spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மறைவு; தன்மானத் தமிழர்களின் இதய அஞ்சலி!

தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மறைவு; தன்மானத் தமிழர்களின் இதய அஞ்சலி!

- Advertisement -

தொல்லியல் அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர், தமிழர் வாழ்வியல் களஞ்சியம் இரா. நாகசாமி, 2022 ஜன.23 ஞாயிறு அன்று காலமானார். 91 வயதான அவர், தமிழர் வாழ்வியலை உலகுக்கு உள்ளது உள்ளபடி அறிமுகப் படுத்த பல நூல்களை எழுதியவர். தன் வாழ்வையே தமிழினத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவுக்கு பிரபலங்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

சமூகத் தளங்களில் பதிவான கருத்துகள் சிலவற்றின் கோவை இங்கே..!


வரலாற்று ஆய்வுகளிலும் தமிழர் சரித்திர முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலும் பேரார்வம் கொண்ட எனக்கு, இரா.நாகசாமி அவர்களின் புத்தகங்கள் பெரிதும் துணை புரிந்தன. இதழியல் துறைக்கு வந்த தொடக்க காலத்தில் அவரது அறிமுகமும் வழிகாட்டலும் சரித்திரக் கதைகள் சில எழுதுவதற்கும் உதவின.

ஆறு வருடம் முன் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி,
மீனம்பாக்கம் – ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்தபோது, பொதுவெளியில் அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். ஆலய வழிபடுவோர் சங்கம் – Temple Worshipers society – அரங்கில் நண்பர் ஹரன் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் கேமராவில் கிளிக் செய்தார்.

பெரும்பாலும் பிறருடன் புகைப்படங்கள் எடுப்பதையோ அதை இதழ்களில் பதிப்பிப்பதையோ நான் விரும்பியதில்லை. ஆனால், அறிஞர்கள் சிலரின் அணுக்கம் மனத்துக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அத்தகைய மன நிலையில் இந்தப் படத்தை பாதுகாப்பாக வைத்தேன்.

வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் ஆலயங்களின் சரித்திரப் பின்னணி குறித்த அம்சங்களிலும் பெரு விருப்புடைய எனக்கு அவரின் புத்தகங்கள், கட்டுரைகள் உந்து சக்தியாகவும் ஆர்வத்தைத் தூண்டும் ஊக்கியாகவும் இருந்திருக்கின்றன! அவ்வாறு நான் படித்த இவரது புத்தகத்தில், திருவெள்ளறைக் கோயில் மெய்கீர்த்தி ஒன்று பற்றி கிடைத்த சிறு தகவலே… ஒரு சுவையான கதையாக என்னை எழுதத் தூண்டியது~! அது 2017 கல்கி பவழ விழா மலரில் இடம்பெற்றது. நமக்கு அறிவு கொடுத்த பேரறிஞர் நாகசாமியின் மறைவு இளைய சமுதாயத்துக்கு ஓரிழப்பே!

  • செங்கோட்டை ஸ்ரீராம் ( ஆசிரியர், தினசரி இணையம்)

கல்வெட்டு, கலை, இலக்கியம், வரலாறு துறைகளில் அரிய நூல்களைப் படைத்தவர்.
முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், தமிழக அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநருமான ஆர்.நாகசாமி அவர்கள் மறைவு பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ஓம் சாந்தி!

  • கே.அண்ணாமலை (பாஜக., தமிழ் மாநிலத் தலைவர்)

வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர் பத்மபூஷன் டாக்டர் ரா.நாகசாமி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தொல்லியல் துறையில் அவரின் பங்கு அளப்பரியது. பல நூல்களை வெளியிட்டுள்ள படித்த பண்பாளர் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவருக்கு என்னுடைய இதயபூர்வமான அஞ்சலி. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்ஷாந்தி

  • ஹ. ராஜா (பாஜக., மூத்த தலைவர்)

தமிழக தொல்லியல் துறையின் முதல் தலைவரும், வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழறிஞர்,சமஸ்கிருத அறிஞர் என பல முகங்கள் கொண்ட ஐயா பத்ம பூஷன் டாக்டர் நாகசாமி அவர்களின் இழப்பு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் மாபெரும் இழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.

  • பொன் . இராதாகிருஷ்ணன். (முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக.,)

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் இரா.நாகசாமி அவர்கள் முதுமையின் காரணமாக இன்று மறைந்த செய்து அறிந்து வருந்தினேன். புகழூர் சேரர் கல்வெட்டுகள், கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மகால், பாரதியார் பிறந்த வீடு என வரலாற்று முக்கியத்துவம் மிக்க அருங்காட்சியகங்களைச் சீரமைப்பதில் பங்காற்றியவர் இரா.நாகசாமி அவர்கள். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

  • தமிழச்சி தங்கபாண்டியன் (எம்.பி., திமுக.,)

தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர், முனைவர் இரா. நாகசாமி ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

தமிழக தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக இருந்து பெருமைமிகு அரிய பல வரலாற்று சாதனைகளை செய்தவர் நாகசாமி ஐயா. பூம்புகார், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லை ஆகியவற்றில் இவரின் மேதைமைமிகு வழிகாட்டுதலில் தமிழக தொல்லியல் துறை புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது. பிள்ளையார் பட்டி குடைவரை பற்றியும் தமிழக ஆலயக்கட்டுமானக்கலை, செப்பேடுகள், கல்வெட்டுகள் பற்றியும் இவரின் நூல்கள் வரலாற்று ஆவணங்கள், தமிழ் வரலாறு, தொல்லியல் சார்ந்த ஆர்வத்தை பரவலாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்தவர். தமிழகத்தின் பெருமைமிகு அடையாளம். தன் வாழ்நாள் முழுமையையும் வரலாற்றிற்கும் ஆய்வுக்கும் ஒப்புவித்த உயர்ந்த பேரறிஞர். இவரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் லட்சக்கணக்கான வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி .

  • வானதி சீனிவாசன் (எம்.எல்.ஏ., பாஜக.,)

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஆர்.நாகசாமி அவர்கள் உடல்நிலை குறைவால் காலமானார் என்று செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் .

கல்வெட்டுகளை ஆய்வு செய்து அவற்றை வருங்கால சந்ததியினர் எளிதாக அறிந்துகொள்ளும் விதமாக பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார் .

தொல்லியல் துறையில் இவரின் சிறப்பான பணிக்காக மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அளித்து கௌரவித்தது . அதோடு சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப் பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் .

ஆய்வு பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து தொல்லியல் துறைக்கு புகழ் சேர்த்தவர் .

சிறந்த படைப்பாளி , அன்னாரது இழப்பு தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் பேரிழப்பாகும் .

திரு.ஆர் . நாகசாமி அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • ஜி.கே.வாசன் M.P (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்)

தருமையாதீன அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் நடத்துனரும் தொல்லியல்துறை தலைவருமான திரு நாகசாமி அவர்கள் இழப்பு வரலாற்றியலில் நிரப்பமுடியாத பேரிழப்பு. தொல்லியல் துறைக்கு தமிழகத்தில் வித்திட்டவர்…இன்று இறையுள் பூரணமாய்… ஓம் சாந்தி…பத்ம பூஷன் மற்றும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்று உண்மையாகவே விருதுகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் நாகசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! ஓம் சாந்தி!

  • தருமை ஆதீனம்

ஒரு வரலாற்று ஆர்வலனான எனக்கு இரா. நாகசாமி அவர்களின் இழப்பு பேரிழப்பாகும். தென்னிந்தியாவின் மிகப் பெரும் வரலாற்றாசிரியர்களில் ஒருவர் அவர். அவரளவிற்குத் தமிழக வரலாற்றினை ஆராய்ந்து எடுத்துச் சொன்னவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நடமாடும் வரலாற்றுக் கலைக்களஞ்சியத்தை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் சாந்தோம் சர்ச் குறித்தான இரா. நாகசாமி அவர்களின் ஆய்வுகளைப் பதிவிட்டிருந்தேன். அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகமும் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்வதற்குப் பேருதவி அளிப்பவை.

வழக்கம்போல தமிழர்களிடையே எந்தச் சலனமுமில்லை. ஒரு சினிமா நடிகன் செத்தால் குமுறி அழுகிற தமிழ்ச் சமுதாயம் தன்னிடையே வாழ்ந்து, தனக்காகவே உழைத்து மறைந்த அறிவாளிகளை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்றதொரு கேடுகெட்ட நிலைப்பாடு இந்தியாவின் எந்தச் சமுதாயத்திலும் இல்லை. அவர்களின் நிலை கண்டு நான் நாணித் தலைகுனிகிறேன்.

பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்திற்காக திராவிடப் புண்ணாக்கர்கள் இரா. நாகசாமி போன்றவர்களை கவுரவிக்கவில்லை. இருப்பினும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனத் தன் கடமையைச் செய்து மறைந்த இரா. நாகசாமி போன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தமிழக கலாச்சாரத்தை, மொழியை, இலக்கியத்தை, வரலாற்றைப் போற்றிப் பாதுகாத்தவர்கள், பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழக பிராமணர்கள். மூடர்களான திராவிடப் புண்ணாக்கர்களின் பேச்சைக் கேட்டுத் தமிழர்கள் இழந்தது அதிகம். ஆனால் தமிழன் அதனை உணர்ந்தானில்லை. இனியும் உணருவான் என்பதும் சந்தேகம்தான்.

இரா. நாகசாமி அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக

  • நரேந்திரன் பிஎஸ்

இன்று அமரரான டாக்டர் இரா.நாகசாமி அவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு தென்றல் இதழுக்கு வழங்கிய நேர்காணலின் முதல் பகுதி :

கேள்வி : தொல்பொருள் ஆய்வுப் பணிக்கு வந்தது எப்படி?
டாக்டர் இரா.நாகசாமி : முதலில் வேறொரு பணியில் இருந்தேன். அப்போது, சென்னை அருங்காட்சியகத்தின் கலைப்பிரிவுக்குத் தலைவர் ஒருவரை நியமிக்க இருப்பதாக அறிந்தேன். நான் எம்.ஏ. வகுப்பில் சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாக எடுத்துப் படித்திருந்தேன். அக்காலத்தில் இருந்த அறிஞர்களும், கலைப்பிரிவின் தலைமைப் பதவி வகிப்பவர்களுக்கு சம்ஸ்கிருதத்திலும், பிராந்திய மொழியிலும் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும் என்று விதிமுறை வைத்திருந்தார்கள். அது ’ஊழல்’ என்பதையே கேள்விப்பட்டிராத 1955-58ம் வருட காலகட்டம். அப்போது பரிந்துரை, பணம் வாங்கிக் கொண்டு பதவியில் அமர்த்துவது எல்லாம் கிடையாது. எனக்கு ஒரு தகுதித் தேர்வு வைத்தார்கள். நான் அதில் தேர்ச்சி பெற்றேன். அதன்படி அந்தப் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னைத் தேர்ந்தெடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். அந்தக் காலத்தில் கிறிஸ்தவர், ஹிந்து என்ற வேற்றுமைகள் கிடையாது. திறமைக்குத்தான் முழு மதிப்பு. அப்போது எனக்குச் சம்பளம் 35 ரூபாய். ஆனால் அந்தக் காலத்தில் அந்த வேலையில் இருந்த இன்பம், ஆர்வம் இவற்றைப் பணத்தால் எடை போட்டுப் பார்க்க முடியாது.
*
பாரதி பிறந்த வீட்டில் வெடிமருந்து
பாரதி பிறந்த வீடு எட்டயபுரத்தில் அன்று கேட்பாரற்று இருந்தது. தீப்பெட்டி தயாரிக்க உதவும் வெடிமருந்துப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் கிடங்காக இருந்தது. அதை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டேன். அரசைத் தொடர்பு கொண்டு, அதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி அனுமதி பெற்றேன். பாரதியார் பிறந்தபோது அந்தவீடு எப்படி இருந்ததோ, அதே தோற்றத்துடன், அந்தப் பழமை மாறாமல், அந்த வீட்டைச் சீர் செய்து பாதுகாத்தோம். அது இன்னமும் அப்படியே இருக்கிறது. அதை மட்டும் அன்று செய்யாமல் விட்டிருந்தால் அந்த வீடு என்றாவது வெடித்திருக்கும், காரணம் அதில் வைக்கப்பட்டிருந்தது அத்தனையும் வெடிமருந்துப் பொருட்கள். பாரதியார் பிறந்த வீட்டைப் பாதுகாத்த மனநிறைவு எனக்கு உண்டு.

  • அரவிந்த் சுவாமிநாதன் (இதழாளர்)

Dr. Nagaswamy the eminent archeologist, epigraphist and institution builder. In late 1990s and early 2000s when some very tyrannical academic voices of international institutions launched what a scholar called ‘Indological McCarthyism’ against Indian scholars with ‘no horse in Harappa’ war cry, Dr. Nagaswamy spoke truth fearlessly to the power of the anti-Hindu Fuhrer of Harvard Indology Michael Witzel. May his memory inspire us in our fight for Dharma and Truth.

  • Aravindan Neelakandan

திரு நாகசாமியை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் கீழடி விவாதம் நடந்த போது என்னையும் அவரையும் இணைத்து பல அவதூறுப் பதிவுகள் வந்தன. ஒரு விவாதத்தில் அவரோடு பங்கேற்றுப் பேசினேன். நாகசாமி தமிழ்நாட்டுக் கல்வெட்டு அறிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவருக்கு சரி என்று பட்டதை சான்றுகளோடு கொடுக்க என்றும் தவறியதில்லை. அவருடைய இழப்பு தமிழ் உலகத்தின் பேரிழப்பு.

  • அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்

ஸ்ரீ நாகஸ்வாமி அவர்கள் மரணம் அடைந்த விஷயம் . அதிர்ச்சியை தருகிறது. பெரிய இழப்பு. டாக்டர் நாகஸ்வாமி அவர்களுக்கு ஊஞ்சலூர் சொந்த ஊர். தொல்பொருட் துறை இயக்குநராக (Director of Archaeology) இருந்து வந்தவர். சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிற்ப சாஸ்த்ரம், சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிலும் புலமை உண்டு. காஞ்சி ஸ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஸ்ரீமடத்தின் பல ‘ப்ராஜெக்ட்களில்’ கைங்கர்யம் செய்தவர் நாகஸ்வாமி அவர்கள். காஞ்சிபுரம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணி செய்துள்ளார்.

  • சர்மா சாஸ்திரிகள்

காலஞ்சென்ற டாக்டர். இரா.நாகசாமி அவர்கள் தமிழகத் தொல்லியலின் ஆசான் என்றே போற்றப்படுகின்றவர். தமிழகத் தொல்லியல்துறையினைப் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் 1962 ஆம் ஆண்டில் தோற்றுவித்த போது ட்டி. என். ராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். 1964இல் தொல்லியல் துறை முழுமையாகச் செயல்படத் தொடங்கிய போது இரா. நாகசாமி அவர்கள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். நான் 1975ஆம் ஆண்டில் துறையின் சார்பில் நடத்தப்பட்டு வந்த தொல்லியல்-கல்வெட்டியல் பயிற்சி நிறுவனத்தில் மாணவனாக ப் பயிற்சி பெற்றேன். என்னுடன் பயின்றவர்களுள் (பின்னர் சரித்திரச்செம்மல் பட்டம் பெற்ற) ச. கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். நாகசாமி அவர்களே பயிற்சி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர். 1973ஆம் ஆண்டில் அப் பயிற்சி நிறுவனம் நாகசாமி அவர்களால் தொடக்குவிக்கப் பெற்ற போது (பின்னர் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களாக ப் பரிணமித்த திரு. சு. இ ராஜகோபால், திரு. அர. பூங்குன்றன் ஆகியோர் மாணவர்களாக நாகசாமி அவர்களிடம் பயின்றோராவர். நானும் கிருஷ்ணமூர்த்தியும் மாணவர்களாக அப் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போது நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகள், 1978ஆம் ஆண்டில் நாங்கள் துறை அலுவலர்களாக ப் பணியில் சேர்ந்த பின்னர் நிகழ்ந்தவை -போன்ற பல நிகழ்வுகள் நினைவில் நிழல் போல ஆடுகின்றன.நாளை அவை குறித்து எழுதுகிறேன். எனது இதய பூர்வமான இரங்கலை நாகசாமி அவர்களின் குடும்பத்தார் க்குத் தெரிவித்துக் கொளகிறேன்-அவருக்கு என்னுடைய அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.

  • கல்வெட்டியல் அறிஞர் ராமச்சந்திரன்

பெரும் மதிப்பிற்குரிய கல்வெட்டு ஆய்வாளர் திரு நாகசாமி அவர்கள்(23-1-2022) இறைவனடி சேர்ந்தார். திருக்குறளில் உள்ள வேதக் கருத்துக்களை நயம்பட உரைத்த நல்ல மனிதர். தமிழக தொல்லியல் துறையில் முன்னோடியாக விளங்கிய நாக சாமி அவர்களை நெருங்கிய வட்டத்தார் ஆர் என் என்று அன்புடன் அழைப்பார்கள். நாகசாமி அவர்களுடைய ஹிந்து மதக் கருத்துக்கள் கோவில்களைப் பற்றிய சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. நாகசாமி அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். சம்போ மகாதேவா!!

  • கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள்)

தமிழ் நாட்டின் பெருமை நமது பழமையான கோவில்களே – அவைகளில் உள்ள கல்வெட்டுக்களை அனைவரும் அறியவும் அதை தேடி படிக்கவும் செய்யும் பெரும் இயக்கமாக ஆக்கிய – தொல்லியல் துறை என்பதை தமிழகத்தில் உருவாக்கிய மாபெரும் தமிழர் ஆர்.நாகசுவாமி அவர்கள் இன்று தனது 91 வயதில் காலமாகி இருப்பது வருந்ததக்கது !!!

இன்று பல பல சோழர்கள் கால செப்பு திருமேனிகளை பற்றிய விரிவான செய்திகளை பதிவிட்டு இருக்கிறார் .. சமஸ்கிருத பண்டிதர் ராமச்சந்திரன் சாஸ்திரிகளுக்கு 1930 ஆகஸ்ட் 10 அன்று பிறந்தவர் நாகசாமி . அவர் மதராஸ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றார் மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நாகசாமி பூனா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார் .

நாகசுவாமி இந்திய தொல்லியல் துறையின் (ASI) கீழ் தொல்லியல் பயிற்சி பெற்றார் மற்றும் 1959 இல், கலை மற்றும் தொல்லியல் துறைக்கான காப்பாளராக சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சேர்ந்தார். நாகசாமி தமிழ்நாட்டில் தொல்லியல் பாடத்தை மிகவும் பிரபலமான பாடமாக மாற்றினார், குறிப்பாக பாக்கெட் புத்தக வழிகாட்டிகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகள் மத்தியில். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு அருகில் உள்ள பல ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சுத்தம் செய்து பாதுகாப்பதில் அவர் பொறுப்பேற்றார். செய்தித்தாள் வடிவில் பிரபலமான வழிகாட்டிகளை வெளியிடுவதன் மூலம் நினைவுச்சின்னங்களை பிரபலப்படுத்தினார், ஒரு பிரதிக்கு பத்து பைசா விலை.

புகளூரில் உள்ள முதல் நூற்றாண்டு சேர கல்வெட்டுகள் , கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஏகாதிபத்திய சோழர்களின் அரண்மனை தளம், மதுரையில் உள்ள 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனை , 17 ஆம் நூற்றாண்டின் டேனிஷ் கோட்டை போன்ற பல வரலாற்று நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்கு அவர் பொறுப்பேற்றார்.

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் அரண்மனை தளத்தைத் தோண்டியதோடு, எட்டயபுரத்தில் உள்ள டிரான்க்யூபார் மற்றும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த இடம் . போன்ற தமிழர்களின் பெருமை மிக சரித்திரத்தை நமக்கு காட்டிய மனிதர் … மேலும் பல சிலை திருடர்கள் எதிரான – லண்டன் நடராஜா வழக்கில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிபுணத்துவ சாட்சியாக ஆஜரானார். மிக முக்கியமான ஒன்று இவர் வாழ்நாள் முழுவதும் நமது தமிழ் மறையான திருக்குறள் ஒரு வேத நெறியை காட்டும் நூலே என்று ஒரு புத்தகமே என்று எழுதியதால் …

வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் – திராவிட தீதுகளுடன் சேர்ந்து இவரின் அபிரிமித தமிழ் வரலாற்று கண்டு பிடிப்புக்களை மறைத்து – இவரை எதிர்த்து கோசமிட்டன ..

“DMK president M.K. Stalin on Saturday demanded the removal of noted archaeologist R. Nagaswami from a committee of the Central Institute of Classical Tamil (CICT) tasked with selecting scholars for the President’s Award. Mr. Nagaswami was “anti-Tamil and distorted Tamil culture and history according to his whim”, Mr. Stalin alleged. In a statement, the DMK leader said Mr. Nagaswami had belittled poet-saint Thiruvalluvar by claiming that the Tirukkural had its roots in the Vedas.

வள்ளுவன் இந்து வேத மூலத்தை கொண்டே இருக்கு என்று சொன்னதால் தமிழர் விரோதி !!! – ஸ்டாலின்

திருக்குறள் இந்துக்களின் வேத புறமானது என்று சொன்னதற்காக அவரை தமிழ் போற்றும் – Central Institute of Classical Tamil _ கமிட்டியில் இருந்து விரட்ட குரல் குடுத்தவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின்..

இன்று ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பழைய கோவில் கல்வெட்டுக்களை தேடி படித்து – என்ன இது ஆயிரம் வருட கோவிலா என்று மக்கள் ஆச்சரியப்படும் பல விசயங்களை உருவாக்கிய மகான் இறைவனடி சேர்ந்து விட்டார் .. பல ஆயிரம் பெயர் அறியா அரசர்கள் செய்த தமிழ் மண்ணின் சாதனையை நமக்கு படிக்க சொல்லி குடுத்த ஆசான் – ஆன்மா நிச்சியம் திருவரங்கத்து அரங்கனும் – தில்லை நடராஜனும் தங்களது திருவடி நிழலில் இடம் அளிக்க வேண்டுவோம்

  • விஜயராகவன் கிருஷ்ணன்

பத்ம பூஷன் மற்றும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்று உண்மையாகவே விருதுகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் நாகசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! ஓம் சாந்தி!

வரலாற்றாய்வாளர், தொல்லியல் அறிஞர், கல்வெட்டு நிபுணர் என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர் அவர். இவர்தான் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையின் (Tamil Nadu Archeology Department) நிறுவனத் தலைவர். அதன் தலைவராக இவர் இருபது ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்திருக்கிறார்.
பெரிய புராணம் மற்றும் திருக்குறள் குறித்து இவர் எழுதியிருப்பவை மிகவும் பிரசித்திப் பெற்றவை. இவரின் Tamil Nadu – The Land of Vedas எனும் புத்தகம் இவரது ஆழ்ந்த ஞானத்துக்கு ஒரு உதாரணம். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

London Nataraja Case எனும் புகழ்பெற்ற வழக்கில் London High Courtல் Expert Witness ஆக ஆஜரான இவரது ஆழ்ந்த ஞானத்தைக் கண்டு லண்டன் உயர் நீதிமன்றம் இவரை மிகவும் போற்றியது!

“An unequalled expert in Chola Bronzes” என்று பாராட்டியது.கோவில் கல்வெட்டுகள் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டு வரலாறு குறித்தான இவரது எழுத்துக்கள் அளப்பரியவை! தொல்லியல் (archaeology) எனும் பாடத்தை அடுத்த தலைமுறையினரிடத்தே பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு மிகவும் போற்றத்தக்கது.

ஆயிரக்கணக்கான பள்ளி-கல்லூரி மாணவர்களை வைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், வரலாற்று நினைவுச் சின்னங்களையும் தூய்மைப்படுத்தி பாதுகாத்தவர், Dr. நாகசாமி. இவரது அருமை, பெருமைகளை அறிந்த ஆசான் ‘திராவிட மாயை’ சுப்பு ( Subbu Maniyan ) அவர்கள் இவரை வைத்து ஒரு கூட்டம் நடத்த சொன்னார். 2017ஆம் ஆண்டு சென்னையில் எனது தலைமையில் அந்தக் கூட்டம் நடந்தது. வயது முதிர்வு காரணமாக உடல் தளர்ந்திருந்தாலும் மிகவும் தெளிவாகப் பல்வேறு விசயங்களை விளக்கினார் ஐயா நாகசாமி அவர்கள்!

அடுத்த ஆண்டே, அதாவது 2018ல், அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது நமது மத்திய அரசு. மிகவும் மகிழ்ந்து போனேன்! நிறைவாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்திருக்கிறார் பெருஞானம் கொண்ட நாகசாமி ஐயா அவர்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்! ஓம் சாந்தி! ஓம் நமசிவாய! ஓம் நமோ நாராயணாய!

  • வீர. திருநாவுக்கரசு (பேராசிரியர்)

நாகசாமி ஐயா தொல் பொருள் வரலாற்று ஆய்வாளர் மூன்று முறை ஐயா அவர்களை சந்திக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது. வரலாற்று திரிபு எப்படி திராவிட, கிறிஸ்துவ, காம்ரேடுகள் செய்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்து சொன்னார். தமிழகத்தில் உள்ள அனைத்து பழைமையான திருக்கோவில் வரலாறு ஐயா அவர்களுக்கு அத்துப்படி தமிழனும், ஹிந்துவும் வேறு அல்ல என்பதை வரலாற்று ஆதராத்தை வைத்து எடுத்து சொன்னவர் ஐயா அவர்கள் வயது மூப்பு காரணமாக இந்த பூஉலகை விட்டு பிரிந்து விட்டார். ஐயா வின் இழப்பு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும், தொல்பொருள் துறைக்கும் பேரிழப்பு அன்னாரது ஆன்மா சாந்தியடைய நம் தாயார் ஆண்டாளை ப்ரார்த்திக்கிறேன்.

  • சரவண கார்த்திக் (விஷ்வ ஹிந்து பரிஷத்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe