October 17, 2021, 12:29 am
More

  ARTICLE - SECTIONS

  பிள்ளையாரும் திலகரும்: திருப்பூர் கிருஷ்ணன்!

  அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார்…அப்படித் தொடங்கியதுதான்

  tilak-vinayakar
  tilak-vinayakar

  ~ திருப்பூர் கிருஷ்ணன் ~
  ஆசிரியர், அமுதசுரபி

  பால கங்காதர திலகர் தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கி நடத்த விரும்பினார். அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.


  சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற பால கங்காதர திலகர் விடுதலையாகி வெளியே வந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவரது தனிப்பட்ட வாழ்வில் பெரும்சோகம் ஒன்று நிகழ்ந்தது.

  அவர் சிறைப்பட்டதை அறிந்த அவர் மனைவி சத்தியபாமா, இனி எப்படி வாழ்க்கை நடத்துவது என்ற அதிர்ச்சியில் அன்றே காலமானாள்.

  சிறையில் விவரமறிந்த திலகர் தன் மூன்று பெண் குழந்தைகளைப் பராமரிக்குமாறு சிறையிலிருந்தவாறே தம் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார். மிக உருக்கமான கடிதம் அது. தந்தை சிறையிலிருக்க, தாய் கால மாகி விட, அநாதரவான பெண் குழந்தைகளைத் திலகரின் உற்ற நண்பர்களும் உறவினர்களுமாக வளர்த்தார்கள்.

  இதெல்லாம் திலகர் சிறையில் இருந்தபோது நிகழ்ந்தவை. சிறையிலிருந்து விடுதலையான திலகரின் மனம் தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்தது. அவருக்குத் தம் சொந்தக் குடும்பப் பற்றை விடவும் தேசப்பற்று அளவுகடந்து மிகுந்திருந்தது.

  இந்தியர்கள் அனைவரையுமே தம் குடும்பத்தினராகத் தான் கருதினார் அவர். சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கை அவர் மனத்தில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.

  பகவத் கீதைக்கு உரையெழுதியவர் திலகர். அவருக்கு மதப்பற்றும் ஆன்மிகப் பற்றும் மிகுதி. ஒருமுறை ரயில் பயணத்தில் தற்செயலாக விவேகானந்தரைச் சந்தித்தார். விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

  அவரைத் தம் அறையில் தங்குமாறு வேண்டினார். பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் அவர் அறையில் விவேகானந்தர் தங்கியிருந்தார். அந்த அறையை மிகப் புனிதமானது என்று கருதியது திலகரின் ஆன்மிக மனம்.

  இந்தியர்களை ஒருங்கிணைத்தால்தான் சுதந்திரம் பெற முடியும். விவேகானந்தர் வழிதான் சரியானது. இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பது தான் சாத்தியமானது.

  மொழிகளாலும் பிரதேசங்களாலும் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் இந்து மதத்தின் ஆன்மிகம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்து மதம் என்பதும் இந்திய ஆன்மிகம் என்பதும் மொழிப் பிரிவு, எல்லைப் பிரிவு இவைகளைக் கடந்து பரவியிருக்கிறது.

  வடக்கே காசிக்குச் செல்பவர்கள் தெற்கே ராமேஸ்வரத்திற்கும் வருகிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. ஆன்மிகம் இந்தியர்களின் ஆழ்மனத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நாத்திகச் சிந்தனைகள் மிக மிகக் குறைவு. நாத்திகமே இல்லை என்று சொல்லுமளவு குறைவு.

  எனவே விவேகானந்தர் வழியில் ஆன்மிகத்தின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பதே சரி, அதுவே எளிதில் சாத்தியமாகக் கூடியது எனத் திலகர் கருதினார். அப்படியானால் இந்தியர்களை மிக எளிதில் ஒன்றிணைக்கக் கூடிய ஆன்மிகக் கொள்கை எது எனவும் அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

  vinayakar bharatham
  vinayakar bharatham

  அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரததேசம் முழுவதும் இருக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கும். மற்ற தத்துவப் பிரிவினர் மனத்தால் இணைவதில் சங்கடம் எழும்.

  ஆனால் மக்கள் போற்றித் துதிக்கும் ஏதேனும் ஒரு தெய்வ வடிவத்தின் மூலம் ஒற்றுமையை உண்டுபண்ணி விடலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்துமதம் எல்லா வகை வழிபாட்டுக்கும் இடம்தரும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம். சிவனை வணங்குபவர்கள், திருமாலை வணங்குபவர்கள் என தெய்வ வடிவங்களில் தங்களுக்கு உகப்பானதை ஏற்றுத் தொன்று தொட்டு அந்த மரபில் வழிபடுபவர்கள் ஏராளமானோர்.

  அவர்களை ஒரே தெய்வ வடிவத்தைப் போற்றுவதன் மூலம் இணைப்பது எப்படி? அந்த வகையில் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் போற்றும் வகையிலும் ஏற்கும் வகையிலும் ஒரு தெய்வ வடிவம் வேண்டுமே?

  அப்படிப்பட்ட தெய்வ வடிவம் எது என்று தனக்கு இனம்காட்டுமாறு தெய்வ சக்தியையே பிரார்த்தனை செய்தார் திலகர். அவர் மனத்தில் ஒளிவீசும் விநாயகர் உருவம் தோன்றியது. தன் பிரச்னைக்குத் தெய்வம் தீர்வளித்துவிட்டது என்ற நிறைவில் அவர் விழிகளில் பக்திக் கண்ணீர் வழிந்தது.

  ஆம். விநாயகர்தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள். வைணவர்களும் கூடத் தும்பிக்கை ஆழ்வார் என விநாயகரைக் கொண்டாடுகிறார்கள்.

  இந்து மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள்.

  சத்ரபதி சிவாஜி காலத்தில் விநாயக சதுர்த்தி விழா ஓரளவு பிரபலமாகியிருந்தது. நாம் விநாயக சதுர்த்தி விழாவை தேசிய விழா போல மறுபடி உருவாக்குவோம். மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்போம்.

  uvesa-tilak-bharathi
  uvesa-tilak-bharathi

  தேசம் தழைக்கவும் ஆங்கிலேய ஆட்சி நீங்கி நல்லாட்சி மலரவும் இது ஒன்றே வழி. இந்திய மக்களை ஒருங்கிணைத்து விட்டால் சுலபமாக சுதந்திரம் பெற்றுவிட முடியும்.

  சரியாகச் சிந்தித்த திலகர் மனம் சரியாகவே முடிவெடுத்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை தேசமெங்கும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் அவர்.

  இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

  தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கி நடத்த விரும்பினார்.

  அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.

  அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார்…அப்படித் தொடங்கியதுதான் இன்றைய விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள்…..

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-