- Ads -
Home உரத்த சிந்தனை அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம்!

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம்!

பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், குவாரிகளில் கல் மணல் திருடு போகக் கூடாது, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

— ஆர். வி. ஆர்

தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு கேடான சம்பவத்தில் ஒரு எதிர்க் கட்சித் தலைவராகத் தன் வேதனையை, தன் இயலாமையை, வெளிப்படுத்த பாஜக-வின் அண்ணாமலை ஒரு காரியம் செய்தார். அதாவது, மேல்சட்டை அணியாத உடம்பும் நெற்றியில் திருநீறுமாய்த் தனது வீட்டின் முன் நின்று, பலர் முன்னிலையில் தனது மேல் உடம்பை எட்டு முறை தானே சாட்டையால் சுழட்டி அடித்துக் கொண்டார்.

காரணம் இது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு மாணவி தன் ஆண் நண்பருடன் தனியாக இருந்த சமயம், ஒரு 37-வயது அயோக்கியன் வந்து அந்த ஆண் நண்பரை விரட்டி அனுப்பி அந்தப் பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்தான். பின்னர் போலீஸில் அந்தப் பெண் செய்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் எப். ஐ. ஆர் எழுதியது.

எப். ஐ. ஆரில் அந்தப் பெண்ணின் போன் நம்பர், அப்பா பெயர், ஊர் எல்லாம் குறிக்கப்பட்டு, தவறாக நடந்தது அந்தப் பெண்தான் என்பது போல் விவரங்கள் குயுக்தியாக எழுதப் பட்டு – அந்த வில்லத்தன எப். ஐ. ஆர் வெளி உலகுக்குத் தெரியத் திட்டமிட்ட மாதிரி – சட்டத்திற்குப் புறம்பாக அந்த எப். ஐ. ஆர் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

ஒரு அயோக்கியனின் குற்றத்தைச் சுட்டிக் காட்டுவதை விடவும், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் மானம் கெடவைத்து அதை ஊர் அறியச் செய்ய முனைந்தது அந்த எப். ஐ. ஆர் – இம்மாதிரி பாதிக்கப்படும் எந்தப் பெண்ணும் இனி அடங்கி ஒதுங்கிப் போகவேண்டும் என்று எச்சரிக்கும் விதமாக.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஒரு அயோக்கியனும் போலீஸ் துறையும் அவரவர் வழியில் அந்தப் பெண்ணுக்கு இழைத்த அக்கிரமத்தையும் அநீதியையும் கடுமையாகச் சாடினார். தான் இதில் ஒன்றுமே செய்ய இயலாத தமிழக அரசியல் சூழலில் தனது மன வேதனையை ஊருக்கு உணர்த்த, மறுநாள் தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். அதோடு, திமுக ஆட்சியிலிருந்து இறக்கப்படும் வரை இனி காலணி அணிய மாட்டேன் என்றும் அறிவித்தார்.

ALSO READ:  ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

சொன்னபடி அண்ணாமலை சாட்டையடி நடத்திக் கொண்டார், இரண்டு முறை கூடுதலாக.

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் பல மக்களின் தலையைப் பிடித்து பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தைப் பார்க்க வைக்கிறது. தமிழக அரசின் மேல், அதை நடத்தும் திமுக-வின் மேல், அர்த்தமுள்ள கோபம் கொள்ள வைக்கிறது.

அண்ணாமலையின் நீண்ட வார்த்தைக் கண்டனங்களை விட, அவரது ஒரு நிமிடச் சாட்டையடி வைபவம் மூன்று பலன்களைத் தரும். ஒன்று: அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை ஒரு செய்தியாக மட்டும் கவனித்துப் போகும் பொதுமக்கள் பலரையும் உலுக்கி, ‘ஏய் திமுக அரசே! உனது நிர்வாகத்தில் ஏன் இதுபோன்ற பாதகங்கள் அடிக்கடி நிகழ்கின்றன?’ என்று உள்ளூறச் சீற வைக்கும். இரண்டு: அதிகமான பாஜக-வினரை அண்ணாமலையின் அர்ப்பணிப்பையும் மதிப்பையும் உணரச் செய்து அவர் மீதான மானசீக மரியாதையைக் கூட்டும். மூன்று: முதல் இரண்டும் சேர்ந்து பாஜக-வின் அரசியல் சக்தியைத் தமிழகத்தில் இன்னும் வலுப்படுத்தும், அக்கட்சிக்கான மக்கள் ஆதரவை அதிகப் படுத்தும்.

தனது சாட்டையடி மந்திரத்தால் அண்ணாமலை ஏற்படுத்திய முதல் பலனை, அதாவது மக்கள் பலரையும் தட்டி எழுப்பியதை, பா.ஜ.க–விலேயே அனைவரும் உடனே உணர்வார்கள். அதன் விளைவுதான் இரண்டாவது பலனும், அதாவது கட்சிக்குள் அண்ணாமலை மீதான அபிமானம் மற்றும் மரியாதை உயர்வது.

தன் பங்கிற்கு இப்போது சென்னை உயர்நீதி மன்றமும் பாதிக்கப்பட்ட பெண் விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்து, மூன்று பெண் ஐ. பி. எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அதனிடம் குற்ற விசாரணையை ஒப்படைத்திருக்கிறது. தவிர, எப். ஐ. ஆர் கசிந்ததால் பாதிப்படைந்த பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாகத் தமிழக அரசு இருபத்து ஐந்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

ALSO READ:  கோயில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள்; அகற்ற நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை!

சரி, அண்ணாமலையின் சாட்டையடி மந்திரத்திற்கு ஏன் அந்த மூன்று பலன்கள் கிடைக்கின்றன – குறிப்பாக, மக்கள் பலரின் மனதை உலுக்கி எழுப்பிய பலன்?

பாரத மக்கள், அதுவும் தமிழக மக்கள், சிந்தனையை விட உணர்ச்சிகளால் அதிகம் வழி நடத்தப் படுகிறவர்கள். இதைச் சில அரசியல் தலைவர்கள் முன்பே உணர்ந்தார்கள். அவர்கள் தமது கட்சிக் காரர்களை “உடன் பிறப்பே”, “ரத்தத்தின் ரத்தமே” என்று அழைத்த உடனேயே கட்சித் தொண்டர்கள் பலரும் அந்த உணர்ச்சிமிக்க வார்த்தைகளில் கட்டுண்டு அப்படி அழைத்த தலைவரிடம் மாறாத அபிமானம் வைத்தார்கள்.

உணர்ச்சி மிகுந்த நம் மக்கள் தமக்குத் தெரிந்த ஒருவர், அதுவும் தாம் பாசம் வைத்திருக்கும் அல்லது மதிக்கும் ஒருவர், தன்னை வருத்திக் கொண்டால், தாங்களும் வருந்துவர், அந்த மற்றவருக்காகக் கவலைப் படுவர். பல வீடுகளில் “நான் சாப்பிடமாட்டேன் போ” என்று ஒருவர் சொன்னால், மற்றவர் முன்னவருக்காகச் சற்று இறங்கி வரலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மஹாத்மா காந்தியின் உண்ணா விரதங்கள் இவ்வாறு மக்களை அவர் கண்ணோட்டத்தின் பால், அவர் போராட்டத்தின் பால், ஈர்த்து அவருக்கு வலு சேர்த்தன.

ஆனால் ஒன்று. எல்லாத் தலைவர்களும் தம்மை வருத்திக் கொள்வதால், மக்களும் கவலை கொண்டு அந்தத் தலைவர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டார்கள், அந்தத் தலைவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். அந்தத் தாக்கத்தை மக்களிடம் ஒரு தலைவன் ஏற்படுத்த விரும்பினால், முதலில் அதற்கான தார்மீக சக்தி அந்தத் தலைவனிடம் இருக்க வேண்டும். அந்தத் தலைவனும் ஒரு முக்கியமான, தன்னலமற்ற, பொதுநலன் கொண்ட ஒரு பிரச்சனைக்காக மட்டும் தன்னை வருத்தி மக்களை ஈர்க்க முனைவான். அதனால்தான் மக்களும் ஈர்க்கப் படுவார்கள்.

ALSO READ:  கேரள கழிவுகள் தென்தமிழகத்தில்! விடியல் அரசின் பரிதாபங்கள்!

அண்ணாமலை அப்படியான தலைவர். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதாக அவர் கையில் எடுத்த பொதுப் பிரச்சனையும் முக்கியமானது. ஆகையால் அவரது சாட்டையடி மந்திரம் ஒரு ஆரம்ப நிலை வெற்றியை உடனே கொடுத்திருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். திமுக எதிர்க் கட்சியாக இருந்து, எந்தக் காரணத்திற்காகவும் அப்போதைய அரசை எதிர்த்துத் திமுக-வின் இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டால், அவர்மீது பரிதாபம் கொண்டு யார் வருந்துவார்கள்? அப்போது அவர் யாரைத் தன்பக்கம் புதிதாக அல்லது வலுவாக ஈர்ப்பார்? அவருடைய கூத்தைப் பார்த்து அவரது கட்சிக்காரர்களே சிரிப்பார்களே!

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் இனி எக்காலமும் வேலை செய்யாமல் போவதற்கு, ஆளும் திமுக ஏதாவது செய்ய வழி உண்டா? உண்டு. என்னவென்றால்:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக நிலவச் செய்ய வேண்டும், பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், குவாரிகளில் கல் மணல் திருடு போகக் கூடாது, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும், ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்ட பலவான்களுக்கு, பில் பணத்தைக் கேட்டால் முஷ்டியைத் தூக்கும் தைரியம் வரக் கூடாது, செந்தில் பாலாஜிகளை அரசு போற்றக் கூடாது, ………. சரி, போதும். நடக்கவே முடியாத விஷயங்கள் பற்றி எதற்கு வெட்டிக் கற்பனை?

ஒருவரின் சாட்டையடி ஏற்படுத்திய தார்மீக அதிர்வுகள்

நீதி மன்ற உத்தரவுகளிலும் அண்ணாமலையின் சாட்டையடி சூட்சுமமாகத் தாக்கம் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த எண்ணம் நீதிபதிகளின் சட்டப் பொறுப்பை, நியாய உணர்வை, குறைத்து மதிப்பிடுவதல்ல. அண்ணாமலையின் செயலில் உள்ள தார்மீக அதிர்வுகளை மனசாட்சி உள்ளவர்கள் உள்வாங்காமல் இருக்க முடியாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். அத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் தார்மீக பர்சனாலிட்டியை அவர் சொல்லாலும் செயலாலும் ஏற்கனவே அடைந்து விட்டதால் இந்தப் பலன்கள் கிடைக்கின்றன.

Author: R Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version