக்கின்றன. இருக்கும் ஏரி, குளங்கள் தூர் வாராமல் ஆழம் இல்லாமல் போனது.

காணாமல் போன ஏரிகளில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இன்று மழைநீர் சூழ நிற்கிறது. மக்கள் வரிப்பணம் கட்டுகிறார்கள். அவர்கள் வாழ்கை இன்று மழைநீரில் தத்தளிக்கிறது. மக்கள் வரிப்பணத்தைச் சுருட்டும் அரசியல் கயவர்களின் சாயம் இந்த மழையிலும் கரைந்து போனது.

அவர்கள் மீண்டும் சாயம் பூசிக் கொண்டு பல பெயர்களில் வரத்தான் செய்வார்கள் . இப்பொழுது துன்பப்படும் நாமும், அப்பொழுது அவர்கள் நமக்கு லஞ்சமாகத் தரும் இலவசங்களையும், வாக்குக்கான கூலியையும் வாங்கிக் கொண்டு அந்த வீணர்களையே ஆட்சி செய்யச் சொல்லி, நாம் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் பெருங்குடி மக்களாக வாழ்வோம். நமக்கும் முதுகெலும்பு உண்டு என்று உணரும் காலம் வரை நாம் குனிந்து கொண்டேதான் இருப்போம்.

போலித் தலைவர்கள் ஊழல் பணத்தில் செய்து அணித்து கொண்ட மோதிரக் கையால் நம்மைக் குட்டிக் குதூகலிக்கத்தான் செய்வார்கள். அதுவும் தப்புத் தப்பாகத் தமிழில் பேசி.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊருக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது, சென்ற முறை பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோல்வி பெற்ற ஒரு பெண் என்னிடம் ,” அண்ணா நான் வர பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலருக்கு நிற்கப் போறேன். அப்பத்தான் கொஞ்சம் சம்பாதிக்கலாம்” என்று சொன்னாள்.

எனக்கு “திக்”கென்றது. இதுதான் இன்றைய நிலை. நாட்டிற்காகத் தன்னைத் தியாகம் செய்த “கோமதி சங்கர தீட்சிதர்” போன்ற தேசியப் பயிர் பிறந்து, வாழ்ந்து, சிறந்த நமது ஊரில் இன்று இதுபோன்ற “களை”கள் !

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். நேரம் வரும்பொழுது தர்மத்தைக் காக்க நானே வருவேன் என்றான் இறைவன்…காத்திருக்கிறேன் அவனுக்காக.

  • மீ.விசுவநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe