October 17, 2021, 9:22 pm
More

  ARTICLE - SECTIONS

  வ.உ.சிதம்பரம் பிள்ளை 150-ஆவது ஆண்டு: தமிழக அரசு சார்பில் ஓராண்டு கொண்டாட வேண்டும்!

  வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் வரும் செப்டம்பர் 5-ஆம்

  vochidambaram1
  vochidambaram1

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு வரும் செப்டம்பர்  5&ஆம் தேதி தொடங்குகிறது. தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவருக்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும்.

  இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பட்டப்படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார். மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்த அவர், ஏழைகளுக்காக இலவசமாக வாதிட்டவர். தேசியகவி பாரதியாருடன் இளம் வயதில் ஏற்பட்ட நட்பு காரணமாக விடுதலை இயக்கத்தில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பிள்ளை, தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் ஆவார்.

  ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார். நமக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை.

  voc
  voc

  கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுபவித்துள்ளார். சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் மாடுகளை விட மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார்.

  வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இந்த நாடும், மக்களும் செலுத்த வேண்டிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் செலுத்துவதற்கு ஏற்ற தருணம் இப்போது கிடைத்திருக்கிறது. வ.உ.சி அவர்களின்  பிறந்த நாள் 150-ஆவது ஆண்டு விழா வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அந்த நாளில் தொடங்கி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி வரை ஓராண்டுக்கு வ.உ.சி &150 விழாவை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட வேண்டும். அந்த ஓராண்டு காலத்தில் வ.உ.சி.யின் தியாக வரலாற்றையும், போராட்டக் குணத்தையும், அவர் அனுபவித்தக் கொடுமைகளையும் இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும்.

  நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவச்சிலையை திறக்க வேண்டும்;  சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்; சென்னையில் வ.உ.சி வாழ்ந்த இல்லங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றுக்கு வெளியில் நினைவுப் பலகைகளை அமைக்க வேண்டும்; சென்னையில் வ.உ.சி 150&ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் நினைவு அலங்கார வளைவு ஒன்றையும் அமைக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.

  ramadoss
  ramadoss

  வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அவரது 150-ஆவது பிறந்த நாளில் அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

  • டாக்டர் ராமதாஸ், நிறுவுனர், பாமக.,

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-