
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், ஆளுனரின் வழி காட்டதலுக்கு ஏற்ப அரசு நடப்பதைப் போன்ற தோற்றத்திற்காக, ஆளுனர் உரை வாசிக்கப்படும் முறை உருவாக்கப்பட்டது. ஆனால், ஆளுனரின் எதிர்ப்பைப் பெற்று அரசு தொடர்வதே இப்போது மரபாகி விட்டது.
ஆளுனர் உரை என் பதற்கு பதில் அரசின் உரை என்று இருந்து விட்டால், அதில் என்ன எழுதியிருந்தாலும் அவருக்கு கவலை இருந்திருக்காது. அவர் பெயரிலான உரையில், அவர் விரும்பாதவற்றையும், எதிர்க்கின்றவற்றையும் தொகுத்து அவர் வாயாலேயே வாசிக்கச் செய்வதை எந்த கவர்னர்தான் விரும்புவார்? மனசாட்சி உள்ளவருக்கு அது தண்டனை போலாகி விடாதா?
அதிலும், சில நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வெட்கக்கேடான சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் மறையாத நிலையில், அச்சம்பவத்தை மறைத்து , எல்லாம் ஒழுங்காக நடைபெற்று வருகிறது என்பது போன்ற உரையை எப்படி அவர் வாசிக்க முடியும்? இன்றைய நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கூட அத்தகைய உரையை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்.
சென்ற ஆண்டாவது ஓரிரு வரிகளைத் திருத்திப் படித்தார். இந்த ஆண்டு மொத்தத்தையுமே மாற்ற வேண்டும் போலிருக்கிறதே என்று நினைத்திருப்பார் என்னவோ!
திராவிடம் என்பதே ஒரு வேஷம் என்று வெளியே பேசி வருபவர், சட்டசபையில் மட்டும் திராவிட மாடல் , திராவிட மாடல் என்று எத்தனை முறை போலியாகப் பேசுவார்?
அதனால்தான், இதை எப்படித் தவிர்ப்பது என்ற சிந்தனையில் இருந்த கவர்னர் , தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற மரபை பின்பற்றாததையே காரணமாகக் காட்டி , உரையை வாசிக்காமல் தப்பித்து விட்டார் (என்பது அடியேனின் யூகம்).
பெண்களை தலை குனிய வைக்கும் ஒரு சம்பவத்திற்கு முட்டு கொடுக்க விரும்பாத கவர்னர் , தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே வெளியேறியுள்ளார் . உண்மையாக நடக்க விரும்பும் ஒரு கவர்னர் இப்படித்தான் செயல்படுவார்.
தவறில்லை.
- துக்ளக் ‘சத்யா’
ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து?
இந்திய தேசத்தின் ஒரு பகுதி தமிழகம்! எல்லா மதத்தினரும், எல்லா மொழி பேசுபவர்களும் வாழும் மாநிலம் தமிழகம்.
ஒவ்வொரு மதத்தைப் பின்பற்று பவர்களும் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடுகிறார்கள். ஒரு மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையைப் போன்று பிற மதத்தினரையும் பின்பற்றும் படி கூற முடியாது!
அதுபோன்று, எல்லா மொழிகளையும் பேசும் மக்கள் வாழும் தமிழகத்தில், அரசு விழாக்களில் ஏன் ஒரு மொழியின் புகழைப் பாட வேண்டும்?
மனோன்மணியம் எழுதிய சுந்தரனார் அவர்கள், தமிழின் சிறப்பைப் பற்றி, தனது நூலில் எழுதி இருக்கிறார். இதைத் தமிழைப் படிப்பவர்களுக்கு படிக்கும் இடத்தில் சொல்லிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஏன் அவர் இப்படி எழுதி இருக்கிறார் என்பதை தமிழை நன்கு கற்பவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்ள அது ஏதுவாக இருக்கும்!
இந்தத் தமிழ்த் தாய் வாழ்த்தில், சுந்தரனார் அவர்கள் எழுதிய வரிகளில் சில நீக்கப் பட்டுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டும் இங்கு குறிப்பிடத் தக்கது! அவை ஏன் நீக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது!
தமிழ் மொழியின் சிறப்புக்களில் முதன்மை பெற்று நிற்பது அதில் நிறைந்து காணப்படும் தெய்வீகம்! இந்த தெய்வீகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை மாணவர்களுக்கு முறையாகக் கற்பிக்கப் படுகின்றனவா?
கணிசமாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டு மக்கள் வாழும் தமிழகத்தில், அரசு விழாக்களில் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும்? அவரவர் தாய் மொழி மீது அவரவருக்கு பற்றுதல் இருக்கும் அல்லவா?
இப்படிப் பாடுவதை அனைவரும் மனதார விரும்புவார்களா?
இது, அனைவரும் முறையாக விவாதித்து எடுத்த முடிவுதானா?
எல்லோருக்கும் பொதுவான தேசியகீதம் என்ற ஒன்று இருக்கும் போது, இந்தத் தேசிய கீதம் இந்தியா முழுவதும் மக்களால் ஏற்கப்பட்டு ஒலிக்கும் ஒன்றாக இருக்கும் போது, அரசு விழாவில் இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு என்ன கட்டாயம்?
உலகில் எங்கும், ஒரு மொழியைப் புகழ்ந்து பாடல் பாடி அரசு விழா எடுப்பதாகத் தெரியவில்லை!
எல்லா தரப்பு மக்களும் வாழும் மாநிலத்தில், தேசத்தின் ஒற்றுமை குறித்தப் பாடலை மட்டுமே பாடுவது நல்லது! அப்படி எனில் எல்லோர் மத்தியிலும் தேச ஒற்றுமை வளரும்! அதுதான் இன்று நம் நாட்டிற்கு மிக மிக முக்கியமான ஒன்று!
இதில், மக்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தெளிவாகப் பதிவிட வேண்டிய நேரம் இது!
தமிழக கவர்னர் அவர்கள், தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை தமிழக அரசுக்குச் சுட்டிக் காட்டியதில் நியாயம் இருக்கிறது!
இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு சேர்க்கிறது!
அவர் கவர்னர் என்ற முறையில் தனது கடமையைச் சரியாகச் செய்துள்ளார்!
- S.இரத்தின சுவாமி.