- Ads -
Home அரசியல் கட்சி மேடையில் விஜய்! நடிப்பைத் தவிர வேறு உண்டா?

கட்சி மேடையில் விஜய்! நடிப்பைத் தவிர வேறு உண்டா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்தியது.

#image_title
actor vijay

— ஆர். வி. ஆர்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்தியது.

மாநாட்டு மேடையில் விஜய் பேசிய தோரணையும், ஏற்றி ஏற்றி இறக்கிய அவரது குரலும் அவர் வசனம் பேசினார் என்று அறிவித்தன. பேசும்போது அடிக்கடி இரு கைகளை இரண்டு பக்கமும் விரித்து, ஒரு விரல் அல்லது இரண்டு விரல்களை உயர்த்தி, இடுப்பில் இரு கைகளை வைத்தபடி சில ஸ்டைலான போஸ்கள் காண்பித்தார். கூடுதலான எஃபெக்ட் இருக்கட்டும் என்று அவ்வப்போது அவர் ஆங்கில வாக்கியங்களை உரத்துப் பேசினார். மொத்தத்தில் விஜய் ஒரு அனுபவ நடிகராகத் தென்பட்டார்.

விஜய் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக ஆசைப்படுகிறார் என்பது மேலும் புரிந்தது. வேறு எதையும் அவரது மாநாட்டுப் பேச்சு பெரிதாக வெளிப்படுத்தவில்லை – சில கட்சிகளுக்குக் கிலியையும் சில கட்சிகளுக்குக் புதிய கூட்டணி ஆசையையும் கொடுத்தார் என்பதைத் தவிர.

இரண்டு சக்திகளை விஜய் தனக்கு அரசியல் எதிரிகள் என்று மாநாட்டில் சொன்னார். ஒன்றை, ‘பிளவுவாத சக்திகள்’ என்று குறிப்பிட்டார். இன்னொன்றை, ‘கரப்ஷன் கபடதாரிகள்’ என்று பெயரிட்டார். பாஜக-வையும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக-வையும் தான் அவர் மனதில் வைத்து அப்படிப் பேசியிருக்க முடியும்.

ALSO READ:  ராகுல் காந்தி: அமெரிக்காவிலும் அதே அசடு!

பாஜக-வை நினைத்து விஜய் நீட்டி முழக்கி எதையெல்லாமோ தொட்டுப் பேசியது இது: “பிளவு சக்திகள் – அதாவது மத, சாதி, இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன்னு சூழ்ச்சி செய்து பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நமக்கு ஒரு எதிரி”.

திமுக-வை ஒரு எதிரியாக வைத்து விஜய் பேசியது இது: “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நமது இரண்டாவது எதிரி….. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும், முகமூடி அணிந்த கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்து நம்மளை ஆண்டுகிட்டு இருக்காங்க.”

அவர் அறியாமலே விஜய் பாஜக-வுக்கு ஒரு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார். அதாவது, மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக-வின் ஆட்சியின் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டு சொல்லவில்லை. காரணம், அப்படி எதையும் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பாஜக-வை ஒரு ‘பிளவுவாத சக்தி’ என்று மட்டும் ஏதோ சொல்லி வைத்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்கே தெரியாது.

நிர்வாகத்தில் ஊழலைக் கண்டும் காணாமல் இருக்கும் கட்சிகளாக பாரதத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக திமுக-வைப் பார்த்தார் விஜய் என்று அவர் பேச்சு காண்பிக்கிறது. இதனால் மட்டும் விஜய் தூய்மையான அரசியல் தலைவராக, மக்கள் நலனை முக்கியமாக மனதில் நிறுத்திப் பணி செய்யும் கட்சித் தலைவராக, உருவெடுப்பார் என்பது சிறிதும் நிச்சயமல்ல.

ALSO READ:  சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

ஏறக் குறைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்வதைத்தான் விஜய்யும் சொல்கிறார் – அதே நாடகத்தனத்துடன், ஆனால் உக்கிரம் குறைந்து, சற்று கௌரவமான வார்த்தைகளில். அவர்கள் இருவரும் வெளிப்படைத் தன்மை அற்றவர்கள் தான்.

எம். ஜி. ஆர் மற்றும் ஆந்திராவின் என். டி. ராம ராவ், இருவரையும் முன்னுதாரணங்களாகச் சொல்லியும் விஜய் தனது மாநாட்டில் பேசினார். ஆனால் அவர்கள் கதை வேறு.

எம். ஜி. ஆரைப் பொறுத்தவரை, அவர் திமுக-வில் பல வருடங்கள் இருந்தார். அப்போது அவர் திமுக-வின் முக்கிய அரசியல் முகமாகவும் விளங்கினார். அவரைப் பிரதானமாக வைத்து திமுக தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் ஏராளம்.

எம். ஜி. ஆர் திமுக-விலிருந்து விலக்கப்பட்டு அதிமுக-வை ஆரம்பித்த போது, திமுக-வில் இருந்த பல தலைவர்கள் அதிமுக-விற்கு வந்தனர். எம். ஜி. ஆர் ஓட்டுக்களும் அதிமுக-வுக்கு மாறி திமுக-வுக்குப் பெரிய இழப்பைத் தந்தன. விஜய் நிலைமை அப்படியானது அல்ல. அந்த அளவுக்கான பாதிப்பை விஜய் திமுக-வுக்குக் கொடுத்து அவரும் ஆட்சிக்கு வருவது இன்றைய தமிழகத்தில் சாத்தியமாகத் தெரியவில்லை.

இன்னொன்று. திறமையை, தன்னலமற்ற சேவை மனப்பான்மையை, நாட்டுக்காக அல்லது மாநிலத்துக்காக ஈர்க்கும் முகமாக, தலைமைப் பண்புள்ளவராக, விஜய் தென்படவில்லை. மேடையில் நின்று ஏற்ற இறக்கத்துடன் டயலாக் டெலிவரி செய்யும் ஒரு கலைஞராக மட்டுமே அவர் தென்படுகிறார். சில சினிமாக் கதைகளில் காணப்படும் பெரிய ஓட்டைகளும் அவரது மாநாட்டுப் பேச்சில் இருந்தன.

ALSO READ:  துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்!

நடிப்புத் தொழிலில் வரும் வருமானத்தை இழந்து விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால் மட்டும் அவர் ஒரு நல்ல, நேர்மையான, திறமையான, நாட்டு நலனில் அக்கறை கொண்ட, தலைவராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு மாறான அறிகுறிகள்தான் அவரிடம் தெரிகின்றன.

விஜய் கட்சி மாநாட்டிற்கு இரண்டரை லட்சம் பேர் வந்திருக்கலாம் என்கிறார்களே – அவர் அரசியலில் பெரிய சக்தியாக, ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக, வந்துவிடுவாரோ, என்று யாரும் அச்சப்பட அவசியமில்லை.

ஒரு புறம் முப்பத்தி இரண்டு வருடமாக சினிமாவில் நடித்த விஜய் தன் ரசிகர்களைப் பிரதானமாக வைத்து இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். இன்னொரு புறம், முப்பத்தி ஆறாவது வயதில் தனது ஐ. பி. எஸ் வேலையை விட்டுவிட்டு அண்ணாமலை என்னும் இளைஞர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்து, பாஜக-வில் சேர்ந்து, மளமளவென்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார் – வயதும் வற்றாத முனைப்பும் அசாத்தியத் திறமையும் அர்ப்பணிப்பும் அவர் பக்கம் இருக்கின்றன.

விஜய்யை மீறி எதிர்காலத் தமிழக அரசியலில் நல்லது நடக்க நாம் நம்பிக்கை வைக்கலாம்.

Author: R Veera Raghavan, Advocate, Chennai 
([email protected])
https://rvr-india.blogspot.com
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version