Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img
spot_img

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?அர்ச்சகர்களைப் பார்த்து இவர்கள் பொறாமைப் படுவது ஏன்?!

அர்ச்சகர்களைப் பார்த்து இவர்கள் பொறாமைப் படுவது ஏன்?!

To Read in Indian languages…

அர்ச்சகர்கள் விஷயத்தில் பகுத்தறிவாளர்களின் கண்ணை உறுத்துவது அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை தான். ”அதென்ன அவனுக்கு மட்டும் தெய்வத்துக்கு அருகே நிற்கும் உரிமையும் மதிப்பும்! ” எண்று உறுமுகிறார்கள்.

அர்ச்சகர்களை ஸ்வாமி’ என்றழைப்பதற்கு அவர்களுடைய சுயமரியாதை இடம் தருவதில்லை. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது போல் எல்லோரும் இந்துக் கோயில் அர்ச்சகரே என்ற புதுமொழியை உண்டு பண்ண இந்த முன்னேற்ற வாதிகள் துடிக்கிறார்கள். அதனால் தான் இந்த கோயில் குடுமிக்காரர்கள் விஷயத்தில் இவர்கள் இப்படி அத்துமீறி தலையிடுகிறார்கள்.

எட்ட நின்று பார்த்தால் எல்லாம் பச்சையாய்த் தெரியும் பசும் புல்வெளி, கிட்டப் போய்ப் பார்த்தால் தான் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்ததாக, கரடு முரடானதாகக் காட்சி அளிக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் அர்ச்சகன் வாழ்க்கை ஸ்வாமித்துவமான வாழ்க்கை தான். தெய்வத்துக்கு அடுத்த மரியாதை உள்ள பதவிதான்! ஆனால் இந்த கருவறைக் கைதியின் வாழ்க்கை ஏடுகளை யாராவது புரட்டிப் பார்த்திருக்கிறார்களா?

வைணவத் திருத்தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் மற்றும் சைவத் திருத்தலங்களான பிள்ளையார்பட்டி, பழனி, திருச்செந்தூர் போன்ற சில பணக்காரக் கோயில்களைத் தவிர மற்ற கோயில்களில் வருமானம் என்பது, ஒன்று மத்திய தரமாக இருக்கும் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும். ’இதோ மூலவர் வரதராஜப் பெருமாள் சகல ஐஸ்வர்யங்களையும் தருபவர்’ என்று கூறி, ஆர்த்தித் தட்டைக் காட்டும் அர்ச்சகருடைய வாழ்வில் எவ்வுளவு ஐஸ்வர்யம் கொட்டுகிறது அல்லது எவ்வுளவு வரங்கள் இல்லாமலே இருக்கின்றன? என்று யாரும் சிந்திப்பது இல்லை. அல்லது சிந்தித்தாலும் அதைப் பற்றி அக்கறைப் படுவதில்லை.

குறை ஒன்றும் இல்லா கோவிந்தனுக்குக் கோயில் கைங்கர்யம் செய்யும் இந்த ஆரத்தித் தட்டுத் தொண்டர்களில் எத்தனையோ பேர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுவதற்கே திண்டாடுகிறார்கள். ஏன், ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளை சாப்பிடுகிறவர்கள் எத்தனை பேர்?கிழிந்த வேட்டியும் கந்தல் துணியும் அணிந்து கொண்டு வெளி உலக சுக போகங்களுக்கு கதவடைக்கப் பட்டவர்களாக அவர்கள் வாழும் கண்ணீர் வாழ்க்கை பலருக்குப் புரிவதில்லை.

கோயில் நிலங்களும், மான்யங்களும் சுரண்டல்காரர்களால் சூறையாடப்பட்டு விட்டன. ஏடுகளில் அந்நாளில் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வளங்களும் சம்பாவணைகளும் இன்றைய நிஜ வாழ்க்கையின் உண்மையோடு போட்டி போட்டுத் தோற்று அவர்களை தரித்திர சாமிகளாக வைத்திருக்கின்றன. ஏழ்மையில் வாடும் இந்த இறைத் தொண்டர்களுக்கு, கள்ளக் கடத்தல் செய்தால் கணக்கில்லாமல் பணம் வரும் என்று தெரியாதா?ஆபாசத் திரைப்படங்கள் விற்பனை செய்தால் அளவில்லாமல் சம்பாதிக்கலாம் என்று தெரியாதா?வட்டி முதலிய தொழில்களின் மிதமிஞ்சிய வருமானத்தைப் பற்றி இவர்களுக்குப் புரியாதா?

தெரியும். புரியும்! ஆனால் அவர்களுக்கு அந்தப் பாதைகள் விருப்பம் இல்லை. அது அதர்மம் என்று நினைக்கிறார்கள். பட்டினி கிடந்தாலும் பகவத் கைங்கர்யமே உன்னதம் என்று நம்புகிறார்கள். ஒரு கொள்கை நெறி! ஒரு கோட்பாட்டு வெறி! இதெல்லாம் மூன்று வேளை மூக்கைப் பிடிக்க உண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சட்டம் இயற்றுபவர்களுக்கு விளங்குமா?அல்லது விளங்கிக் கொள்ள அவர்கள் தயாரில்லையா?

பசியும் பட்டினியும் கிழிசலும் கந்தையும் எவ்வுளவு தான் எம்மை வாட்டினாலும் இறைத் தொண்டை விடமாட்டோம்’ என்ற பிடிவாதம் இவர்களுக்கு ஏன் வந்தது?எப்படி வந்தது?அது இன்று நேற்று உண்டான புது மன உறுதி அல்ல. ஆண்டாண்டு காலமாக யுகம் யுகமாக அந்தப் பரம்பரையில் பிறப்பவர்களை சிறு வயதில் இருந்ததே.

உலகியல் போகங்களுக்கு வழியில்லாமல் செய்து பகவத் கைங்கர்யம் ஒன்றே நமக்கு ஏற்பட்ட பாதை என்று பாலூட்டும் போதே இப் படிப்பினையையும் ஊட்டி வளர்த்தார்கள் அவர்களுடைய முன்னோர்கள்.

பூண்டு, வெங்காயம் கூட ஆசாரத்திற்கு விரோதம் என்று நாக்கு ருசியை மடக்கி வைத்து தயிர்சாதம், புளியன்னம், வற்றல் வடகம் என்ற சிறு வட்டத்துக்குள்ளேயே அவர்களுடைய வயிறும் வாயும் அடைபட்டுக் கிடந்தன. 10 வயதிற்குள் பல புத்தகங்களை மனப்பாடம் பண்ண வேண்டும். வேதமும் ஞானமும் விளையும் போதே அவர்களோடு அவர்கள் அறிவில் முளைத்தன.

கோயிலுக்கு வரும் பணக்காரர்களுடைய தங்கமும், வைரமும், நெக்லஸூம், பட்டுச் சேலையும், காரும் ஆடம்பரமும் இந்த அர்ச்சகர்களை மயக்கவில்லை. திருச்சியருகே உள்ளே திருநாராயண கோயிலுக்குள் தீ வைத்த போது தன் குடும்பத்தோடு பெருமாள் மூர்த்தி மீது விழுந்து சுற்றி அணைத்துக் கொண்டு ‘நெருப்பு எங்களைச் சுட்டுப் பொசுக்கிய பிறகு பெருமாளைச் சுடட்டும்’ என்று செத்து மடிந்தார்களே! இந்தப் பண்பு பலகால ஆன்மீக விவசாயத்தின் பலன். இது சிறுகால வேளாண்மையின் விளைவல்ல! இதைக் குறைவாக எடை போடுவது கொடூரம்;குருட்டுத்தனம்.

தேசத்துக்காகப் போராடி சிலநாள் சிறை சென்றவர்களைக் கூட நாம் தாமிரப்பத்திரம் கொடுத்து கௌரவிக்கிறோம், சுதந்திரப் போராட்ட வீரர் என்று சலுகைகளும் சன்மானங்களும் வழங்குகிறோம். ஆனால் மனித மனத்தில் தோன்றும் நியாயமான சபலங்களைக் கூட அடக்கி ஒடுக்கி ஒரு இல் வாழ்க்கைத் துறவியாக, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் அர்ச்சகர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் கண்டும் மற்றவர்கள் வயிறு ஏன் இப்படி எரிய வேண்டும்?பொறாமைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா?

போட்டி, பொறாமைக்குக் கூட ஒரு தகுதி வேண்டும். பரம அனாச்சாரம் கெழுமிய ஒரு வாழ்விலே வாழ்பவர்கள், வேத மந்திரங்களை நாக்கை வளைத்துச் சரிவர உச்சரிக்க முடியாதவர்கள், பணவரவு குறைந்து விட்டால், பகவானை ஏசுகிறவர்கள், மற்றவர்களின் உல்லாசங்களைக் கண்டு கொட்டாவி விடுபவர்கள், தன் வாரிசுகள் டாக்டராகி, என்ஜீனியராகி, காரில் பயணிக்க வேண்டும் என்று ஏகமாக திட்டங்கள் வைத்திருப்பவர்கள் இந்தக் கொட்டாங்குச்சி சாமியார் பதவிக்கு ஏன் இப்படித் துடிக்கிறார்கள்?

“பயில்வான் மகன் பயில் பயில்வானாகட்டும்’, ’வைசியன் மகன் வைசியனாகட்டும்’ என்று தானே பெரியோர்கள் சொன்னார்கள். பகுத்து பகுத்து அறிகிற பகுத்தறிவாளர்களுக்கு இந்தச் சராசரி நியாயம் கூட புத்திக்கு எட்டவில்லையா?இலக்கு எதுவானாலும் அதில் நான் கலந்து கொண்டு போட்டி போடுவேன் என்ற வீம்பு மனப்பான்மை உண்மையிலேயே நல்லது தானா என்று சிந்திக்க வேண்டும்.

எல்லாரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கும் உலக ஒலிம்பிக் போட்டியில் கூட நீச்சல் வீரன் நீச்சல் போட்டியில் தான் கலந்து கொள்ளுகிறான், பளுதூக்கும் போட்டியில் அல்ல, ஓட்டப்பந்தய வீரன் மல்யுத்தத்துக்குப் போவதில்லை.

இந்த வரைமுறைதான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு தான் அவனை நாகரீகம் உள்ளவனாக காப்பாற்றுகிறது. இல்லையென்றால் எச்சில் இலைக்கு சண்டைபோடும் சொறிநாய்க் கூட்டத்துக்கும் அவனுக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும்.

ஜெய் ஸ்ரீராம்!

  • ஆண்டனி ஜோசப் எழுதிய கட்டுரை ( 2006 செப். கீதாசார்யன் இதழில் வெளிவந்தது)

This article was published in the Vainava magazine “Geethacharyan” in Sep-2006 by Antony Joseph

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,768FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version