October 19, 2021, 9:02 am
More

  ARTICLE - SECTIONS

  கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா?

  விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்! கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா?

  krishnasamy dr
  krishnasamy dr

  விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்! கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா?

  திமுக அமைச்சர் பொன்முடி அவர்களின் நிகழ்ச்சிக்குக் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள் கட்டும் போது உயர் மின் அழுத்தக் கம்பியில் பட்டு விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டுவை சேர்ந்த 13 வயதான தினேஷ் என்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் மரணமெய்தி மூன்று தினங்கள் ஆகிவிட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று போற்றப்படும் செய்தி ஊடகங்களும், காணொளி ஊடகங்களும் இச்சம்பவத்தை வெளிக்கொணராதது மட்டுமல்ல. அந்த செய்தியை அதிகம் வெளியே பரவவிடாமல் தடுக்கும் ‘மூடக’ பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்கச் செய்தி.

  இதே வேறு ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியாக இருந்திருந்தால் தலைமுறைகளும், 18-களும், 7-களும் நீலிக் கண்ணீரை விடிய விடிய வடித்து ஆறாக ஓட விட்டிருப்பார்கள்; வக்கனப் பரீட்சை, கோணல் படப் பேசு நிகழ்ச்சிகளிலும் பல நாட்களுக்கு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாற்றி இருப்பார்கள். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக போட்ட பேக்கேஜ் ஒப்பந்தங்கள் அடுத்த தேர்தல் வரை உள்ளதால் அவர்களால் எப்படி விவாதம் செய்ய முடியும் அல்லது செய்திகளைத் தான் வெளியிட முடியும்?

  எந்த அளவிற்கு தனது பெற்றோர் வறுமை நிலையில் இருந்திருந்தால் மாணவன் வேலைக்குப் போகும் சூழல் ஏற்பட்டிருக்கும். அந்த மாணவனை இழந்த பெற்றோர் உள்ளம் எப்படித் துடித்திருக்கும்? என நினைத்தாலே நமது கண்கள் குளமாகின்றன. ஆனால், அந்த துயரச் சம்பவத்திற்கு தார்மீக ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ ஒன்றரை லட்சம் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்தது என்று கோழி, குஞ்சுகளுக்கு விலை பேசுவதைப் போல பேசுகிறார். மிகக் கோரமான இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் அவருடைய பெற்றோரை வைத்தே மாணவர் தானாகச் சென்று மின்கம்பியில் விழுந்து விட்டதைப் போல FIR பதிவு செய்து உண்மையை மூடி மறைக்க எத்தணிக்கிறார்கள்.

  முதலமைச்சரோ இதற்கு ஒரு கண்டன அறிக்கை அல்லது சட்டரீதியாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் ’வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்பதைப் போல ஒரு சடங்கிற்காக “பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.” என்று ’பூனை தனது குட்டியைக் கவ்வுவதை’ போலப் பட்டும் படாமலும் அறிக்கையோடு அந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார்.

  கடந்த ஆண்டு கோவையில் அதிமுக நிகழ்ச்சியில் இதேபோல பேனரில் மோதி சுபஸ்ரீ என்ற பொறியியல் பட்டதாரி பெண்மணி உயிரிழந்தார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார்; அச்சம்பவத்தை எல்லா ஊடகங்களும் அல்ல-அல்ல, ஊதகங்களும் விவாதம் செய்து எவ்வளவு ஊத முடியுமோ அந்த அளவிற்கு ஊதி பெரிதாக்கினார்கள். ஆனால், இன்று ஒரு பள்ளி மாணவன் அகால மரணம் எய்தி இருக்கிறார் என்ற அக்கறை இல்லாமல் அதை முழுக்க மூடி மறைக்கிறார்கள்.

  கமல்ஹாசன் திரைப்பட படப்பிடிப்பில் கிரேன் விழுந்து பணியாட்கள் உயிரிழந்து விட்டால் அதற்கு கமலை விசாரணைக்கு அழைக்கிறார்கள் ; கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன் உரிமையாளரை விசாரணைக்கு அழைக்கிறார்கள். ஆனால், இந்த கட்-அவுட்கள் அமைச்சர் நிகழ்சிக்குத் தானே வைக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் அல்லவா?

  ஊடக பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் சிறிய சம்பவங்களை ஊதி பெரிதாக்குவதும், பெரிய சம்பவங்களைச் சிறிதாக்குவதும் எல்லா காலத்திற்கும் உதவாது. 13 வயது சிறுவனின் மரணம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமல்லவா?

  தமிழகத்தில் பேனர் வைக்கக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. மறைந்த டிராபிக் ராமசாமி அவர்கள் தனது வாழ்நாளில் இந்த கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க எவ்வளவோ போராடினார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கட்-அவுட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதன் மூலமாகத் தமிழக மக்கள் மீது அரசியல், சமூக ரீதியாக ஆதிக்கம் செலுத்த திமுக, அதிமுக கட்சிகள் முயற்சி செய்வது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, வரம்பு மீறிய செயலும் கூட.

  ஸ்டாலின் இன்று வேண்டுகோள் வைக்கும் இடத்தில் இல்லை, முதல்வர் நாற்காலியில் இருக்கிறார். இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிகளின் பெரிய அல்லது சிறிய அளவிலான நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது. அப்படி பேனர்கள் வைக்கப்படும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடுவாரா?

  இந்தியாவில் இது போன்று எந்தவொரு மாநிலத்திலும் கட்-அவுட் கலாச்சாரம் இல்லை. ஆனால் இரு கட்சிகள் மட்டும் ஏன் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்கிறீர்கள்? அரசின் கோடிக்கணக்கான ரூபாயில் கட்டப்படும் பாலங்களிலும், பொது கட்டிடங்களிலும் ஆண்டுக்கணக்கில் கட்சி விளம்பரங்களை எழுதி வைத்துக் கொள்கிறீர்கள்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் எழுதினீர்கள். ஆட்சிக்கு வந்த பின்பும் எழுதுகிறீர்கள். உங்கள் விளம்பர மோகம் எப்போதுதான் முடிவுக்கு வரும்?

  தினேஷ் என்ற மாணவனின் இறப்பு என்பது அவருடைய குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பு. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இனியாவது தமிழ்நாட்டில் இந்த கட்-அவுட், பேனர் கலாச்சாரங்களை முற்றாக ஒழித்துக் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பாரா? அல்லது பூசி மெழுகுவாரா?

  • டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
   நிறுவனர்& தலைவர், புதிய தமிழகம் கட்சி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-