spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநயன்தாராக்கள் நிரம்பிய கோடம்பாக்கம் இருக்க நாயன்மார்களை ஏன் வம்புக்கு இழுப்பானேன்..?

நயன்தாராக்கள் நிரம்பிய கோடம்பாக்கம் இருக்க நாயன்மார்களை ஏன் வம்புக்கு இழுப்பானேன்..?

- Advertisement -

அண்மையில் தேவையற்ற ஒரு சர்ச்சை வேண்டுமென்றே சுயபிரபலத்துக்காக கிளப்பப்பட்டிருக்கிறது. சுயமோக பிரபலத்துக்கு நயன்தாராக்கள் நிரம்பிய கோடம்பாக்கம் இருக்க எதற்கு நாயன்மார்களை இழுக்க வேண்டுமென்று தெரியவில்லை. செக்குக்கும் சிவலிங்கத்துக்குமான வேறுபாடு எல்லா உயிரினங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. எனவே விஷயத்துகு வருவோம்.

சைவ அடியார்கள் வரலாற்றில் சமணர் கழுவேற்றம் குறித்து இங்கே சில அறிவுஜீவி பம்மாத்துக்கள் ஏதோ நாங்கள்தான் அது நடக்கவில்லை என எழுதினோம். ஆனால் சைவர்கள் இந்துக்கள் தரப்பிலிருந்தே அதற்கு எதிர்ப்பு எழுந்தன என எழுதுகின்றனர். இதன் பின்னால் உள்ள நுண்ணரசியல் : ‘இந்துக்கள் சைவர்கள் எல்லாரும் அடிப்படைவாதத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள். நாங்கள்தான் உண்மையான ‘இந்து ஞான மரபின்’ உண்மை புத்திரர்கள்’ என்பது. இந்த கழுவேற்ற சம்பவத்தை ரொமிலா தப்பார் என்கிற நேருவிய மார்க்சிய வரலாற்றாசிரியை தம் உரைகளில் 1980களில் குறிப்பிடத் தொடங்கினார். அது இடதுசாரி பிரசுரமாகவும் வெளியிடப்பட்டது. இப்பிரசுரத்தை இந்துத்துவ வரலாற்றாசிரியரான சீதாராம் கோயலுக்கான பதிலாக பேராசிரியை ரொமிலா தாப்பர் அனுப்பியிருந்தார். அதை இந்துத்துவ வரலாற்றறிஞர் சீதா ராம் கோயல் அதை தக்க ஆதாரங்களுடன் எதிர்கொண்டார். ‘இந்து கோவில்களுக்கு நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் 1991 இல் அவர் வெளியிட்ட நூல் வரிசையின் இரண்டாம் பாகத்தில் பிற்சேர்க்கையாக அது உள்ளது. மிக விரிவாகவே இப்பிரச்சனையை கோயல் அணுகியுள்ளார். இறுதியாக அவர் கூறுகிறார்: “சுவாரசியமான விஷயமென்னவென்றால் பாண்டிய நாட்டில் சமணர்கள் கழுவேற்றப்பட்ட விஷயம் சைவ இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகிறது. சமண இலக்கியங்கள் சான்று பகரவில்லை. நீலகண்ட சாஸ்திரி போன்ற தென்னிந்திய வரலாற்றறிஞர்கள் அதனை முழுக்க முழுக்க ஆதாரமற்ற சைவ தம்பட்டம் என்று மறுத்துவிட்டிருக்கிறார்கள். ” அது போலவே 1946 -47 இல் நாகர்கோவிலில் இருந்து வெளியான இந்துத்துவ பத்திரிகை ஒன்று உண்டு. ‘தொண்டன்’ எனும் அப்பத்திரிகையை நடத்தி வந்தவர் ஆறுமுக நாவலர் எனும் பழுத்த சைவ பெரியவர். 1-5-1947 தேதியிட்ட ‘தொண்டன்’ இதழில் சமணர் கழுவேற்றம் எனும் பழைய கதை ‘உண்மையோ பொய்யோ என நாம் அறியோம்’ என்று கூறப்படுகிறது. ஆக ஏதோ சைவ இந்துக்கள் அல்லது இந்துத்துவர்கள் சமணக்கழுவேற்றம் குறித்த ஐதீகத்தை பெருமையுடன் பேசிக்கொண்டிருக்க இந்த புதிய அறிவுஜீவிகள் வந்து உண்மை ஞானம் வழங்கியது போன்ற புனைவுகள் சுயமோக விடம்பனங்களே அல்லாமல் உண்மைகள் அல்ல.

இனி அடுத்ததாக அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் பொய்க்கு வருவோம். சைவ பெரியோர்களின் அருட்சரிதங்களில் கிறிஸ்தவ தாக்கம் இருந்ததாக சொல்லப்படும் கதை. இது முழுக்க முழுக்க பொய். ஏன்? கிறிஸ்தவ வரலாற்றில் கிறிஸ்தவ பக்த வெறியில் இருந்தோர் சிலர் ரோமானிய அரசின் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதும் உண்மை. அவர்கள் புனிதராக்கப்பட்டதும் உண்மை. ஆனால் பொதுயுகத்தின் மூன்றாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் அதிகாரத்தை சுவைக்க ஆரம்பித்து ரோமானிய அரசு கிறிஸ்தவர்களுக்கு இழைத்ததைக் காட்டிலும் கடும் கொடுமைகளை நிறுவனப்படுத்தி அடுத்த இரு நூற்றாண்டுகளாகவே பிறருக்குக் காட்ட ஆரம்பித்தது. கிறிஸ்தவத்தின் பரவலுடன் பொதுயுகத்தின் முன்பிருந்து ஏறக்குறைய பொதுயுகத்தின் இரண்டு-மூன்றாம் நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்த கிழக்கத்திய உறவுகள் மெல்ல மெல்ல குறையத்தொடங்கின. அதன் பின்னர் இந்தியா குறித்த நம்பிக்கைகளும் முந்தைய நூற்றாண்டுகளில் பெறப்பட்ட அறிவுமே கிறிஸ்தவத்துடன் எஞ்சியிருந்தது.

இந்தியாவில் நிலமை என்ன? பொதுவாக கைவிடப்பட்ட நிலையிலுள்ளவர், மக்களால் கொடுமைப்படுத்தப்படும் போது இறைஅருளால் மீள்வது என்பது வேத காலம் தொட்டு இங்கு நிலவி வந்த ஐதீக சரிதைகளில் உள்ளன. வேத ரிஷி கவஷரின் சரிதையில் அவர் அவமானப்படுத்தப்பட்டு துரத்தியடித்த பின்னர் அவருக்காக சரஸ்வதி நதி தோன்றிய நிகழ்ச்சி பொதுயுகத்துக்கு முன்னரே கூறப்பட்டுவிட்டது. பின்னர் அதே நிகழ்வை நூற்றாண்டுகளுக்கு பிறகு குரு ரவிதாஸ் சரிதத்திலும் காண்கிறோம். தமிழ்நாட்டில் ஸ்ரீ தர ஸ்வாமிகள் சரிதத்திலும் காண்கிறோம். நாளைக்கு ரவிதாஸ் சரிதத்துக்கும் ஸ்ரீ தர ஐயாவாள் சரிதத்துக்கும் காரணம் கூட கிறிஸ்தவ தாக்கம்தான் என ஏதாவது கோடம்பாக்க வாடகை எழுத்தாளர் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்கிறேன்.

இங்கு பௌத்த சமண மதங்கள் மேலெழும்ப ஆரம்பித்த போது எப்போது அவை அரசு ஆதரவை பெற ஆரம்பித்தனவோ அப்போதே அவற்றுக்கிடையிலான பூசல்கள் வன்முறைகளாக மாற ஆரம்பித்தன. இதற்கான மிகச்சிறந்த ஆதாரம் அசோக வதனம் எனும் அசோக சரித்திரத்தில் உள்ளது. அசோக சக்கரவர்த்தியின் புத்த அருளாட்சியை விவரிக்கும் இந்நூலில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. புத்தரை மகாவீரரின் பரிவார தேவதை போல ஒரு ஓவியன் தீட்டிவிடுகிறான். அவன் சமணன். எனவே வெகுண்டெழுந்த அசோக சக்கரவர்த்தி 18000 சமணர்களை கொன்றுவிடுகிறார். சமணர்களின் தலைக்கு விலையும் பேசுகிறார் – ஒரு சமண தலைக்கு இத்தனை பணம். இது மிகைப்படுத்தப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் இது ஒரு மனநிலையைக் காட்டுகிறது. இதை எழுதியவர்கள் இந்நிகழ்ச்சியை ஒரு வித பெருமையுடன் தான் சொல்கிறார்கள். புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பௌத்தர்களுக்கான ஆதரவை அவன் நிறுத்துவிடுகிறான். எனவே அவன் அசோகன் சமணர்கள் மேல் தொடுத்தது போல பௌத்தர்கள் மீது ஒரு வன்முறையைத் தொடுத்ததாக பௌத்த சரிதங்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே மாயாஜாலம் வந்துவிடுகிறது. அவன் பௌத்தர்களை கொன்றதாக நினைக்கிறான். ஆனால் அந்த பௌத்த உடல்களெல்லாம் மாயா தோற்றங்கள். பௌத்த துறவிகள் எவருமே சாகவில்லை. இங்குள்ள வேறுபாட்டை பாருங்கள். அசோகன் சமணர்களைக் கொன்ற நிகழ்ச்சியும் சரி புஷ்யமித்ரன் பௌத்ததுறவிகளின் மாயா தோற்றங்களைக் கொன்ற நிகழ்ச்சியும் சரி இரண்டுமே பௌத்தர்களால் எழுதப்பட்டவை. புஷ்யமித்ரன் மௌரியர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். அவன் ஆட்சியில் வைதீகம் மீண்டும் முதன்மை அடைந்தது. ஆனால் அவனது மகனான அக்னிமித்ரன் (இவன் சரிதையைத்தான் காளிதாசன் மாளவிகா-அக்னிமித்ரம் என எழுதினார்) பௌத்தம் வைதீகம் இரண்டையுமே பராமரித்தவன். பொதுயுகம் ஐந்தாம் நூற்றாண்டில் ஹூணர்களின் படையெடுப்பு ஏற்பட்டது. ஹூணர்களின் தலைவனான மிகிராகுலன் தன்னை சிவபக்தன் என சொல்லிக் கொண்டு புத்த துறவிகளை பெரிய அளவில் கொல்லத்தொடங்கினான். (அன்னிய ராகுலர்கள் தங்களை சிவபக்தர்கள் என சொல்லி ஏமாற்றுவது கூட ஒரிஜினல் கிறிஸ்தவ ரோமானிய தந்திரம் இல்லை பாருங்கள்.) ஆனால் பாரத அரசர்களின் கூட்டுப்படை மிகிராகுலனைத் தோற்கடித்தது. அதில் முதன்மை வீரர்களாக விளங்கியவர்கள் யசோதர்மனும் பாலாதித்தியன் எனும் குப்த அரசனும். தினமும் காலையில் சொல்லப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையான ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் யசோதர்மனின் இச்செயல் போற்றப்படுகிறது. (‘யசோதர்மாச ஹூணஜித்’)

ஆக பதினொன்றாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி காலத்தில் சொல்லப்படும் சமணர் கழுவேற்றத்தில் மேலே கூறிய பல கதையாடல்களின் தாக்கம் இருக்கக் கூடுமே அல்லாது ரோமாபுரியில் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவத்தின் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொன்னால் அசோகவதனத்தில் சொல்லப்படும் கொலையுண்ட சமணரின் எண்ணிக்கை பதினெட்டாயிரம் என்றால் சைவ இலக்கியத்தில் அந்த எண்ணிக்கை எண்ணாயிரம் என சொல்லப்படுகிறது (இது எண்ணாயிரம் எனும் ஊரின் பெயராகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும் சிலர் சொல்வர்). ஆக ஏதாவது தமிழகத்துக்கு அயலான தாக்கம் என சொல்ல வேண்டுமென்றால் அது வட பாரதத்தின் தாக்கம் என கருதலாமே அல்லாது கிறிஸ்தவத்தின் தாக்கம் என கருத சிறிதும் இடமில்லை. பதினேழாம் நூற்றாண்டு வரை எந்த பரமத கண்டனங்களிலும் கிறிஸ்தவம் சுட்டப்படக் கூட இல்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே காலகட்டத்தில் இந்தியா குறித்த கிறிஸ்தவ கதையாடல்கள் எப்படி இருந்தன என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் விஷயம் இன்னும் சுவாரசியமாகும். பொதுயுகத்தின் முதல் நூற்றாண்டிலும் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் பாரத ஆன்மிக தாக்கம் தாராளமாக கிரேக்க ரோம பண்பாடுகளில் இருந்தன. பௌத்த ஜாதகக் கதைகளின் அடிப்படையில் சில முக்கிய கிறிஸ்தவ புனிதர்களின் வரலாறுகள் சமைக்கப்பட்டன. இவை இன்று எல்லா கிறிஸ்தவ இறையியல் வரலாற்றாசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10-12 ஆம் நூற்றாண்டுகள் வரை கிறிஸ்தவ ஐரோப்பியத்தில் ஒரு நம்பிக்கை நிலவியது. அதாவது ஜான் பிரெஸ்டர் எனும் கிறிஸ்தவ பேரரசன் இந்தியாவை ஆள்கிறான் என்பதே அது. 12 ஆம் நூற்றாண்டில் இந்த மன்னனின் கடிதம் ஐரோப்பாவை வந்தடைந்தது. அன்றைய சங்கைக்குரிய பாப்பு (Pope) இந்த மன்னனின் உதவியை சிலுவைப் போருக்கு யாசிக்கலாமா என்றுகூட யோசித்தார் (இதன் அடிப்படையில்தான் துஷ்யந்தனின் உதவியை தேவர்கள் யுத்தத்தில் நாடினர் என்று ஏதவாது கோடம்பாக்கம் எழுத்து வியாபாரி சொல்லி அது ஒரு தனி வியாசம் ஓடுமோ என ஒரு அச்சம் இல்லாமலில்லை) பிறகு இது ஒரு போலி கடிதம் ஒரு குறிப்பிட்ட ஆர்ச்பிஷப்பால் எழுதப்பட்டது என்று அறியப்பட்டது. ஜான் என்பதை அன என்றும் பிரெஸ்டர் என்பதை பாயசோழன் என்றும் இந்துத்துவர்கள் மாற்றிவிட்டனர் என யாராவது சொன்னால் என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. தோல்வியை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

aravindan neelakandan
அரவிந்தன் நீலகண்டன்

ஆக இப்படி உண்மைகள் இருக்க இன்னும் யாராவது கிறிஸ்தவ தாக்கம் என்று சொல்லிக் கொண்டு வியாபாரம் செய்தால்… அட விடுங்கப்பா குக்கர் கூவுற தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தாக்க கோடம்பாக்க கூவலும் விலை போவதில் அதிசயமென்ன!

கட்டுரை: அரவிந்தன் நீலகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe