Home அடடே... அப்படியா? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா?

மோடி ஊசி

இந்தியாவில் தற்போது வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா? என்று குறிப்பிட்டு, சிவகங்கையைச் சேர்ந்த பொநலமருத்துவர், Dr. A.B.ஃபரூக் அப்துல்லா எழுதிய சமூக வலைத்தளப் பதிவு

இந்தியாவில் 16.4.2021 அன்று காலை 8 மணி வரை 11 கோடியே 72லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 90% கோவிஷீல்டு 10% கோவேக்சின் தடுப்பூசி என்று கொள்ளலாம்!

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதியில் ஆரம்பித்து 90 நாட்களாக இந்த தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியானது கொரோனா வைரஸை முழுவதுமாக செயலிழக்கச்செய்து/ மரணிக்கச்செய்து அதை உடலில் செலுத்துவதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு தருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி சிம்பன்சி குரங்கு இனத்தில் பரவி அதற்கு சாதாரண சளி இருமலை உருவாக்கும் அடினோ வைரஸில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களின் மரபணுக்கூறுகளை ஒட்டி அதை உடலில் செலுத்துவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது.

இதில் தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை உடனுக்குடன் இந்திய மருந்துகள் சார்ந்த பக்கவிளைவுகள் ஆய்வுத் திட்டம் (PHARMACO VIGILANCE PROGRAMME OF INDIA) மூலம் சுமார் 110 பக்கவிளைவு கண்டறியும் மையங்களை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நிறுவி கண்காணித்து வருகின்றது.

அதன்படி மார்ச் 31,2021 வரைதடுப்பூசி பெற்று 28 நாட்களுக்குள் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180 என்று இக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மரணங்கள் தடுப்பூசியால் நடந்தவையா? என்பது குறித்த காரணத்தைக் கண்டறியும் ஆய்வுப்பணிகள் (CAUSALITY ANALYSIS) நடந்து வருகின்றன.

இருப்பினும் அந்த 180 மரணங்கள் தடுப்பூசி தொடர்பான மரணங்கள் என்று கருத்தில் கொண்டால் மார்ச் 31,2021வரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 6,30,54,353
அதாவது தடுப்பூசி பெற்றவர்களில் தடுப்பூசி தொடர்பான மரணங்களின் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா ?

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் 0.3 என்ற அளவில் தடுப்பூசி தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 0.3 VACCINE RELATED DEATHS AMONG 1 LAKH VACCINATED POPULATION
இந்த அளவு என்பது ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு என்று கூட இல்லை. ஆனால் நாடுமுழுவதும் தற்போது இரண்டாம் அலை எடுத்துப்பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் மரண விகிதம் என்ன தெரியுமா? CASE FATALITY RATE OF COVID19 1280 COVID DEATHS/ 1 LAKH CASES அதாவது ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுள் 1280 பேர் இறப்பார்கள் என்று அர்த்தம்.

அதாவது தடுப்பூசி தொடர்பான இந்த அரிதினும் அரிதான மரணங்களுக்கு அஞ்சி நாம் தடுப்பூசி பெறாமல் விட்டால்
கொரோனா பெருந்தொற்று அடைந்து அதன் மூலம் மரமணடையும் வாய்ப்பு 4200 மடங்கு அதிகம்.

இன்னும் கொரோனா தடுப்பூசி போடாத காலத்திலும் ( 2016 கணக்குப்படி) 45 முதல் 79 வயதுக்குள் இருக்கும் மக்கள்
பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறக்கும் சராசரி விகிசம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 2631 பேர் இறக்கிறார்கள்.

வருடா வருடம் எந்த தடுப்பூசியும் போடாத நேரத்திலும் அந்த வயதினிரிடையே தடுப்பூசி தொடர்பான மரணங்களை விடவும் 7670 மடங்கு அதிக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே தடுப்பூசியினால் அதிக மரணம் ஏற்படுகின்றது என்ற வாதமும் பொய்யாகின்றது.

இன்னும் ரத்த உறைதல் தன்மையைப் பற்றி கூறுகிறேன் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2.5 கோடி டோஸ்கள் போடப்பட்ட பின் 86 ரத்த உறைதல் தன்மையை தடுப்பூசி போடப் பட்டவர்களுள் கண்டறிந்தனர். இது லட்சம் பேரில் 0.3 பேருக்கு ஏற்பட்டது என்றே கணிதம் கூறுகிறது.

லட்சம் பேருக்கு போட்டு ஒருவருக்கு கூட ஏற்பட வாய்ப்பில்லாத அந்த பக்கவிளைவை மிக அரிதான பக்கவிளைவு ( very rare) என்று ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சி கூறி இந்த தடுப்பூசியால் விளையும் இந்த மிக அரிய பக்கவிளைவுகளை விட தடுப்பூசியால் காக்கப்படும் உயிர்கள் அதிகம் என்பதால் தொடர்ந்து இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டியது.

ரத்த உறைதல் தன்மையைப் பொறுத்தவரை ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் ஒரு லட்சம் பேரில் 0.4 பேருக்கு மட்டுமே ரத்த உறைதல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது
இதை அப்படியே ஸ்மோக்கிங் பழக்கத்துடன் தொடர்பு படுத்தினால் புகைப் பழக்கத்தினருக்கு ஒரு லட்சம் பேரில் 180 பேருக்கு ரத்த உறைதல் ஏற்படும்.

கொரோனா பெருந்தொற்று பரவி மனிதர்களை ஆட்கொள்ளும் போது அந்த வைரஸ் மூலம் மட்டுமே லட்சம் பேரில் 16,500 பேருக்கு ரத்த உறைதல் தன்மை இருக்கிறது. இப்படியாக ஒரு தடுப்பூசியின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து
இறுதியில் சிறந்த முடிவை எடுப்பதற்குப் பெயர் Risk Vs Benefit analysis செய்து ஒரு முடிவுக்கு வருவது சிறந்தது

யாரோ சிலர் தடுப்பூசிக்கு பக்கவிளைவு இருக்கிறது என்று கூறினால் அவர்களிடம் கூறுங்கள்… ஒரு லட்சம் பேருக்கு போட்டாலும் ஒரு ஆளுக்கு கூட நடக்காத விசயத்தை ஊதிப் பெரிதாக்கி பல லட்சம் உயிர்களைக் காக்க கண்டறிந்த தடுப்பூசிகளை தவிர்ப்பது சரியா? என்று கேளுங்கள்.

இன்று காலை இதய ரத்த நாள அடைப்பு நோய் ஏற்பட்டு இதயம் முடங்கிய நிலையில் தற்போது செயற்கை சுவாசக்கருவி துணையுடன் சிகிச்சை எடுத்து வருகிறார். உடனே இந்த நிகழ்வை நேற்று தடுப்பூசி போடப்பட்டதுடன் தொடர்பு படுத்தி பார்க்கிறார்கள் . ஆனால் அவர்கள் பார்க்க மறந்தது ஒன்று இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும் 47.7 லட்சம் பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 12876 மரணங்களை இந்தியா மாரடைப்பினால் சந்தித்து வருகின்றது.
தடுப்பூசி ஒரு நாளைக்கு முப்பது முதல் முப்பத்தைந்து லட்சம் பேருக்கு போடப்படுகின்றது. எவ்வித பாதிப்பும் இன்றி வரிசையில் நின்று வந்து தடுப்பூசி பெற்றுச் செல்கின்றனர்.

திரு.விவேக் அவர்கள் 59 வயதுடையவர். நீரிழிவு ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இருந்தவர். அவருக்கு தற்செயலாக இன்று காலை மிகத்தீவிர அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

இரண்டாம் அலையின் உக்கிரத்தில் குஜராத் மஹாராஷ்ட்ரா பஞ்சாப் சட்டிஸ்கர் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்து வருவதைப் பார்க்கையில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் நன்றாகப் புரிகின்றது

தயவு செய்து அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் ; முகக்கவசம் அணியுங்கள்; தனிமனித இடைவெளி கடைபிடியுங்கள்; கைகளை சோப் போட்டுக் கழுவுங்கள்! தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!

தடுப்பூசிகள் குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version