December 3, 2021, 5:37 am
More

  ஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்!

  ஒரு தனி மனிதரோ, குடும்பமோ, தேசமோ தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் அனைவரும் கல்வியில் புலமை பெற்றால் மட்டுமே அது

  dr krishnaswamy
  dr krishnaswamy
  • ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்கும், சம்பரதாயமும் அல்ல!
  • இந்திய தேசத்தின் கல்வி – தொழில் வளர்ச்சிகளின் அடையாளங்கள் அவை !
  • வறட்டுத்தன பகுத்தறிவு பார்வையில் பார்க்கக் கூடாது!
  • அறிவுக் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்!!

  சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடக்கூடிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவைகளின் பெயருக்கு ஏற்ப ஆயுதங்களுக்கும், கல்விக்கும் வணக்கம் செலுத்துவதே இவ்விழாவின் சிறப்பு ஆகும்.

  இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமான விழாக்களில் ஒன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகும். வடக்கு மாநிலங்களில் ’நவராத்திரி’ எனவும், கர்நாடகத்தில் ’தசரா’ எனவும், தமிழகத்தில் ’ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை’ எனவும் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், வீடுகளிலும் அனைத்து இந்து மக்களாலும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  இந்தியத் தேசத்தில் வேளாண்மை இதயமாகப் போற்றப்பட்டாலும் கூட கல்வியும், தொழிலும் இரு கண்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதன் பிரதிபலிப்பே இவ்விழாவாகும். ’செய்யும் தொழிலே தெய்வம்’ ’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ – இவ்விரண்டும் கல்வியையும், தொழிலையும் பெருமைப்படுத்தும் தமிழ் மண்ணின் மிகப்பழமையான பொன்மொழிகள் ஆகும். போர் புரியும் வீரர்கள் தங்கள் படைக்கலங்களையும்; கைவினைஞர்கள் தாங்கள் ஈடுபடும் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் கருவிகளையும்; கல்விமான்கள் கல்வி நிறுவனங்கள், புத்தகங்களைப் போற்றுவதற்கும், அவற்றிற்குப் பெருமை சேர்ப்பதற்கும், அவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை அனுசரிப்பதே இந்த மகத்தான விழாவின் அடிப்படை நோக்கமாகும்.

  கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும், செல்வத்திற்கு இலட்சுமியையும், அனைத்து சக்திகளுக்கும் தாயாக விளங்கும் பார்வதியையும் போற்றுவது சடங்காகவும், சம்பரதாயமாகவும், பண்டிகை விழாக்களாகவும் இருந்தாலும் கல்வி, தொழில், அதன் பின்புலமாக உள்ள சக்தி ஆகியவற்றின் அருமை, பெருமைகளை வெளிப்படுத்துவதே இவ்விழாவின் தலையாய நோக்கம் ஆகும். இன்றும், நாளையும் உலகெங்கும் இந்த மகத்தான விழாவைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஒரு விழாவைக் கொண்டாடுகின்ற போது, எந்த நோக்கத்திற்காக நமது முன்னோர்களால் அது துவக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றக்கூடிய வகையில் நாம் அதைப் போற்ற வேண்டும். ஆனால் சிலர் அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் குதர்க்கமான விளக்கங்களை அளித்து மூடநம்பிக்கை, பகுத்தறிவு, காலத்திற்கு ஒவ்வாதது என முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள்.

  2000 வருடங்களுக்கு முன்பு ஒரு விழா தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றால் அன்றிருந்த சமூக வளர்ச்சியை உள்ளடக்கியதாகவே அது பிரதிபலித்து இருக்கும். திருக்குறளைப் பனை ஓலையில் எழுதினார்கள் என்று சொன்னால் அதை அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய தொடுதிரை உள்ளிட்ட கணினி உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

  நம்முடைய முன்னோர்கள் வேளாண்மையை முதுகெலும்பாகக் கருதி அதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல அந்த வேளாண்மையைச் செம்மையாகச் செய்திடக் கலப்பை தேவை, கலப்பைக்கு இரும்பிலான கொளு தேவை. விளைபொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வண்டி, வாகனங்கள் தேவை. உணவை சமைக்கப் பாத்திரங்கள் தேவை. நாகரிகங்கள் வளர, வளர உடைகள் தேவை. மழையிலும், வெயிலிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல குடியிருப்புகள் தேவை.

  ஓய்வு நேரங்களில் கூட்டாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கப் பாட்டுத் தேவை, பாட்டுக்கருவிகள் தேவை. இவற்றை எல்லாம் உருவாக்கித் தர வேண்டியதன் அவசியத்தில் தொழில்களும், தொழிற்கூடங்களும் உருவாகின. உற்பத்தியான பொருட்களைப் பண்டமாற்று செய்யவும், விற்பனை செய்யவும் எண் கல்வியான கணித முறை தேவைப்பட்டது. அதைத்தொடர்ந்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள எழுத்து, கல்வி தேவைப்பட்டது. இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டு காலம் இந்தியாவில் தொழிலும், கல்வியும் வளர்ந்தன.

  தொழிலையும், கல்வியையும் மேன்மேலும் வளர்த்தெடுக்கவே தொழிலுக்காக ஆயுத பூஜையாகவும், கல்விக்காகச் சரஸ்வதி பூஜையாகவும் பரிணமித்தன. ஆனால் தொழிலை கற்றுக் கொள்வதே – “அபத்தம்” என்று பேசி பல நூறாண்டுக் கால கலை நுணுக்கங்களை அழித்தவர்களுக்கு அதன் மேன்மை புரியாது.

  கல்வியும், தொழிலும் தோன்றிய வேகத்திற்கு வளர்ச்சியில் வேகம் காட்டவில்லை. அப்படிக் காட்டப்பட்டிருந்தால் தொழிலிலும், கல்வியிலும் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக இருந்திருக்கும். எல்லா நுட்பமும், அறிவும் தோன்றிய இடம் இந்தியத் தேசம் தான். ஆனால் அவை முறையாக வளர்த்தெடுக்கப்படாததால் நாம் இன்னும் பின்தங்கி நிற்கிறோம்.

  ஆயுத பூஜையையும், சரஸ்வதி பூஜையையும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படக்கூடிய சடங்காகவே நீடித்து விடக்கூடாது. இந்திய தேசம் தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தன்னிறைவு பெறவும், உலகிற்கே தலைமை தாங்கவும் வலுவான அடித்தளத்தை அமைத்திடுவதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

  இந்நன்னாளில் ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், இளைஞரும், ஆண்களும், பெண்களும் தங்களைச் சொந்தக் காலில் நிலை நிறுத்திக்கொள்ள உதவிடும் வகையில் கல்வி வேறு, தொழில் வேறு என்று பிரித்துப் பார்க்காமல் ’கல்வி’ என்பதே, அடிப்படையில் ஒவ்வொருவரின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்பதை அனைவரும் உணர்ந்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையைக் கொண்டாடினால் மட்டுமே அதன் நோக்கம் நிறைவேறியதாகக் கருதப்படும். அடிப்படையில் நல்ல கல்விதான் நல்ல தொழிலை அமைத்துக் கொடுக்கும், நல்ல தொழிலால் மட்டுமே நல்ல செல்வத்தைக் கொடுக்க முடியும், அச்செல்வம் தான் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும்–மகிழ்ச்சிக்கும் அடிகோலும்.

  நாளை விஜயதசமி ஒவ்வொரு பெற்றோரும், தங்களுடைய மிக இளம் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக நல்ல குருக்களை வைத்து மொழியின் முதலெழுத்தான ’அ’ வை குழந்தைகளின் நாக்கிலே எழுத்தாணியால் எழுதித் துவங்கி வைப்பார்கள். இது எவ்வளவோ பழமையானதாகவும் இருக்கலாம்; ஆனால் மனிதனை மிருகத்திலிருந்து பிரித்தெடுப்பது பேச்சு ஒன்றுதான்.

  எனவே அந்த பேச்சு சிறப்பானதாக அமைய வேண்டுமெனில் நாக்கு நல்ல முறையில் சுழன்றால் மட்டுமே அது சாத்தியமாகும். அதுமட்டுமல்ல ஒரு மனிதன் அறிவியல் ரீதியாக உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என்றாலும் தங்களுடைய பேச்சு புலமை பெரிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். எனவே இவற்றிற்கெல்லாம் அடிப்படை கல்வியும், கல்வியின் மூன்று முக்கிய வழிகளான படித்தல், எழுதுதல், பேசுதல் (Reading, Writing, Speaking) ஆகியவற்றில் ஒவ்வொருவரும் திறம்பட வேண்டும் என்பதே அதன் அடிப்படை அம்சமாகும்.

  எனவே ஒரு தனி மனிதரோ, குடும்பமோ, தேசமோ தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் அனைவரும் கல்வியில் புலமை பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை எடுத்துரைக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களை அறிவுப் பூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் அணுகி அனைவரும் கொண்டாடுவோம்.

  • டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,
   நிறுவனர்-தலைவர், புதிய தமிழகம் கட்சி.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,776FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-